For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பா பெயர் இல்லாத பிறப்புச் சான்றிதழ்கள்.. நடைமுறையில் சாத்தியமா?

By R Mani
Google Oneindia Tamil News

- ஆர்.மணி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஒரு குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று எந்த சட்டக் கட்டாயமும் இல்லை என்பதுதான் அந்த தீர்ப்பு. இந்த விவகாரத்தை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மதுமிதா ரமேஷ் என்ற பெண் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அப் பெண் சந்திரனிடமிருந்து பிரிந்து விட்டார். அதன் பிறகு அவர் செயற்கை முறையில் கருத்தரித்து ஒரு பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார். அந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழை அளித்த திருச்சி மாநகராடச்சி, 'தந்தை’ என்ற இடத்தில் (column), பிரசவத்தின் போது மதுமிதாவுக்கு உதவியாக இருந்த அவருடைய ஆண் நண்பர் மணீஷ் மதன்பால் மீனா என்பவரின் பெயரை போட்டு விட்டது. இத்தனைக்கும் பல முறை திருச்சி மாநகராட்சியிடம் மதுமிதா ரமேஷ் குழந்தையின் தந்தையின் பெயருக்கான column வெற்றிடமாக இருக்க வேண்டும் என்று எழுத்து மூலமாகவும், வாய் மொழியாகவும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

High Court says fathers name not necessary in birth certificate

இதனை எதிர்த்து மதுமிதா சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் 13.11.2017 ஓர் மனுவை தாக்கல் செய்கிறார். இதனை விசாரித்த நீதிபதி ஆர்.மஹாதேவன் மீண்டும் ஒரு முறை சம்மந்தப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரியிடம் (Revenue Divisional Officer) புதியதாக தன்னுடைய கோரிக்கையை வைக்குமாறு மதுமிதாவுக்கு அறிவுறுத்துகிறார். இரண்டு வாரங்களுக்குள் இந்த கோரிக்கையை Revenue Divisional Officer யிடம் வைக்குமாறும், அந்த கோரிக்கையை இரண்டு வாரங்களுக்குள் பரீசீலித்து சம்மந்தப்பட்ட அதிகாரி தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உத்திரவிடுகிறார். 'மதுமிதா வின் பரிதாபகரமான நிலைமையை கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரி தீர்ப்பளிக்க வேண்டும்’ என்றும் நீதிபதி அறிவுறுத்துகிறார்.

ஆனால் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரி நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், புதிய பிறப்பு சான்றிதழை வழங்காததால் மதுமிதா மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தின்

மதுரை கிளையில் இந்தாண்டு மே மாதம் புதிய வழக்கை தாக்கல் செய்கிறார். அதனை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ் தன்னுடைய தீர்ப்பில் கீழ்கண்டவாறு கூறுகிறார்;

'’மதுமிதா ரமேஷின் ஆண் நண்பரும், அவருடைய முன்னாள் கணவரும் மதுமிதா வின் பெண் குழந்தைக்கு உடலியல் ரீதியாக (biologically) தாங்கள் தந்தை இல்லை என்று இந்த நீதிமன்றத்தில் மனுக்களை (affadivits) தாக்கல் செய்துள்ளனர். மதுமிதாவும் அதே போன்றதோர் மனுவை தாக்கல் செய்திருக்கிறார். ஆகவே சம்மந்தப்பட்ட அரசு அதிகாரி உடனடியாக அந்த பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் இருந்து தந்தையின் பெயர் என்று குறிப்பிட்டு இருப்பதை நீக்கி விட்டு புதியதாக ஒரு பிறப்பு சான்றிதழை வழங்க வேண்டும். இதில் தந்தையின் பெயர் கேட்கும் column வெற்றிடமாக இருக்க வேண்டும்’ என்று உத்திரவிடுகிறார்.

இந்த தீர்ப்பு ஒரு இடைக்கால தீர்ப்பாக, சில நடைமுறை காரணங்களால் இருந்ததால் மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் (சென்னையில் உள்ள உயர்நீதி மன்றம், ஆங்கிலத்தில் இதற்கு பெயர் 'Prinicple Seat of the Madras High court”) சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ் ரமேஷ் முன்பாகவே வருகிறது. அப்போது நீதிபதி, 1969 ம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு சட்டம் (மத்திய அரசு சட்டம், Central Act) மற்றும் 2000 ம் ஆண்டு தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்யும் சட்டம் என்ற இந்த இரண்டு சட்டங்களிலும் எங்கேயும் தந்தையின் பெயரை பிறப்பு சான்றிதழில் குறிப்பிட்டே ஆகவேண்டும் என்று சொல்லப்படவில்லை’ என்று கூறுகிறார்.

அப்போது திருச்சி மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தந்தை பெயரை குறிப்பிடாமல் புதிய பிறப்பு சான்றிதழ் மதுமிதாவுக்கு வழங்கப் பட்டு விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து விட்டதாக நீதிபதி தெரிவித்தார். பெண்ணுரிமைக்காக போராடும் போராளிகளும், ஒரு தரப்பு வழக்கறிஞர்களும் இந்த தீர்ப்பை வரவேற்கின்றனர். 'இந்த தீர்ப்பு நிச்சயம் பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கும், முற்போக்கு இயக்கங்களுக்கும் நிச்சயம் பெரியளவில் உதவி புரியும். ஏற்கனவே பல உயர் நீதிமன்றங்ஙளும், உச்ச நீதிமன்றமும் கொடுத்துள்ள இதே போன்ற தீர்ப்புகளுக்கு வலுசேர்க்கும்’’ என்கிறார் பெண்களின் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் மும்பையில் உள்ள சமூக ஆர்வலர் ஜோதி யாதவ்.

ஆனால் இந்த தீர்ப்பை அமல்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக பல வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் குறிப்பிடுகின்றனர். 'இந்த தீர்ப்பு முக்கியமான தீர்ப்புதான். சந்தேகம் ஏதுமில்லை ஆனால் இதனை நடைமுறைப் படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, PAN கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட் போன்றவற்றை பெறுவதில் இந்த பெண் குழந்தை பெரிய சவால்களை எதிர் கொள்ள வேண்டும். ஏனெனில் மேலே குறிப்பிட்ட அத்தனை ஆவணங்களும் வெவ்வேறு மத்திய அமைச்சகங்களால் வழங்கப்படுகின்றன. ஒவ்வோர் முறையும் இதில் பிரச்சனை வரும். அப்போது பாதிக்கப்படும் அந்த குழந்தையின் சார்பாக ஒவ்வோர் முறையும் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்துக்கு வர வேண்டும். இதில் உள்ள மிகப் பெரிய சவால், நீதிபதி எம்.எஸ். ரமேஷ் போன்றே இந்த வழக்கை விசாரிக்கும் மற்ற, மற்ற உயர்நீதி மன்ற நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. நீதிபதி ரமேஷின் தீர்ப்புக்கு எதிராக மாற்று தீர்ப்பை சில நீதிபதிகள் கொடுக்கலாம். அப்போது பிரச்சனை மேலும், மேலும் விரிவடையும்’’ என்கிறார் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் மனு சுந்தரம்.

நடைமுறை சிக்கல்களை மேலும் விவரிக்கும் மனு சுந்தரம் இவ்வாறு கூறுகிறார்; '’இன்றைக்கு கிட்டத்தட்ட பொது மக்களுடன் அன்றாடம் தொடர்பில் இருக்கும் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து துறைகளும் ஆன்லைனில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உதராணத்துக்கு பாஸ்போர்ட் கேட்டு நீங்கள் விண்ணப்பிக்கிறீர்கள். அதில் தந்தையின் பெயர் என்ற column இருக்கும். அதனை பூர்த்தி செய்யாமல் நீங்கள் அடுத்த பக்கத்துக்கு போக முடியாது. ஆகவே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு நாடாளுமன்றத்தில் இதற்கான ஒரு சட்டத்தை இயற்றுவதுதான்.. அப்போது ஆன் லைனில் விண்ணப்பிப்பவர்களின் வசதிக்காக மத்திய, மாநில அரசுகளின் அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இதற்கேற்ற தொழில் நுட்ப வசதிகள் சரிசெய்வது தொடங்கும்’.

அவ்வளவு சுலபத்தில் மத்திய அரசு இதற்கு ஒப்புக் கொள்ளாது. ஏனெனில் இந்த தீர்ப்பு 'குடும்பம்’ என்று ஒரு கோட்பாட்டையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. கடந்த நாண்காண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது தந்தையின் பெயரை போடாமல் பிறப்பு சான்றிதழை வழங்குவதற்கு தேவையான சட்ட திட்டத்தை இன்றைய மத்திய அரசு நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு மிக முக்கியமான சமூகப் போராட்டத்தை, தனி மனித உரிமைகளுக்கான போராட்டத்தை தற்போதைக்கு மதுமிதா ரமேஷ் துவங்கியிருக்கிறார். நாளைக்கு வளர்ந்து வரும் அவரது மகளும் இதில் சேர்ந்து கொள்ளுவார்.

ஆங்கிலத்தில் சொன்னால் Mathumitha Ramesh may have won the battle … but certainly not the war. அதாவது போரின் ஒரு முனையில் மதுமிதா வென்றிருக்கிறார். இறுதி யுத்தத்தில் அவர் வெற்றிப் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் நாம் பார்க்க வேண்டும். இதுதான் கள யதார்த்தம்.

English summary
High Court says father's name not necessary in birth certificate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X