எங்கபோய் முடியுமோ.. மாட்டிறைச்சி ஆதரவாளர்களுக்கு பன்றிக்கறி சப்ளை: அர்ஜுன் சம்பத் சீண்டல்
கோவை: மாட்டிறைச்சி சாப்பிடுவோம் என்று போராட்டம் நடத்துவோருக்கு பன்றி மாமிசம் சப்ளை செய்யப்படும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் எச்சரித்துள்ளார்.
பசு மாமிசத்தை உண்பது கூடாது என்று இந்து ஆதரவு அமைப்புகள் நாடெங்கும் போராட்டம் நடத்துகின்றன. தாத்ரி பகுதியில் ஒரு முதியவர் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து, பசு மாமிச விருந்து நடத்திய காஷ்மீர் மாநில எம்.எல்.ஏ ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், கோவையில் நடைபெற்ற www.IndiaagainstIslamicstate.com என்ற வெப்சைட் திறப்பு நிகழ்ச்சியில் அர்ஜுன் சம்பத், ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் மற்றும் இந்து ஜன ஜாக்ருதி என்ற அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் பேசிய அர்ஜுன் சம்பத் "இந்தியாவில் பசு மாமிச விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். பசு மாமிசம் சாப்பிட வேண்டும் என்போர் இந்தியாவை விட்டு வெளியேறட்டும்.
பசு மாமிசம் சாப்பிடுவது தொடர்பாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. போராட்டக்காரர்களுக்கு பன்றி மாமிசத்தை நாங்கள் வினியோகிப்போம். அதையும் சாப்பிட தயாரா? என்றார். பன்றியை, தங்கள் நம்பிக்கைப்படி, இஸ்லாமியர்கள் விலக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரமோத் முத்தாலிக்கிடம், பசு மாமிச சர்ச்சை பற்றி நிருபர்கள் கருத்து கேட்டதற்கு, அதுபற்றி வாய் திறக்கமாட்டேன் என்று கூறிவிட்டார். வெப்சைட் பற்றி பேசிய அவர், தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப்சைட், இஸ்லாமியர்களுக்கு எதிரானது கிடையாது. இஸ்லாமிய பெயரில் நடைபெறும் பயங்கரவாதம் பற்றிய விழிப்புணர்வு வெப்சைட்தான் அது. மக்களிடையே தேசப்பற்றை உருவாக்க வெப்சை உதவும் என்றார்.