For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாசியிலேயே அக்னி நட்சத்திரமாக மாறிய வானிலை... சேலம், கரூரில் 104 டிகிரி வெயில்

சித்திரை மாதம்தான் அக்னி நட்சத்திரம் காலம், ஆனால் மாசி மாதத்திலேயே வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.சேலம், கரூரில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கோடையில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை துவங்க இன்னும் 50 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில் இப்போதே பல பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தி வருகிறது.

மாசி மாதம் மச்செல்லாம் குளிரும் என்று கிராமத்து பக்கம் ஒரு பேச்சு வழக்கு உண்டு. இந்த ஆண்டு தை மாத இறுதியிலேயே வெயில் காலம் தொடங்கிவிட்டது. வர்தா புயல் மழைக்குப் பிறகு சென்னையிலும் புறநகரிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.

புதன்கிழமையன்று சென்னை புறநகரில் 99.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் வறட்சி நிலவி வரும் நிலையில் வெயிலும் சுட்டெரிப்பதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

104 டிகிரியை தொட்ட வெயில்

சேலம், கரூரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தருமபுரி, திருப்பத்தூரில் 100.4 டிகிரி வெப்பநிலையும், மதுரை, சென்னையில் 99 டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

கோவையிலும் கொளுத்தும் வெயில்

கோவையிலும் கொளுத்தும் வெயில்

கோவை மாவட்டமும் கடந்த சில ஆண்டுகளாக கோடைக் காலத்தில் பிற மாவட்டங்களைப் போலவே வெப்பத்தால் தகித்து வருகிறது. சாலையோர மரங்கள் வெட்டப்பட்டதாலும், கடந்த சில ஆண்டுகளாகப் பருவமழை பொய்த்து வருவதாலும் கோவையில் வெயில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

அதிகாலையில் பனி

அதிகாலையில் பனி

புதன்கிழமை காலையில் வழக்கத்துக்கு மாறாக மாநகரில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. சாலைகள் தெரியாத அளவுக்கு, எதிரே உள்ள நபர்கள் மங்கலாக தெரியும் அளவுக்குப் பனியின் தாக்கம் இருந்தது. காலை 8 மணிக்குப் பிறகும் பல சாலைகளில் பனிமூட்டம் இருந்ததைக் காண முடிந்தது.

பகலில் வெப்பம்

பகலில் வெப்பம்

காலை 10 மணிக்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது, நண்பகல் நேரத்தில் இது மேலும் அதிகரித்து சுட்டெரிக்கத் தொடங்கியது. கோவையில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 95 டிகிரி பாரன்ஹீட் வரையே வெயில் பதிவாகி இருந்த நிலையில், புதன்கிழமை 97 டிகிரி பதிவாகி இருந்தது. இது 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும்.

வாட்டும் வெயில்

வாட்டும் வெயில்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாநகரின் வரலாற்றில் இல்லாத அளவாக 100.7 டிகிரி வெயில் பதிவான நிலையில், இந்த ஆண்டு அதைக் காட்டிலும் கூடுதலாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தை தவிர்க்க இயற்கை குளிர்பான கடைகளை மக்கள் நாடத் தொடங்கியுள்ளனர்.

வெயில் 100 டிகிரியை தொடும்

வெயில் 100 டிகிரியை தொடும்

கோவையில் வரும் நாள்களில் இரவு, பகல் நேர வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும். இரவு நேர வெப்பநிலை 75 டிகிரி வரையிலும், பகல் நேர வெப்பநிலை 100 டிகிரிக்கும் மேலேயும் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதேநேரம் காற்றின் வேகமும் தொடர்ந்து அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தருமபுரியில் கொதிப்பு

தருமபுரியில் கொதிப்பு

தருமபுரியில் கடந்த 3 நாட்களாகவே வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வறட்சியினால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் வெயிலின் தாக்கத்தினால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மோர், இளநீர் ஆகிவற்றை குடித்து தாகத்தை தனித்து வருகின்றனர்.

வர்தாவின் பாதிப்பு

வர்தாவின் பாதிப்பு

சென்னையில் வர்தா புயலின் தாக்கத்தினால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வேரோடு சாய்ந்து விட்டன. வழக்கமாகவே சென்னையில் கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படும். இந்த ஆண்டு நிழல் தரும் மரங்கள் குறைவாகவே இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று எச்சரிக்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.

இப்பவே இப்படியா?

இப்பவே இப்படியா?

கோடை காலம் தொடங்கும் முன்பாகவே வெயில் கொளுத்தி வருகிறது. பங்குனி, சித்திரை மாதங்களில் வெயில் எப்படியிருக்குமோ என்ற அச்சம் இப்போதே மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. கோடைமழை பெய்தால் மட்டுமே வெப்பத்தின் தாக்கத்தில் இருந்தும், குடிநீர் பஞ்சத்தில் இருந்தும் தப்பிக்க முடியும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Chennai was the another city to record day maximum temperature several notches above normal. On Wednesday, Meenambakkam Observatory recorded maximum temperatures of 37.3°C that was 5.5 degrees above the normal average.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X