For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோகுல்ராஜ் கொலை: யுவராஜூக்கு உதவியதாக பெண் எஸ்.ஐ உள்ளிட்ட 3 பேர் மீது சிபிசிஐடி சந்தேகம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜ் தலைமறைவாக இருந்த போது பெண் எஸ்ஐ உட்பட 3 பேர் அவருக்கு போலீஸ் செயல்பாடு குறித்த தகவல்களை பரிமாற்றம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக யுவராஜ், அவரது கார் டிரைவர் உள்ளிட்ட 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளதால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கடந்த ஜூன் 24ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்டு பள்ளிபாளையம் அருகே ரயில் பாதையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த பெண் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா கடந்த செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

High drama as Yuvaraj surrenders - CBCID suspects 3 cops

கொலை வழக்கில் தேடப்பட்ட யுவராஜ், வாட்ஸ்அப் பேட்டி, தொலைக்காட்சி இன்டர்வியூ என பரபரப்பை கிளப்பிய நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். யுவராஜின் டிரைவர் அருண், 22, சேலம் மத்திய சிறையில் உள்ளார். குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஜாமின் கேட்டு மனு

யுவராஜூம், டிரைவர் அருணும் ஜாமின் கேட்டு, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு கடந்த 2ம் தேதி, மகிலா நீதிமன்ற நீதிபதி மான்விழி முன் விசாரணைக்கு வந்தது. யுவராஜ் சார்பில், வக்கீல் கிருஷ்ணன் ஆஜரானார். அரசு வக்கீல் ரமேஷ் ஆஜராகவில்லை. அதனால், வழக்கை, டிசம்பர் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்து, நீதிபதி மான்விழி உத்தரவிட்டார்.

குண்டர் சட்டத்தில் கைது

சிறையில் உள்ள யுவராஜ் மீது, ஏற்கனவே ஈமு கோழி வளர்ப்பு மோசடி, அடிதடி வழக்கு, கொலை முயற்சி வழக்கு என, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் யுவராஜை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, நாமக்கல் எஸ்.பி., செந்தில்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி, கடந்த டிசம்பர் 3ம் தேதி யுவராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து யுவராஜ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

ரத்து செய்ய மனு

இதனிடையே யுவராஜ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மாவீரன் மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை சார்பில் ஆட்சியர் தட்சிணாமூர்த்தியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், யுவராஜின் செயல்பாட்டில் காழ்ப்புணர்ச்சி கொண்ட சில நபர்களின் தூண்டுதலின் பேரில், பொய்யான வழக்குகள் புனையப்பட்டு, வளர்ச்சியை தடுக்கும் விதமாகவும், அவரைப்பற்றி சமுதாயத்தில் தவறான எண்ணங்கள் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

கார் டிரைவர் மீது குண்டாஸ்

இரண்டாவது எதிரியும், யுவராஜின் கார் ஓட்டுநருமான சங்ககிரி மோடிகாட்டைச் சேர்ந்த அருண் அக்டோபர் 13ஆம் தேதி கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீஸார் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந் நிலையில், அருண் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்க திருச்செங்கோடு டிஎஸ்பி முரளிதரன், நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமாருக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அதை அவர் பரிந்துரை செய்து நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினார். இதை ஏற்ற ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி, அருண் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்க கடந்த 17ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.

7 பேர் மீது குண்டாஸ்

கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக யுவராஜின் இளைய சகோதரர் தங்கதுரை, சங்கர், அருள்செந்தில், செல்வக்குமார், சிவக்குமார் ஆகிய 5 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்கப்பட்ட நிலையில், கடந்த 3 ஆம் தேதி யுவராஜ் மீதும், இப்போது கார் ஓட்டுநர் அருண் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையடுக்கப்பட்டுள்ளது.

மூவர் மீது சந்தேகம்

இதனிடையே, யுவராஜ் தலைமறைவாக இருந்தபோது, போலீசார் அவரை பிடிக்க தனிப்படை அமைத்து பல இடங்களில் தேடினர். தனிப்படையினர் அவரை நெருங்கும் போது எல்லாம், அங்கிருந்து யுவராஜ் தப்பினார். காரணம் தனிப்படை வருவது குறித்து முன்கூட்டியே, போலீஸ் ஏட்டு, உளவுப்பிரிவு ஏட்டு, பெண் எஸ்.ஐ ஆகியோர் யுவராஜுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் செல்போனில் அவ்வப்போது தெரிவித்துள்ளனர். அவர்களின் செல்போன் தொடர்பு எண்களை போலீசார் எடுத்து விசாரித்ததில் இது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த 3 பேரிடமும் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

திசை திருப்ப முயற்சியா?

யுவராஜூக்கு தகவல் கூறியதாக புகார் கூறப்பட்டுள்ள 3 பேரும் தற்கொலை செய்து கொண்ட டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவுக்கு நெருக்கமானவர்கள். விஷ்ணுப்பிரியா தற்கொலைக்கு உயரதிகாரிகள் கொடுத்த டார்ச்சரே காரணம் என்று புகார் தெரிவித்ததில் அவரது தோழிகளோடு, இந்த 3 பேரிடமும் கடந்த நவம்பர் மாதமே சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். இந்நிலையில், விஷ்ணுப்பிரியாவுக்கு நெருக்கமாக இருந்த போலீசார் மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு, வழக்கை திசை திருப்புவதற்காகவே சுமத்தப்படுவதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
CBCID police suspected 3 cops helped to The president of Dheeran Chinnamalai Peravai Yuvaraj. who was surrendered on october month before the CB-CID police at Namakkal amid high drama.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X