For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லா தரப்பும் ஜெயலலிதா அரசுக்கு எதிராக போராடிக்கொண்டுள்ளது: கருணாநிதி காட்டம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பல்வேறு அரசு துறை ஊழியர்களும், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல தரப்பினரும், ஜெயலலிதா அரசுக்கு எதிராக போராடிக் கொண்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் இந்த அ.தி.மு.க. அரசுக்கு எதிராக நடத்தும் போராட்டம், அரசின் பிடிவாதத்தாலும், அடாவடியான அலட்சியத்தாலும், அனுசரணை இல்லாத அணுகு முறையாலும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

மாநிலம் முழுவதுமுள்ள சுமார் 6 லட்சம் அரசு அலுவலர்கள் நேற்றையதினம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் ஏற்கனவே தேக்கமடைந்துள்ள நிர்வாகத்தில், அரசுப் பணிகள் எல்லாம் ஸ்தம்பித்துக் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

Gvt employees enter into the protest in Jayalalitha regime: Karunanidhi

போராடும் அரசு ஊழியர்களை அரசு கைது செய்து மாலையில் விடுவித்து வருகிறார்கள். தமிழக அரசின் கீழ் பத்து லட்சத்து 63 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அரசுத் துறையில் ஒரு லட்சத்து 79 ஆயிரம் பணி இடங்கள் காலியாக உள்ளன.

அரசு அலுவலர்கள் 20 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த நான்காண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆனால் இந்த நான்காண்டு காலத்தில் ஒரு முறை கூட தமிழக முதல் அமைச்சர் போராடும் அரசு அலுவலர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களுடைய குறைகளைப் பரிவுடன் கேட்டுத் தீர்வு காண முன்வரவில்லை.

பேரறிஞர் அண்ணா அவர்கள் முதன் முதலில் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் அவர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியே, அரசு அலுவலர்களையெல்லாம் அழைத்து அவர்கள் மத்தியில் பேசியது தான்! ஆனால் பேரறிஞர் அண்ணாவின் பெயரைத் தங்கள் கட்சிக்கு வைத்துக் கொண்டு ஆட்சி நடத்த வந்தவர்கள், அவருடைய வழிமுறையைச் சிறிதாவது பின்பற்றி, போராட்டம் நடத்தி வரும் அவர்களுடைய பிரதிநிதிகளை அழைத்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்கத் தயாராக இல்லை என்பது அடிப்படையிலேயே முரண்பாடு தானே?

இடைக்கால நிதி நிலை அறிக்கையிலாவது தங்களுக்கு விடிவு காலம் ஏற்படுவதற்கான வெளிச்சம் கொஞ்சமாவது வராதா என்று ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்த நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப் படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் நேற்று மறியல் செய்த போது, தாய்மார்கள் அரசுக்கு எதிராக "ஒப்பாரி" வைத்து அழும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அதனைப் பார்த்த பிறகும் அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு மனம் இளகவில்லை!

இவர்களின் போராட்டம் ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் கடந்த நான்காண்டுகளாக 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அமைச்சர்கள் சிலர் ஜாக்டோவில் உள்ள அனைத்துச் சங்கங்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு, முதல்வரிடம் தகவல் தெரிவிப்பதாகக் கூறி சென்றார்களே தவிர, எந்தப் பயனும் ஏற்படவும் இல்லை.

இடைக்கால நிதி நிலை அறிக்கையிலும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எவ்வித அடையாளமும் இல்லை. அவர்களின் அவசரப் பொதுக் குழு இன்று கூடுகிறது.

மேலும் வணிக வரித் துறை அலுவலர்கள், மருத்துவர்கள், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், நீதித் துறையிலே பணியாற்றுவோர், செவிலியர் என அனைத்துத் தரப்பினரும் இந்த ஆட்சியினரை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆனால் தமிழக அரசோ, முதலமைச்சர் ஜெயலலிதாவோ இவர்கள் எல்லாம் போராட்டம் நடத்தினால் எங்களுக்கு என்ன என்ற பாணியில் ஏனோதானோ என நடந்து வருகிறார்கள்.

அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்பது உட்பட ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த மாற்றுத் திறனாளிகளை தமிழக அரசின் காவல் துறையினர் எந்த அளவுக்கு மோசமாக நடத்தினார்கள் என்பதை "தினகரன்" நாளேடு புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளது.

மூன்று சக்கர வாகனத்தில் வந்த மாற்றுத் திறனாளி ஒருவரின் வண்டியைப் பிடுங்கி சாலையோரம் வீசிவிட்டு, அவரை போலீசார் தரதரவென்று இழுத்துச் செல்லும் படமும், மாற்றுத் திறனாளிகளை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று காவல் துறையினர் போடுகின்ற படமும் பதற்றத்தை ஏற்படுத்தும் பரிதாபத்திற்குரிய காட்சிகளாகும்.

கைது செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைக்கப்பட்டடுள்ளார்கள். அப்போது வேலூரைச் சேர்ந்த குப்புசாமி என்ற மாற்றுத் திறனாளிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் என்ற துயரச் செய்தி இன்று காலையில் வந்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் சங்கப் பிரதிநிதிகளை உரிய நேரத்தில் அரசு சார்பில் அழைத்துப் பேசியிருந்தால் குப்புசாமி என்ற அந்த மாற்றுத் திறனாளி மறைந்திருக்க மாட்டார். மறைந்த அந்த மாற்றுத் திறனாளி குப்புசாமியின் மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் தி.மு. கழக அறக்கட்டளை சார்பில் உதவி நிதியாக அளிக்கப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Karunanidhi says every department employees enter into the protest in Jayalalitha regime.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X