For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அந்த அம்பிகாபதி.. அப்புறம் அமராவதி.. கூடவே 2, 3 கிரீட்டிங் கார்டுகள்.. ஹேப்பி காதலர் தினம்!

Google Oneindia Tamil News

அந்த அம்பிகாபதி.. அப்புறம் அமராவதி.. கூடவே 2, 3 கிரீட்டிங் கார்டுகள்.. ஹேப்பி காதலர் தினம்!

சென்னை: ஆதாம், ஏவாள் காலம் முதல் இன்றைய ஆண்ட்ராய்டு காலம் வரை மனிதர்களுக்கு அலுக்காத, சலிக்காத ஒரு விஷயம் உண்டு என்றால்... அது நிச்சயம் காதல்தான். 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த' காதலுக்கு வசப்படாத உயிரினங்களே இந்த உலகத்தில் இல்லை எனலாம்.

அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ- ஜூலியட், லைலா- மஜ்னு என காலத்தை வென்ற காதலர்கள் வரிசையில் இடம்பிடிக்க எல்லோருமே போட்டி போடுவதுண்டு. காதல் என்ற பெருங்கடலில் மூழ்கிய எல்லாருக்கும் வெற்றி என்கிற முத்து கிடைப்பதில்லை. ஆனாலும் மனம் தளராமல் தம் கட்டி மீண்டும், மீண்டும் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள்.

happy valentines day lovers

எங்கள் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அவர். புத்திசாலிதனம் மிக்கவர். அதோடு தெனாவெட்டும் கொஞ்சம் ஜாஸ்தி. பார்க்கிற நேரம் எல்லாம் பைக்கில் எங்கோ தலைதெறிக்க போய்க் கொண்டிருப்பார். நேரத்திற்கு நேரம் விதவிதமான உடைகளில் அசத்துவார். ஒருநாள் அவரிடம் ''தம்பி...என்ன செய்துகிட்டிருக்கிற!'' என தெரியாத்தனமாகக் கேட்டுவிட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா! '' லவ் பண்றேன் சார்.'' அந்த

மாடர்ன் இளைஞர் அத்தோடு விட்டாரா என்றால் அதுதான் இல்லை.

''லவ் பண்றதை, ஏதோ வேலைவெட்டி இல்லாத பசங்க செய்யிற வேலைண்ணு சாதாரணமா நினைக்காதீங்க. லவ்வ புரபோஸ் பண்றதில் இருந்து ஐ டூ லவ் யூண்ணு எதிர் தரப்பு சொல்ற வரைக்கும் ஏகப்பட்ட கட்டங்கள், கஷ்டங்கள் இருக்குது. புல் டெடிகேஷனோட இருந்தால்தான் லவ் சக்ஸஸ் ஆகும். இல்லாவிட்டால் சொதப்பல்தான். நான் இப்ப ஆரம்பக் கட்டத்தில் லவ்வ வெளிப்படுத்தும் ஸ்டேஜில் இருக்கிறேன். என்னோட உட்பியை இம்ப்ரஸ் பண்ண விதவிதமா யோசிக்கிறேன். எனக்குள் இவ்வளவு கற்பனைத் திறன் இருக்குதாண்ணு எனக்கே ஆச்சரியமா இருக்குது'' என பெரிய லெக்சர் கொடுத்தார் அந்த இளைஞர்.

உண்மைதான்! காதலை வெளிப்படுத்துவது ஒரு தனிக்கலை. அதன் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டு நேர்த்தியாகக் காய் நகர்த்துபவர்களுக்கு மட்டுமே காதலில் வெற்றி சாத்தியமாகிறது.

அறிவியலும், தகவல் தொழில்நுட்பமும் அதிக வளர்ச்சி பெறாத 70களில் காதலை வெளிப்படுத்துவதில் கண்கள்தான் முக்கிய பங்கு வகித்தன. 'அண்ணலும் நோக்க, அவளும் நோக்க' என்பார்களே..கிட்டத்தட்ட அதே கதைதான். இப்போது போல பெண்கள் வீட்டை விட்டு அதிகம் வெளியில் வராத காலம் அது. எப்போதாவது அபூர்வமாகத்தான், பெரும்பாலும் கோயில்களுக்குச் செல்வதற்காகவே இளம்பெண்கள் வாசலைத் தாண்டுவார்கள்.

happy valentines day lovers

உள்ளூர் உளவுப் பிரிவினர் மூலம் தனது காதலி படி தாண்டியதை அறிந்த அந்தக் கால இளசுகள், ஆன்மீகச் செம்மல்கள் அவதாரம் எடுத்து கோயிலே கதி என கிடப்பார்கள். கோயிலுக்குள் செல்லும்போதும், அங்கிருந்து வெளியேறும்போதும் பக்கவாட்டில் தலையை லேசாகத் திருப்பி மெல்லிய புன்னகையுடன் ஒரு பார்வையை வீச, ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்திய பௌலர் மாதிரி சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பான் காதலன். இதில் ஒரு சிக்கலும் உண்டு. சில நேரங்களில் குறிப்பிட்ட பெண் பொத்தாம் பொதுவாகப் பார்வையை சிந்த, அது யாரை நோக்கி என தெரியாமல் ஆளாளுக்கு அடித்துக் கொண்டதும் உண்டு.

70களில் காதலுக்குக் கைகொடுத்த விஷயங்களில் சைக்கிளுக்கு முக்கிய பங்கு உண்டு. காதலி குடியிருக்கும் பகுதியில் சைக்கிளில் ரவுண்டு வந்ததும், பெல் அடித்து சிக்னல் கொடுத்ததும் அந்தக் கால காதலர்களுக்கு இப்போதும் பசுமையாக நினைவிலிருக்கும்.

சைக்கிளைப் போலவே அந்தக் காலத்தில் ரேடியோவும் இளசுகளின் 'ஹனி கேக்'காக இருந்தது. அதிலும் ரேடியோக்களில் ஒலிபரப்பாகும் 'நேயர் விருப்பம்' ரொம்பவே பிரசித்தம். ஒரு போஸ்ட் கார்டில் தனது பெயரையும், காதலி பெயரையும் எழுதி அனுப்ப, அது ரேடியோவில் ஒலிபரப்பாக, சம்மந்தப்பட்டவர்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை.

80களில் ஏற்பட்ட காலமாற்றம், காதல் விவகாரங்களிலும் பிரதிபலித்தது. சைக்கிளுக்கு பதிலாக மொபெட்டுகளில் காதலி குடியிருப்பை, காதலன்கள் வலம் வந்தனர். கோயிலுக்குப் பதிலாக பள்ளி, கல்லூரிகள் காதலர்களின் மீட்டிங் பாயிண்டுகளாக மாறின. காதலியை நோக்கி காகித அம்புவிடும் பழக்கம் இந்தக் காலக்கட்டத்தில்தான் உருவானதாக காதல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காகிதத்தில் ஆர்ட்டின் முத்திரையுடன் தனது பெயரையும், காதலி பெயரையும் எழுதி, சற்றும் பிசகாமல் அதை காதலியை நோக்கி ஏவிவிட்டதை, காதலர்கள் பலரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

ஏவிவிட்ட அம்பு சில நேரங்களில் வேறொரு பெண் மீதோ, எக்குத்தப்பாக டீச்சர் மீதோ பட்டு வம்பு ஏற்பட்டதும் உண்டு. இந்த காலக்கட்டத்தில் வெளியான திரைப்படங்கள் பெரும்பாலும் காதலையே மையமாகக் கொண்டிருந்தன. இதனால் தியேட்டர்கள், காதல் பறவைகளின் வேடந்தாங்கலாக மாறிய அதிசயமும் நிகழ்ந்தது.

90 களில் காதல் விவகாரங்களில் ரொம்பவே மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. காதலர் தின கொண்டாட்டங்கள் உள்ளிட்ட விஷயங்களை மீடியாக்கள் ஊதிவிட, எங்கும் காதல் நெருப்புப் பற்றிக் கொண்டது. காதலைச் சொல்வதில் கிரீட்டிங்ஸ் கார்டு எனப்படும் வாழ்த்து அட்டைகள் முக்கிய இடம் பிடித்தன. அதிலும் காதலர் தினம் போன்ற நாட்களில் கிரீட்டிங்ஸ் கார்டுகளை டெலிவரி பண்ண முடியாமல் தபால்துறை திணறும் அளவிற்கு காதல் பொங்கி வழிந்ததுண்டு.

happy valentines day lovers

கிரீட்டிங்ஸ் கார்டுகளிலுள்ள கவிதைகளில் ஜீவன் இல்லாத நிலையில் காதலியைக் கவருவதற்காக ஒரே இரவில் கவிஞர்கள் ஆன இளைஞர்களும் உண்டு. கிரீட்டிங் கார்டுகளுக்கு அடுத்தபடியாக இளசுகளிடையே காதல் நறுமணம் கமழச் செய்ததில் ரோஜாப் பூக்கள் முக்கிய இடம் பிடித்தன. எதற்கும் வசப்படாத காதலியை ஒற்றை ரோஜாவால் வீழ்த்திய காதலன்கள் பலர் உண்டு.

எல்லாமே மாறிப்போன மில்லினியம் தொடக்கத்தில் காதல் செயல்பாடுகளும் தலைகீழாக மாறிவிட்டன. காதலைச் சொல்ல ஆண்களே தயங்கிய காலம் போய், பெண்கள் தைரியமாக புரபோஸ் செய்ய முன்வந்தனர். ''நாலு தடவை புரபோஸ் பண்ணிட்டேன். அசைய மாட்டேன்கிறான். சரியான தத்தி'' என பெண்கள் கிண்டலடிக்கும் அளவிற்கு ஆண்களில் ஒரு சிலர் காதல் விவகாரங்களில் கொஞ்சம் வீக் ஆக இருக்கின்றனர்.

கணினி, கையடக்க தொலைபேசி என தகவல் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்றுள்ள இன்றைய காலக்கட்டத்தை காதலர்களின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். கொஞ்சமும் மெனக்கெடாமல், வெளியில் எங்கும் செல்லாமல் உட்கார்ந்த இடத்திலிருந்தே காதலை வெளிப்படுத்த இப்போது ஆயிரத்தெட்டு வழிகள் இருக்கின்றன.

happy valentines day lovers

வாட்ஸ் அப்பில் கொஞ்சம் பூக்கள், பொருத்தமான எமோஜியைத் தட்டிவிட்டே காதலை வளர்த்துக்கொள்ள இப்போது வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இன்னும் வெளிப்படையாக சொல்வதானால்...இன்றைய காதல் உலகத்தின் மூச்சுக்காற்றே செல்போன்கள்தான்!

காலை, மாலை நேரங்களில் சாலைகளில் செல்லும் இளசுகளைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். கிட்டத்தட்ட 90% மேற்பட்டவர்கள் காதில் செல்போனை வைத்தபடி பேசிக்கொண்டு செல்வதைப் பார்க்க முடியும். இவற்றில் பெரும்பாலும் காதல் பேச்சுக்கள்தான் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

திரில் வருவோர், போவோர் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் தங்கள் மனம் கவர்ந்தவர்களுடன் இவர்கள் நடத்தும் உரையாடல்களின் தன்மை, சொற்பிரயோகங்கள் மாறியிருக்கலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் அடிப்படை... அதே அம்பிகாபதி- அமராவதி காலத்து காதல்தான். காதல்

நிரந்தரமானது; எந்த நிலையிலும் அதற்கு மரணமில்லை.

வாழவைக்கும் காதலுக்கு ஜே

வாலிபத்தின் பாடலுக்கும் ஜே

தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே

அம்பு விட்ட காமனுக்கும் ஜே!

காலமெல்லாம் காதல் வாழ்க.. !

- கௌதம்

English summary
Loves all over the world celebrate valentine's day today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X