For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வாக்காளர் பட்டியலை திருத்த உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருச்சி: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதியில் வரும் 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் பட்டியலில் ஒரே பெயரில் ஏராளமான பதிவுகளும், இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமலும் உள்ளதாக வழக்குத் தொடரப்பட்டது.

HC orders to revise voters list in Srirangam

இடைத்தேர்தலில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் என்.ஆனந்த் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு வரும் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடந்த ஜனவரி 12ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இந்த தொகுதியில், நான் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறேன்.

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அதில், ஒரே வாக்காளரின் பெயர் பல இடங்களில் இடம் பெற்றது. இதனால், தி.மு.க. அமைப்பு செயலாளர், இதுகுறித்து கடந்த நவம்பர் 5ஆம் தேதி தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை மனு கொடுத்தார்.

இந்த நிலையில், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலை கடந்த ஜனவரி 5ஆம் தேதி மற்றும் 27ஆம் தேதிகளில் வெளியிட்டது. அந்த பட்டியலில், ஒரே வாக்காளரின் பெயர், பல்வேறு முகவரியில் இடம் பெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க வேண்டும் என்று வாக்காளர்கள் கொடுத்த முகவரி தவறாக இடம் பெற்றுள்ளது. இறந்தவர்கள் பெயரும், வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களின் பெயரும், வாக்கு அளிக்க தகுதியில்லாதவர்களின் பெயரும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மேலும், அந்த வாக்காளர் பட்டியலில் 9 ஆயிரம் போலி வாக்காளர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.

எனவே, பல முறை இடம் பெற்றுள்ள மற்றும் இறந்தவர்கள், வீடு மாறியவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன் ராஜகோபால், ‘வாக்காளர் பட்டியலில் மனுதாரர் கூறியுள்ள குறைபாடுகள் இருந்தால், அவற்றை தேர்தலுக்கு முன்பு சரி செய்யப்படும்' என்று உத்தரவாதம் அளித்தார்.

இதை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், ‘ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரி செய்து, சரியான வாக்காளர் பட்டியலை இடைத்தேர்தல் நடப்பதற்கு 2 நாட்கள் முன்பாக தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

English summary
Madras HC has ordered the EC to revise the voters list in Srirangam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X