• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடிமாற்று அறுவை சிகிச்சை செய்த பயிற்சி மருத்துவர் மரணம்: பிரேத பரிசோதனைக்கு உடல் தோண்டி எடுப்பு

By Mayura Akilan
|

சென்னை: முடிமாற்று அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பயிற்சி மருத்துவர் சந்தோஷ்குமாரின் சடலம் திருச்சியில் வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு உடல் உறுப்புகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

திருச்சி சிந்தாமணி அந்தோனியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி ஜோஸ்பின். இவர்கள் ஆரணியில் வசிக்கின்றனர். இவர்களது மகன் சந்தோஷ்குமார், சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்துவிட்டு, பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.

Hair transplant death: Medico's body exhumed, autopsy held

மே 15ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏ.ஆர்.ஹெச்.டி என்ற தனியார் மையத்தில் சந்தோஷ்குமாரின் தலையில் செயற்கை முடிகள் பொருத்தப்பட்டன. இதன் பின்னர் சந்தோஷ்குமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கால்கள் செயலிழந்ததால் அவரை வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 17ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை திருச்சி மலைக் கோட்டை பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

இந்நிலையில், சந்தோஷ் பயிற்சி மருத்துவர் என்பதால், அவர் இறந்த விவரம் மருத்துவக் கல்வி இயக்ககம் வழியாக சுகாதாரத் துறைக்கு சென்றது. மருத்துவச் சேவை பணிகள் இயக்குநரகம் அளித்த புகாரில், ஜூன் 2ம் தேதி மாலை ஏ.ஆர்.ஹெச்.டி. மையத்துக்கு மாநகராட்சி நிர்வாகமும் சீல் வைத்தது. இதுகுறித்த அறிவிப்பும் அந்த மையத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

முடி மாற்று சிகிச்சையின்போது, அதிக அளவில் மயக்க மருந்து அளித்ததுதான், சந்தோஷ்குமார் இறப்புக்கு காரணம் என தெரிய வந்தது. இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர், கடந்த 4ம் தேதி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக திருச்சியில் அடக்கம் செய்யப்பட்ட சந்தோஷ் குமாரின் உடல் நேற்று மாலை தோண்டி எடுக்கப்பட்டது. வட்டாட்சியர் சிவசங்கரன், விஏஓ நரசிம்மன், நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி மற்றும் பெற்றோர் முன்னிலையில், திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் சரவணகுமார் தலைமையிலான குழுவினர், பிரேதப் பரிசோதனை செய்தனர். உடலின் சில பாகங்களை சேகரித்து, ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இந்த ஆய்வின் முடிவு இன்னும் ஒருவாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதி கிடைக்க வேண்டும்

சந்தோஷ்குமாரின் மரணம், அவரது பெற்றோர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. மகனின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும். இதுகுறித்து சந்தோஷ்குமாரின் உறவினர்கள் கூறும்போது, 199.7 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்று சந்தோஷ்குமார் எம்பிபிஎஸ் சேர்ந்தார். மருத்துவப் படிப்பிலும் தங்கப் பதக்கம் பெற்றார்.

சுமார் ரூ.1.20 லட்சத்துக்கு செய்யப்படும் முடி மாற்று சிகிச்சையை, 50 சதவீத தள்ளுபடியில் செய்வதாக இணையதளத்தில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, ரூ.62 ஆயிரம் செலுத்தி 2,500 முடிகளை சிகிச்சை மூலம் பொருத்தியுள்ளார். சிகிச்சையின்போது அதிக அளவு மயக்க மருந்து செலுத்திய மருத்துவர்களின் தவறே சந்தோஷ் குமார் இறப்புக்கு காரணம். இதுபோன்ற போலி மையங்களின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

சந்தோஷ்குமாரின் உயிரிழப்புக்கு காரணமான ஏ.ஆர்.ஹெச்.டி. மையம், மஹாராஷ்டிர மாநிலம், புணேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் 11க்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கியில் கடன் பெற்றுத்தந்து, சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளதாக அந்த நிறுவனம் விளம்பரம் செய்துள்ளதாகவும், எனவே இங்கு ஏராளமானோர் சிகிச்சைக்கு வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில், சென்னையில் மட்டும் கிளை உள்ள நிலையில், கோவையில் விரைவில் கிளை தொடங்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கிளைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சந்தோஷ்குமார் உறவினர்களின் கோரிக்கையாகும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
The body of a medicine student who died due to complications after hair transplant surgery was exhumed and the post-mortem was performed in Trichy on Friday. The post-mortem report is expected to be submitted in a week's time. A team of doctors from KAP Viswanatham government medical college in Trichy performed the autopsy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X