For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காற்றில் உந்தன் கீதம்.. மயக்கும் கு(ர)யில் எஸ்.ஜானகியின் பிறந்த நாள் இன்று!

பாடகி எஸ்.ஜானகியின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

-வந்தனா ரவீந்திரதாஸ்

சென்னை: பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் பிறந்த நாள் இன்று.

மொழி எதுவாயிருந்தால் என்ன...
இனிமையாக உள்ளது
குயிலின் குரல் - இதை எங்கோ நான் படித்த ஞாபகம்.
ஆனால் இந்த வரிகள் எஸ்.ஜானகிக்கும் 100 சதவீதம் பொருந்தும்.

60 வருடங்கள், 17 மொழிகள் 48 ஆயிரம் பாடல்கள், 4 தேசிய விருதுகள். 32 மாநில விருதுகள் என நீளும் பட்டியலை முன்வைத்து விட்டு அமைதியாக சினிமா உலகைவிட்டு ஒதுங்கியுள்ள எஸ்.ஜானகிக்கு இன்று 80-வது பிறந்த நாள். இந்நாளில் கண்களை அகல விரிய செய்யும் அவரது சாதனைகளை நினைவுகூர்வதே கடைகோடி ரசிகனின் விருப்பமாக இருக்க முடியும் என்பதால், அவரது இசைகடலின் சில துளிகள் இங்கே....

1957-ம் ஆண்டு வெளிவந்த, 'விதியின் விளையாட்டு' என்ற படத்தில் 'பெண் என் ஆசை பாழானது ஏனோ' என்ற பாடலை முதன்முதலாக பாட, ஏனோ அந்த வெளிவரவே இல்லை. தொடர்ந்து தெலுங்கு, தமிழ்மொழிகளில் ஒரு சில பாடல்களை பாட ஆரம்பித்தார்.

கொஞ்சும் சலங்கையின் திருப்புமுனை

கொஞ்சும் சலங்கையின் திருப்புமுனை

1962-ம் ஆண்டு 'கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தில் 'சிங்கார வேலனே தேவா' என்ற பாடல். இசை எஸ்.எம்.சுப்பையாநாயுடு. மிகவும் கடினமான பாடலும்கூட. தொழில்நுட்பம் அவ்வளவாக இல்லாத காலகட்டம் வேறு. எந்த பாடலானாலும் அநாயாசமாக பாடிசெல்லும் பி.சுசிலா, லீலா போன்றோரால் அப்பாடலை பாடமுடியவில்லை. யாரை பாடவைப்பது என்ற குழப்பம். பிரபலமடையாத ஒன்றிரண்டு பாடல்களை பாடிக்கொண்டிருந்த ஜானகியை அழைத்து வருகிறார்கள். பாடமுடியுமா என்று கேட்கிறார்கள். முடியும் என்கிறார் நம்பிக்கையோடு. கத்துக்குட்டி என்னத்த பாடபோகிறது என்று சுற்றியிருந்தோர் மனதில் எண்ணஓட்டம். அனைத்தையும் பொசுக்கிவிட்டு, அந்த இளம் வயதிலேயே ஒரே டேக்கில் பாடி அசத்திய ஜானகியை இன்றுவரை ஏராளமான இசை ஜாம்பவான்களே பிரமித்து பார்த்து வியக்கின்றனர். இந்த பாடலுக்கு பின் ஜானகியின் பெயர் தென்னிந்தியாவில் பரவ தொடங்கியது.

புயலென நுழைந்த கூட்டணி

புயலென நுழைந்த கூட்டணி

70-களின் நடுவே இசையுலகில் புயலென நுழைந்தது ஒரு புது கூட்டணி. அதிலும் வரலாற்றின் அதிசய நிகழ்வான இளையராஜாவின் வரவுக்குபின் இசையின் தடம் புதிய பாதையில் பயணிக்க தொடங்கியது. 76-ல் வெளிவந்த அன்னக்கிளி திரைப்படத்தில் மச்சான பாத்தீங்களா என்ற ஜானகியின் குரல் திரையின் சிம்மாசனத்தில் தூக்கி உட்கார வைத்தது. தனது பாடல்களில் ஜானகியின் முழு திறமையையும் பயன்படுத்தியதில் பெரும்பங்கு இளைஞானிக்குத்தான் போய் சேரும். ஜானகிக்கு அவரளித்த பாடல்களில்தான் என்னே ஒரு வெரைட்டி, என்னே ஒரு மாடுலெஷன்கள்... என்னே ஒரு வாய்ஸ் ரேஞ்ச்... பாட்டி, அம்மா, மங்கை, குழந்தை... என ஒரு உறவையும் விட்டுவைக்கவில்லை அந்த ஏகாந்த குரல். ஏன்? ஆண் குரலைகூட விட்டுவைக்கவில்லை.

பின்னணியில் முன்னனியானார்

பின்னணியில் முன்னனியானார்

70-பிற்பகுதியிலிருந்து 90-களின் இறுதிவரை ரத்தநாளங்களில் கலந்து போனார் எஸ்.ஜானகி. பாடலில் இளையராஜா என்ன உணர்வினை எதிர்பார்க்கிறாரோ அதைவிட அதிகமாகவே அள்ளி தெளித்துவிடுவார். இளையராஜாவின் அனைத்து இசைமுயற்சிகளுக்கும் ஜானகி பக்க பலமாக இருந்தார் என்றே சொல்லவேண்டும். அதனால்தான் பின்னணி பாடகிகளில் முன்னணி பாடகி என்ற இடத்திலிருந்த பி.சுசிலாவை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டார். ஜானகி பாடிய தாலாட்டு, சோகம், விரகதாபம், காதல், வீரம், ஏக்கம், ஊடல், குத்து என ஒவ்வொன்றிலும் ராகத்தின்
செவ்வியல்தன்மை தென்பட்டது. நாம் எங்கு பயணப்பட்டாலும், எந்த நிலையிலிருந்தாலும் அந்த இனிய குரல் காற்றிலே கலந்து செவிகளினூடே நுழைந்து நெஞ்சை தேனாய் நனைத்துவிடும். 80-களில் இலங்கை வானொலி பிரியர்களை அங்குமிங்கும் நகரவிடாது செய்தவர் ஜானகி.

நாடி நரம்புகளில் கலந்த குரல்

நாடி நரம்புகளில் கலந்த குரல்

டிஎம்எஸ்-பி.சுசிலா ஜோடிக் குரலின் வெற்றிக்கு பின்னர், பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது எஸ்.பி.பாலசுப்பிரமணியம்-ஜானகி ஜோடிக் குரல்கள். இதேபோல பி.பி.ஸ்ரீநிவாஸ், இளையராஜாவோடு சேர்ந்து பாடிய பாடல்கள் நம் நாடி நரம்புகளில் கலந்துவிட்டவை. குறிப்பாக இளையராஜாவுடன் சேர்ந்து பாடிய சிறு பொன்மணி அசையும், மெட்டி ஒலி காற்றோடு, நான் தேடும் செவ்வந்தி பூவிது, அடி ஆத்தாடி, தென்றல் வந்து தீண்டும்போது, பூ மாலையே தோள் சேரவா, சங்கத்தில் பாடாத கவிதை போன்ற கீதங்கள் எல்லாமே நல்முத்துச்சரங்கள்.

சிணுங்கலும்,விசும்பலும்

சிணுங்கலும்,விசும்பலும்

செந்தூரப்பூவே பாடலை கேட்டால் மயிலும், ஆயிரம் தாமரை மொட்டுக்களே கேட்டால் மேரியும், பொத்தி வச்ச மல்லிகை மொட்டு முத்துபேச்சியும், அடி ஆத்தாடி பாடலை கேட்டால் ஜெனிபரையும் கண்முன்னே வந்து நிறுத்தினார் ஜானகி. இப்படி பாரதிராஜா தன்னுடைய கதாநாயகிகளுக்கு ஜானகியின் குரலை பாய்ச்சி முதல் மரியாதை கொடுத்து அவரின் புகழை ஓங்கி ஒலிக்க செய்தார். அந்தந்த கதாநாயகிகளே அந்த பாடல்களை பாடுவதுபோல ஒரு ஜால வண்ணம் சிணுங்கலும்-விசும்பலுமாய் வந்து போயின.

கவிஞர் பொன்னடியான் புகழாரம்

கவிஞர் பொன்னடியான் புகழாரம்

என் ராசாவின் மனசிலே படத்தில் "குயில்பாட்டு ஓ வந்ததென்ன இளமானே" போடா போடா புண்ணாக்கு, ராஜாதிராஜாவில் 'என்கிட்ட மோதாதே' போன்ற பிரபல பாடல்களை எழுதியவர் பொன்னடியான். அவர் ஒன்இந்தியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ஜானகி பற்றி இவ்வாறு கூறுகிறார். "அவங்கள பற்றி சொல்ல வார்த்தையே இல்லையேம்மா... ஜானகியால் இந்த பாடலை பாட முடியாமல் போய்விட்டது என்ற சம்பவமே இதுவரை இசைவரலாற்றில் நடந்தது கிடையாது... "ஒருவர் வாழும் ஆலயம்" படத்தில் நான் எழுதிய "உயிரே உயிரே உருகாதே" பாடலாகட்டும், சிங்காரவேலனில் "தூது செல்வதாரடி" போன்ற பாடல்களையெல்லாம் ஜானகி தவிர வேற யாரெனும் உயிரூட்டியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்" என்றார்.

அட்சர சுத்த உச்சரிப்பு

அட்சர சுத்த உச்சரிப்பு

17 மொழிகளில் வெவ்வேறு குரல் சார்ந்த பாடல்களை அட்சர சுத்தமாகப் பாட ஜானகியால் மட்டுமே முடியும். இவரது பாடல் உச்சரிப்புகளால், ஒவ்வொரு மாநிலத்தவரும் ஜானகி எங்களுக்கானவர் என்று தூக்கிவைத்து உரிமையை கொண்டாடினர். ருசி கண்ட பூனை படத்தில் "கண்ணா நீ எங்கே வா வா நீ எங்கே". என்று மழலைக் குரலாக மாறிப் பாடிய பாடலை அவரே எழுதியது பலரும் அறியாத உண்மை. உதிரிப் பூக்கள் படத்தில் ‘போடா போடா பொக்க; என்ற பாடலை பாட்டி குரலில் வசனமும் பேசி 1.26 நிமிடத்தில் அசத்தி இருப்பார். தூரத்தில் நான் கண்ட உன் முகம் பாடலில் என்ன அழகும் சிரத்தையும் தெரியுமோ, அதேதான் நேத்து ராத்திரி யம்மாவிலும் தெரியும்.

கமலஹாசன் புகழாரம்

கமலஹாசன் புகழாரம்

உச்சஸ்தாயி-கீழ்ஸ்தாயி... எதுவாயிருந்தால் எனக்கென்ன, என்று அதனை தன் முகபாவனையில் காட்டிக் கொள்ளாமல், உதட்டை தவிர உடலில் வேறெந்த பாகமும் அசையாமல் பாடுவது இவரது சிறப்பு. இதனை கமலஹாசன் ஒருமுறை நகைச்சுவையாக கூறினாராம், "இவர் என்னமோ பின்னணிப் பாடகிதான். ஆனால் இவர் பாடும்போது பார்த்தால் இவருக்கே யாரோ பின்னணி பாடுவது போல தோன்றும். அந்த அளவிற்கு உதடு அசைகிறதா இல்லையா என்பது கூட தெரியாது" என்றாராம். கமலஹாசனுடன் இணைந்து பாடிய நினைவோ ஒரு பறவை, சுந்தரி நீயும், கண்மணி அன்போட போன்ற பாடல்கள், காற்றின் வழியே நீண்ட காலம் நம் செவிகளில் ஒலித்து கொண்டே இருக்கும்.

பழுத்த கிழவியின் கோபம்

பழுத்த கிழவியின் கோபம்

"இந்தியக் கலைஞர்களே விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தென்னிந்திய கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது. இதனால் எனக்குக் கொடுக்கப்பட பத்மபூஷன் விருதை வாங்க மாட்டேன்" என்று 2013ம் ஆண்டு அறிவித்த ஜானகியின் துணிச்சல் எத்தனை பேருக்கு வரும் என தெரியவில்லை. காலங்கடந்து வழங்கும் விருதினை கொடுக்காமலே இருந்திருக்கலாம் என்ற ஜானகியின் வருத்தத்தினை உணர்வுள்ளவர்களால் நிச்சயம் புரிந்துகொள்ள முடியும். தென்னிந்திய கலைஞர்களுக்கு இழைக்கப்படும் மறைமுக அநீதி மற்றும் அந்நியப்படுத்துதலை கண்டித்து, தமது விருதினை தூக்கியடித்த இந்த 80 வயது பழுத்த இசைகுயிலின் கோபம் நியாயத்தின் வெளிப்பாடே.

ஓய்வு அறிவித்தார் ஜானகி

ஓய்வு அறிவித்தார் ஜானகி

''திறமை இருக்கிறது, வாய்ப்பு வருகிறது என்பதற்காக என நாம் மட்டும் பாடி புகழையும் பணத்தையும் சம்பாதிச்சுக்கிட்டு இருப்பது நியாயமில்லை. அதனால், வருங்கால சந்ததியினருக்கு வழிவிட வேண்டும். அதன்படி மற்றவர்கள் யாரும் என்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறை சொல்லும்முன், என் வருங்கால தலைமுறையினரும் புகழ்பெற வேண்டும் என நான் அமைதியாக இசைத் துறையில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்கிறேன்'' என கடந்த ஆண்டு ஜானகி பெருந்தன்மையுடன் அறிவித்தார். பணத்தையும் புகழையும் இழக்க மனமில்லாமல் இன்றும் திரையுலகில் ரசிகர்களை கலங்கடித்து வரும் சில "முன்னணி"களுக்கு ஜானகியின் இந்த அறிவிப்பு ஒரு சவுக்கடி. ஜானகியின் குரலை இனி கேட்க முடியவில்லை என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், அவர் பாடிய பாடல்களை கேட்டு முடிக்கவே நமக்கு ஆயுசு பத்தாதே என நினைக்கும்போது மனசு சிலிர்க்கிறது.

இனிமை வற்றாத குரல்

இனிமை வற்றாத குரல்

எஸ்.எம்.எஸ் தொடங்கி, ரகுமான், அனிருத் வரை நெடிய பயணத்தை இனிமையாக முடித்து கொடுத்துள்ளார் ஜானகி. அவரது பாடல்கள் அனைத்தும் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு. தென்றலை கவுரப்படுத்தகூடிய குரல் அது, இனிமை வற்றாத குரல் அது. இயற்கையை வணங்கக்கூடிய குரல் அது. எண்ணற்ற ஆண்டுகள் கடந்தாலும் பழுதாகாத, கரைந்துபோகாத குரல் அது. உணர்ச்சிக்குரலில் பாவங்களை வெடிக்கும் திறன் ஜானகிக்கு மட்டுமே சொந்தம். அவர் ஆரோக்கியத்துடன் நீடூடி வாழ வேண்டும் என்பதே அவரது இசை அடிமைகள் ஒவ்வொருவரின் நெஞ்சார்ந்த விருப்பம். காற்றுக்கு அழிவில்லை... மொழிக்கும், இசைக்கும் அழிவில்லை... ஜானகியின் குரலுக்கும்....

English summary
The 80th birthday of today's Playback singer S. Janaki. She first sang in the 1957 film 'Vidhiyin Vilayaatu. He later became famous by Singer Velane song, In the late '70s, Ilayaraja combined with various hit songs.Janaki has sung in 17 languages 48 thousand songs. She got 4 national awards, 32 State Awards also
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X