For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரானைட் கொள்ளை நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பாடு? மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதியிடம் நீதிபதிகள் விசாரணை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: கிரானைட் கொள்ளையில் தொடர்புடைய பி.ஆர்.பி. நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் உத்தரவின் பேரில், இன்று மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதியிடம் , இரண்டு நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிரானைட் முறைகேடு வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமியை விடுவித்து நீதிபதி மகேந்திர பூபதி உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இவர் மீது விசாரணை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கீழவளவு, கீழையூர் பகுதிகளில் பட்டா நிலங்களில் பிஆர்பி கிரானைட்ஸ் பங்குதாரர் பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ சிவராமன் சகோதரர் சகாதேவன் ஆகியோர் பதுக்கிய கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா 2013ம் ஆண்டு இரு வழக்குகளை தாக்கல் செய்தார்.

HC judges grill Melur magistrate Mahendra Bhoopathi

அந்த வழக்குகளில் இரண்டு வழக்குகளை விசாரித்த மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி அதிர்ச்சியளிக்கும் உத்தரவை பிறப்பித்தார். அவர் தனது உத்தரவில், கிரானைட் குவாரி உரிமம் பெற்றவர்கள் கிரானைட் கற்களை குவாரிக்கு வெளியே பட்டா நிலங்களில் அனுமதியின்றி வைத்திருந்தால், மாவட்ட ஆட்சியர் ரூ.25 ஆயிரம் அபராதம் மட்டும் விதிக்கலாம்.

உரிமம் பெறாதவர்கள் கிரானைட் கற்களை வேறு இடத்துக்கு எடுத்துச் சென்றால் ஓராண்டு சிறை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க முடியும். இந்த வழக்கை மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் இந்த வழக்கை தாக்கல் செய்தபோது மாவட்ட ஆட்சியராக இல்லை.

அப்படியுள்ள நிலையில் ஆட்சியர் என்ற முறையில் இந்த வழக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தை அவர் மோசடி செய்துள்ளார். அதோடு மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் அவருக்கு பல்வேறு பணிகள் இருப்பதாக பொய்யான காரணங்களை கூறி அவர் ஆஜராகாமல் இருக்க அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா ஆகியோர் உத்தரவு பெற்றுள்ளனர். மேற்கண்ட இரு காரணங்களால் இவ்விரு வழக்குகளிலும் இருந்தும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.

மாவட்ட ஆட்சியராக இல்லாமல் ஆட்சியர் என்ற முறையில் போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றிய ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா, அவருக்கு உடந்தையாக இருந்த அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா ஆகியோர் இபிகோ 181, 182, 193, 199 பிரிவுகளின் கீழ் குற்றம் புரிந்துள்ளனர். இதனால் இவர்கள் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 197 (1பி) பிரிவின் படி அரசின் முன் அனுமதி பெற்று குற்றவழக்கு தொடர நீதிமன்ற தலைமை எழுத்தருக்கு உத்தரவிடப்படுகிறது என நீதித்துறை நடுவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பி.ஆர். பழனிச்சாமி விடுதலை செய்யப்பட்டது அதிர்ச்சியலைகளை உருவாக்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மேலூர் மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்தார்.

மகேந்திரபூபதியிடம் விசாரணை

இந்நிலையில், பி.ஆர்.பி. நிறுவனத்திற்கு சாதகமாக மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி செயல்படுவதாக, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் கூறினார். மகேந்திரபூபதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த நீதிபதி பிரகாசம் கண்டனம் தெரிவித்ததோடு, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரை தொடர்பாக உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் கூறினார்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் உத்தரவின் பேரில், இன்று மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதியிடம், நீதிபதிகள் பஷீர் அகமது, சரவணன் ஆகியோர் இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மகேந்திர பூபதியின் மீதான குற்றச்சாட்டுக்கள்

கிரானைட் விவகாரத்தில் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி மீது பல புகார்கள் கூறப்படுகின்றன. 98 வழக்குகள் பதிவான நிலையில், அதில் 3 வழக்குகளை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொண்டு 95 வழக்குகளை கிடப்பில் போட்டார் என்பது குற்றச்சாட்டாகும்.

மகேந்திரபூபதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 3 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளான பொதுச்சொத்துக்களைச் சேதம் விளைவிப்பதைத் தடுத்தல், வெடிபொருள் சட்டம் போன்ற குற்றச்சாட்டுக்கள் விசாரணையின் போது எடுத்துக்கொள்ளப்படவில்லை.

போலீஸ் சமர்ப்பித்திருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு போதிய முகாந்திரம் உள்ளது. அதனால், அனைத்து குற்றச்சாட்டுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும் அதை கண்டுகொள்ளாமல் செயல்பட்டார் மகேந்திரபூபதி.

இத்தனையையும் மீறி வழக்கு தொடுத்த அதிகாரிகளை குற்றம்சாட்டி, குற்றம்சாட்டப்பட்டவர்களை சர்வசாதாரணமாக விடுவித்தது என மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதியை ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்துள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை

தமிழகத்தையே அதிர வைத்த கிரானைட் முறைகேடு வழக்கு விசாரணையில் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருகிறார் மேலூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சட்ட விரோதாக கிரானைட் கற்களை அடுக்கி வைத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பி.ஆர்.பழனிச்சாமியை விடுவித்து பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நீதிபதி மகேந்திரபூபதி.

English summary
Two Madras HC bench judges grilled the controversial Melur Magistrate Mahendra Bhoopathi in granite case. Magistrate Mahendra boopathi order P.R. Palanisamy release and orders crminal prosecution against mishra and two Special Public Prosecutors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X