For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோசமான நிதி நிர்வாகத்தால் கடனில் தத்தளிக்கிறது தமிழக அரசு.. மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதிமுக அரசின் மோசமான நிதிநிர்வாகத்தால் தமிழகம் கடனில் தத்தளிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சியின் மோசமான நிதி நிர்வாகம், கடன் சுமையால் தமிழகம் தத்தளிக்கிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிமுக ஆட்சியில் வரலாறு காணாத வகையில் நிதி மேலாண்மை மிகவும் மோசமாகி விட்டது என்பதை கடந்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையும் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கின்றன.

Heavy loss for tn government due to poor financial management - stalin

திமுக ஆட்சி நடைபெற்ற 2006-2011 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் வெறும் ரூ.44 ஆயிரம் கோடி கடன் மட்டுமே ஏற்பட்டது. (மே 2011ல் திமுக அரசு ரூ. 1.01 கோடி கடனை விட்டுச் சென்றது என்றாலும், அதில் 57 ஆயிரம் கோடி ரூபாய் அதற்கு முன்பு 2001-2006 வரையிலான அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட கடன்).

ஆனால் 2011-2017 வரையிலான அதிமுக ஆட்சியில் மாநில அரசின் கடன் ரூ.2.59 லட்சம் கோடியாக அதிகரித்து விட்டதிலிருந்தே மாநில அரசின் நிதி நிர்வாகம் எந்த அளவிற்கு சீர்கெட்டுப் போயிருக்கிறது என்பதற்கு கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்ற நிலையில் இருக்கிறது. இதன் விளைவாக இன்றைக்கு அதிமுக ஆட்சியால் மட்டும் 1.56 லட்சம் கோடி ரூபாய் புதிய கடன் உருவாக்கப்பட்டு, மாநில அரசின் நிதி நிர்வாகம் நிலைகுலைந்து போய் நிற்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதி நிர்வாகச் செலவுகளுக்கும், திட்டங்களுக்கும் வழங்க வேண்டிய நிதியைக் கொடுக்காமல் இழுத்தடித்த காரணத்தால் 'நிதி நெருக்கடி நிலை (Financial Emergency) பிரகடனம் செய்யும் எண்ணம் ஏதும் மாநில அரசுக்கு இருக்கிறதா?' என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வே கண்டிக்கும் நிலை உருவானது.

அதைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதாக இருக்கட்டும், புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்குவதாக இருக்கட்டும் அனைத்து விஷயங்களிலும் நிதி பற்றாக்குறையால் இந்த அரசு திண்டாடிக் கொண்டிருக்கிறது. 110 அறிவிப்புகளை வெளியிட்டார்களே தவிர அவை அனைத்தும் இன்றைக்கும் வெற்று அறிவிப்புகளாகவே இருக்கின்றன. அந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாமல் மாநில நிதித்துறை மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது.

தற்போது நடக்கும் அதிமுக ஆட்சியின் மூன்று முதல்வர்களும் பிரதமர் நரேந்திரமோடியிடம் கொடுத்த மனுக்களில் கோரியுள்ள நிதி விவரங்களை பார்த்தாலே மாநில அரசின் நிதி நிலைமை எந்த அளவிற்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது கண்கூடாகத் தெரிகிறது.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் கொடுப்பதற்கு உரிய டெண்டர் விட்டு கொள்முதல் கூட செய்ய முடியாமல் அதிமுக ஆட்சி தத்தளித்து நிற்கிறது. சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்திற்கு வழங்கப்பட்ட அரசின் காசோலைகள் கூட வங்கியில் பணமில்லை என்று திரும்பி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

முதியோர் பென்ஷன் உள்ளிட்ட அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் நிதி பற்றாக்குறையால் அறவே முடங்கிக் கிடக்கின்றன. குறிப்பாக 'அம்மா உணவகம்' நிதிப் பற்றாக்குறையால் முற்றிலுமாக நிலைகுலைந்து நிற்கிறது. எந்த புதிய மின்திட்டங்களையோ, மெகா குடிநீர் திட்டங்களையோ நிறைவேற்ற முடியாமல் இந்த அரசு அந்தரத்தில் தொங்குகிறது. அத்திக்கடவு- அவினாசி திட்டத்தைக் கூட மாநில அரசின் நிதியில் செயல்படுத்த முடியாமல் இன்றைக்கு மத்திய அரசிடம் நிதி கோரி விட்டு காத்திருக்கிறார் தமிழக முதல்வர்.

மின் வாரியத்தின் கடன் சுமையை ஏற்றுக் கொள்கிறோம் என்று அறிவித்துள்ள தமிழக அரசு அதற்குரிய மானியத்தைக் கூட மத்திய அரசிடமிருந்து பெறாமலேயே உதய் திட்டத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு அமைதி காக்கிறது. சர்க்கரை மானியத்தை தாரை வார்த்து விட்டு தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தில் கையெழுத்துப் போட்டுள்ளதால், பொது விநியோகத்திட்டத்தில் வழங்கப்படும் சர்க்கரை விலை பெருமளவு உயரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே அதிமுக அரசின் பொறுப்பற்ற நிதி நிர்வாகத்தால் மாநில அரசின் நிதி நிலை இன்றைக்கு தடம் புரண்டு நிற்பதோடு மட்டுமில்லாமல், தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ. 35 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை சுமத்தி, அதிமுக அரசு நிதி மேலாண்மையில் ஒரு கோமாளித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறது.

அதிகாரபூர்வமாக ரூ.2.52 லட்சம் கோடி ரூபாய் கடன் என்றாலும், பொதுத்துறை நிறுவனங்கள், மின்சார வாரியம் உள்ளிட்ட மற்ற கடன்களையும் சேர்த்தால் 5 லட்சம் கோடி ரூபாய் வரை மாநில அரசு கடன் அதிகரித்து விட்டது என்று வரும் செய்திகளை புறந்தள்ளி விடுவதற்கும் வாய்ப்பு இல்லை.

ஆகவே அதிமுக ஆட்சியில் நிதி நிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் போதெல்லாம் மாநில அரசின் கடன் கிடு, கிடுவென உயர்ந்துள்ளது என்ற விவரத்தை மட்டும் வெளியிடுகிறார்களே தவிர, அந்த கடனை அடைப்பதற்கோ அல்லது குறைப்பதற்கோ , நிதி மேலாண்மையை சீர் செய்வதற்கோ எவ்வித செயல் திட்டமும் நிதி நிலை அறிக்கைகளில் இடம்பெறுவதில்லை.

தமிழக நிதி மேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தும் இதுவரை அதிமுக அரசு அப்படியொரு அறிக்கையை வெளியிட்டு நிதி மேலாண்மை விஷயத்தில் ஒரு வெளிப்படைத்தன்மையை மக்களுக்கு அறிவிக்கவில்லை.

அதனால் திமுகவின் சார்பில் நிதி மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தலைமையில் மாநில அரசின் நிதி நிர்வாகம் மற்றும் மேலாண்மை குறித்து ஆய்வு செய்து ஒரு அறிக்கை தயார் செய்ய அறிவுறுத்தியிருக்கிறேன். அந்த அறிக்கை விரைவில் திமுக சார்பில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் இனி வரும் நிதிநிலை அறிக்கையிலாவது மாநிலத்தின் கடனை குறைப்பதற்கும், மாநில நிதி நிலைமையை சீராக்குவதற்கும் செயல் திட்டங்களை உருவாக்குவார்கள் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK working president m.k.stalin has said Heavy loss for tn government due to poor financial management
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X