For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடியில் மீண்டும் கனமழை... நெல்லையில் தொடர்மழையால் 7 கிராமங்கள் துண்டிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீண்டும் கன மழை கொட்டத் தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை விடப்பட்டதால் மாணவர்களும், பெற்றோர்களும் அவதிக்கு ஆளாகினர். குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் மீண்டும் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் கோராம்பள்ளம் குளம் உடைந்து நகருக்குள் புகுந்ததில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்து, உடைமைகளையும் இழந்து முகாம்களில் குடியேறியுள்ளனர்.

Heavy rains lash in Tirunelveli, Tuticorin districts

கடந்த 4 நாட்களாக மழை ஓய்ந்து வெயிலடிக்கவே, குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நின்ற மழை நீர் மெல்ல வடியத்தொடங்கியது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்றியால் நேற்று காலை 9 மணி அளவில் கனமழை கொட்டியது. புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலை மீண்டும் வெள்ளக்காடாக மாறியதனால் அந்த வழியாக வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. வேப்பமரம் சாய்ந்து விழுந்ததால், மின்கம்பங்களும் சரிந்து மின்சாரம் தடைபட்டது. பகல் 10 மணிக்கு மேகங்கள் கறுத்து நகரம் முழு இருட்டாக மாறியது. வாகனங்கள் முன்விளக்கை எரியவிட்டபடி சென்றன.

வீடுகளுக்குள் வெள்ளம்

கனமழை காரணமாக பல பள்ளிகளுக்கு நேற்று மதியம் திடீரென விடுமுறை விடப்பட்டது. காயல்பட்டினத்தில் கொட்டிய கனமழையால் அங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனையடுத்து அருணாசலபுரம், கொம்புத்துறையில் வசித்த 300க்கும் மேற்பட்ட மக்கள் பல்நோக்கு சேவைமையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்

திருச்செந்தூர் அருகே ஆவுடையார்குளம் கடைசியாக 1992ம் ஆண்டு நிரம்பியது. அதன்பின் தற்போது மறுகால் பாய்ந்து வருகிறது. திருச்செந்தூர் அருகே சோனகன் விளை பகுதியில் உள்ள நாலாயிரம் உடையார் குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. சோனகன்விளை ஊருக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 200 ஏக்கரில் பயிராகியிருந்த நெற்பயிர்கள் மூழ்கின. இதனிடையே இன்றும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள வரவேற்பு மையங்களுக்கு சென்று தங்குமாறு தூத்துக்குடி ஆட்சியர் ம.ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்

நெல்லையில் தொடர்மழை

நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி விடிய, விடிய மழை பெய்தது. நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் நேற்று பகலிலும் மழை தொடர்ந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பச்சையாற்றில் வெள்ளம்

மேற்குதொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்த மழையால் 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணை கடந்த வாரம் முழு கொள்ளளவை எட்டியது. அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரால் களக்காடு பச்சையாறு, உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் பத்மனேரி, பொன்னாக்குடி வழியாக தமிழாக்குறிச்சி அணைக்கு வந்தது.
கிராமங்கள் துண்டிப்பு

பச்சையாற்று கால்வாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் கடந்த இரு தினங்களாக திடியூர் பகுதியில் புகுந்ததால் திடியூர், பூக்குழி, இளையாமுத்தூர், தமிழாக்குறிச்சி, மேலதிடியூர், புதுக்குளம், பெத்தானியா உள்ளிட்ட 7 கிராமங்கள் வாகன போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் பாதிப்பு

வெள்ள நீரை வடிய வைக்க அதிகாரிகள் முயற்சி எடுக்கவில்லை. நாங்கள் செங்குளம் வழியாக நாகர்கோவில் பைபாஸ் சாலைக்கு சென்று பேருந்து ஏற வேண்டி உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளின் உடைகள் வெள்ளத்தில் நனைந்து பாழகி விடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குற்றாலத்தில் வெள்ளம்

நேற்று அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 9 மணிக்கு பின்னர் வெள்ளம் குறைந்ததால் மக்கள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,518 குளங்களும் நிரம்பின. கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை கொட்டியது. நாகர்கோவிலில் 12 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

மழை நீடிக்கும்

இதனிடையே லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவாகிய மேலடுக்கு சுழற்சியானது, தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. அதே நேரத்தில், இலங்கைக்கு தெற்கே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக, தென் தமிழகத்தில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.

வடதமிழகத்தில் மழை

வட தமிழகம், புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறியுள்ள ரமணன், வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 70 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு அடுத்தப்படியாக, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் 40 மி.மீ, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், நாங்குநேரி, சாத்தான்குளம், பாபநாசத்தில் தலா 20 மி.மீ, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, சேரன்மகாதேவியில் தலா 10 மி.மீட்டர் மழை பெய்துள்ளது என்றும் ரமணன் கூறியுள்ளார்.

English summary
Heavy rains lashed Tirunelveli and Tuticorin districts since last night leading to floods in the low lying areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X