For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொது இடத்தில் சிகரெட் பிடித்தால் வழக்கு பதிவு செய்க: தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பள்ளிக்கூடங்கள் அருகே சிகரெட் விற்பனை செய்பவர்கள் மீதும், பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அந்த அறிக்கையை வரும் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் டி.சி.சரத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் ஸ்டுடியோ 11 என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறேன். எங்கள் பகுதியில் புலியூர் 2-வது தெருவில் பகவதி என்ற பெயரில் டீக்கடை நடத்தி வருபவர்கள் கடை விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே சிகரெட் பிடிப்பவர்களை ஊக்குவித்து வருகின்றனர். அளவுக்கு அதிகமான புகையால் நாங்கள் மட்டு மின்றி பொதுமக்களும் பாதிப்படைந்து வருகின்றனர்.

HC orders state govt to conduct raids on shops selling tobacco products near schools

பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக் கூடாது என சட்டம் இருந்தும் அதை அதிகாரிகள் சரியாக அமல் படுத்துவதில்லை. எனவே அந்த சட்டத்தை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

சிகரெட் பிடிப்பதால் தீங்கு மூக்குக்கு, கெடுதல் மூளைக்கு, பாதிப்பு நுரையீரலுக்கு என்பது இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜேம்ஸின் கூற்று. கல்வி நிலையங் களில் இருந்து 100 மீட்டர் தொலை வுக்குள் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்கக்கூடாது என சட்டமே உள்ளது. ஆனால் பள்ளி செல்லும் சிறுவர்களுக்குக்கூட சிகரெட் எளிதாக கிடைக்கிறது.

கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். ஆனால் தமிழகத்தில் புகையிலை விற்பனை தொடர்பாக உள்ள சட்ட விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன.

உலக சுகாதார நிறுவனம் சிகரெட் பழக்கத்தில் இருந்து சிறுவர்கள் உள்ளிட்டவர்களை காப்பாற்ற வேண்டும் என ஒவ்வொரு கூட்டத்திலும் கோரி வருகிறது. சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களை தடை செய்யும் கோட்பா சட்டம் 2003 பிரிவு 4-ன்படி பொது இடங்களில் புகைபிடிப்பதும், கல்வி நிலையங்களின் அருகில் விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

இந்தியாவில் புற்றுநோயால் இறந்தவர்களில் 40 சதவீதம் பேர் புகையிலை பயன்படுத்தியவர்கள். அதுவும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஆண்களில் பாதி பேரும், பெண்களில் கால்வாசி பேரும் புகையிலை பயன்படுத்தியவர்கள் என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது. வாயில் போட்டு மெல்லும் புகையிலையை பயன்படுத்துவதால், பலருக்கு வாய் புற்றுநோய் தாக்கியுள்ளது. வாய் புற்றுநோயினால் உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், ஆண்டுக்கு 8 முதல் 9 லட்சம் பேர் நம் நாட்டில் இறக்கின்றனர். இந்த இறப்பு எண்ணிக்கை 2020-ம் ஆண்டு 15 லட்சமாக உயரும் என்றும் கூறப்படுகிறது. உலக அளவில் புகையிலை பயன்படுத்துவோர் குறித்து கடந்த 2010-ம் ஆண்டு நடந்த ஆய்வின்படி, இந்தியாவில் மொத்த இளைஞர்களில் 35 முதல் 27.5 சதவீத பேர் புகையிலையை பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

சமீபத்தில் சென்னையில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், புகையிலை நிறுவனங்கள் சிறுவர்களை குறிவைத்து விற்பனையை அதிகரித்து வருகின்றன என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. சென்னையில் 41.1 சதவீத மாணவர்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர் என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கல்வி நிலையங்களின் அருகில் சிகரெட் விற்பனை செய்யக்கூடாது என்ற சட்டம் 100 சதவீதம் மீறப்பட்டுள்ளது. 88.9 சதவீத பெட்டிக் கடைகளில் புகைபிடித்தல் கூடாது என்ற எச்சரிக்கை பலகைகள் இல்லை. 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வது குற்றம் என்ற அறிவிப்பு பலகை 98 சதவீத கடைகளில் இல்லை.

84 சதவீத கடைகளுக்கு முன்பாக, பொதுமக்களுக்கு இடையூறாகத்தான் புகைபிடிக்கப்படுகிறது. இதில் 87.7 சதவீத கடைகளில் சிறுவர்களுக்கு தாராளமாக சிகரெட் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே, இந்த மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகளை புகையிலை பாதிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்கள், சிறுவர்களுக்கு சிகரெட் மற்றும் புகையிலை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறேன்.

கலையரங்குகள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், கல்வி நிலையங்கள், நூலகங்கள், நீதிமன்ற வளாகங்கள், பொது அலுவலகங்கள் மற்றும் ரயில்நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிகரெட் மற்றும் புகையிலை விற்பவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் சுகாதாரத் துறை அமைச்சகமும், போலீஸ் டிஜிபியும் சிறப்பு பறக்கும் படைகளை அமைத்து திடீர் ரெய்டு நடத்தி பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் புகையிலை குறித்த சட்டவிதிமுறைகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அந்த அறிக்கையை ஜூன் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
Madras High Court on Monday directed the Tamil Nadu government to immediately form special squads to conduct surprise raids on shops located near them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X