சட்டமன்றத் தேர்தல்: மதுரையில் 509 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை - கலெக்டர் அறிவிப்பு
மதுரை: மதுரை மாவட்டத்தில் கிட்டதட்ட 509 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று அம்மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது.

அப்போது அவர், "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன. மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் தலா ஒரு தேர்தல் அதிகாரி உதவி அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
1,104 இடங்களில் 2,685 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 509 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாகும். இங்கு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர். அனைத்து வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல வசதியாக சாய்வு தளம் ஏற்படுத்தப்படும்.
ஒவ்வொரு தொகுதியிலும் சுழற்சி முறையில் 3 பறக்கும் படைகள் பணியில் அமர்த்தப்படும் . கட்சி சார்ந்த சுவர் விளம்பரம், பேனர்கள், போஸ்டர்கள் அகற்றப்படும். வீடியோ கண்காணிப்பு குழு, உள்ளூர் சேனல் கண்காணிப்புக்குழு, சமூக வலைதளங்களைக் கண்காணிக்க தனியாக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை கிழக்கு தொகுதியில் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை அறியும் கருவி அறிமுகப்படுத்தப்படுகிறது. 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.