For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூரில் 20 பேர் கண் பார்வை பறிபோன பரிதாபம்... உயர்மட்டக் குழுவினர் விசாரணை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சேலம்: மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 20 பேருக்கு பார்வை பறிபோனது தொடர்பாக சேலத்தில் மருத்துவப்பணிகள் இயக்குநர் மணி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்திவருகின்றனர். சேலத்தை தொடர்ந்து கோவையிலும் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேட்டூரில், அரசு தலைமை மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு உள்ளது. இந்த பிரிவில் ஆண்டுதோறும், 1,000க்கும் மேற்பட்டோருக்கு, கண் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

High level committee to probe Mettur eye surgery fiasco

இம்மாதம், 14ம் தேதி, ஏழு பேர், 15ம் தேதி, எட்டு பேர்; 16ம் தேதி, எட்டு பேர் என, மொத்தம், 23 பேருக்கு டாக்டர்கள் ராஜேந்திரன், தமிழ்செல்வி, சுபா, நித்யா ஆகியோர் கண் புரை அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சை முடிந்து, இரு நாட்களுக்கு பின், நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

அவர்களது கண்களில் ஊற்றுவதற்காக சொட்டு மருந்து வழங்கினர். இதை ஊற்றிய பின்னரும் யாருக்கும் குணமாகவில்லை. ஆனால், ஐந்து ஆண்கள், 11 பெண்கள் என, மொத்தம், 16 முதியவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த கண்ணில் சீழ் பிடித்து, பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தவறான ஆபரேசன் காரணமாக கண் பார்வை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் பரவியது. எனவே, இதுபற்றி சேலம் மாவட்ட சுகாதாரதுறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பார்வை பாதித்த மூன்று பேரை, சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, ஐந்து பேரை சேலம் அகர்வால் கண் மருத்துவமனைக்கு எட்டு பேரை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த பிரச்சினைக்கு காரணம் டாக்டர்களின் கவனக்குறைவா அல்லது கிருமி தொற்று காரணமா என்பது குறித்து, தீவிர விசாரணை நடந்து வருகிறது. கண்பார்வை பார்வை பாதிக்கப்பட்டுள்ளவர்களை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் வேலுமணி, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மருந்துகள் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சென்னையில் இருந்து சென்றுள்ள உயர்மட்டக் குழுவினர் சேலத்தில் விசாரணை நடத்திவருகின்றனர். மருத்துவப்பணிகள் இயக்குநர் மணி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்திவருகின்றனர். சேலத்தை தொடர்ந்து கோவையிலும் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

கண் அறுவை சிகிச்சை அரங்கில் கிருமிகள் பரவுவதை தடுக்க, வாரம் ஒருமுறை கிருமிநாசினிகள் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். 'சூடோமோனோஸ்' என்ற தொற்று கிருமி, காற்றின் மூலம் பரவக்கூடியது. இந்தக் கிருமி ஒரு நோயாளியிடம் இருந்து, மற்ற நோயாளிகளுக்கும் அல்லது அறுவை சிகிச்சை அரங்கில் இருந்தும் பரவ வாய்ப்புள்ளது.

மேட்டூர் கண் அறுவை சிகிச்சை அரங்கை கிருமி நாசினி கொண்டு சரியாக சுத்தம் செய்யாததால், அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு சூடோமோனோஸ் கிருமி பரவியதா அல்லது வெளிநபர்களின் மூலம் பரவியதா என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆய்வுக்கு பின்னரே அதற்கான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்த மேலும் இருவருக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பார்வை பாதித்த லட்சுமி மற்றும் பாப்பாத்தியை மருத்துவக் குழுவினரே வீட்டுக்கு சென்று அழைத்துவந்தார். கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் வந்துள்ள உயர்மட்டக்குழுவினர் , தொற்று பாதிப்புக்கான காரணத்தை கண்டறிந்து, அதை தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். சிகிச்சை அளிப்பதில் குறைபாடு இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவ சேவை பணிகள் துறை இயக்குனர் மணி, கண்ணொளி திட்ட இயக்குனர் ரேவதி ஆகியோர் கூறியுள்ளனர்.

English summary
A High level committee is probing the Mettur eye surgery fiasco
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X