For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய நிர்வாகத்துறையை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்ற இந்துத்வா கும்பல் முயற்சிக்கிறது: வைகோ

ஐஏஎஸ் தேர்வுகளில் மாற்றம் செய்து இந்திய நிர்வாகத்துறையைக் கைப்பற்ற இந்துத்வா கும்பல் முயற்சிக்கிறது என்று வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வில் மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் இந்துத்வா கும்பல் இந்திய நிர்வாகத்துறையை கையகப்படுத்தப் பார்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான விதிகளில் புதிய முறை கொண்டு வர இருப்பதாக மத்திய பணியாளர் சீர்திருத்தத்துறையின் இணைச் செயலாளர் விஜயகுமார் சிங் அறிவித்துள்ளார்.

இந்தப் புதிய விதிகளின் மூலம், பட்டியல் மற்றும் தாழ்த்தப்பட்ட இன மாணவர்களை குடிமைப் பணிகளுக்கு வரவிடாமல் தடுக்க பாஜக மற்றும் இந்துத்வா கும்பல் முயற்சிக்கிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

 ஏவல் துறையாக மாற்றம்

ஏவல் துறையாக மாற்றம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா பாசிச ஆட்சியின் பிடியில் சிக்கி வருகிறது என்று ஜனவரி மாதம், உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் வெளிப்படையாகவே பத்திரிகை, ஊடகங்கள் மூலம் எச்சரிக்கை மணி அடித்தனர். நான்கு ஆண்டு கால நரேந்திர மோடியின் அரசு, மக்களாட்சியின் மாண்புகளை சிதைத்து வருவது மட்டுமல்ல, அரசு நிர்வாகத் துறையை தங்களது குற்றேவல் துறையாக மாற்றும் நடவடிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொண்டு வருகிறது.

 குழுவின் பரிந்துரைகள்

குழுவின் பரிந்துரைகள்

பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளர் விஜய்குமார் சிங், மே 17ம் தேதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை பாரதிய ஜனதா கட்சி அரசின் நிர்வாகத்துறை மீதான இந்துத்துவா ஆதிக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யு.பி.எஸ்.சி.) குடிமைப்பணித் தேர்வுமுறை குறித்து ஆய்வு செய்ய, முன்னாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பி.எஸ்.பாஸ்வான் தலைமையிலான குழு ஒன்றை அமைத்திருந்தது. இந்தக் குழு 2016, ஆகஸ்டில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியது.

 25 அரசுப் பணிகளுக்குத் தேர்வு

25 அரசுப் பணிகளுக்குத் தேர்வு

இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ள மத்திய அரசு, குடிமைப் பணிகள் தேர்வு பணி ஒதுக்கீடு முறையில் மாற்றம் கொண்டுவர முனைந்துள்ளது. தற்போது நடைமுறையில் குடிமைப் பணிகளின் கீழ் வரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற 25 மத்திய அரசுப் பணிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் தேர்வு நடத்துகிறது. முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

 குடிமைப் பணிகளுக்கான தேர்வு

குடிமைப் பணிகளுக்கான தேர்வு

பின்னர் இந்த இரு தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இந்தத் தேர்வு முறையில் பா.ஜ.க. அரசு முக்கியமான மாற்றத்தைத் திணிப்பதற்குத் திட்டமிட்டு வருகிறது. குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்படுவர்கள், உத்தரகாண்ட் மாநிலம், முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பப்படுவார்கள்.

 மேலாண்மை பயிற்சி

மேலாண்மை பயிற்சி

அங்கு நூறு நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியின் போது பயிற்சியாளர்களின் திறன் அறியப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் அடிப்படையில்தான் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். பா.ஜ.க. அரசு புகுத்தி உள்ள இந்தத் தேர்வு முறை அநீதியானது; பாரபட்சமானது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றதும் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் நூறு நாள் பயிற்சியின் போது வழங்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் தான் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, வெளியுறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

 மோடி அரசின் அணுகுமுறை

மோடி அரசின் அணுகுமுறை

யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தரவரிசை அடிப்படையில் இனி பணிகள் ஒதுக்கப்பட மாட்டாது. இது ஒரு வகையான தரப்படுத்துதல் முயற்சியாகும். தாய்மொழியில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற்று வரும் சாதாரண கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட பின்தங்கிய, பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களை இந்தியக் குடிமைப் பணிகளில் நுழைய விடாமல் தடுக்கும் சதித் திட்டமாகும். சமூக நீதிக்கு எதிரான மோடி அரசின் இதுபோன்ற செயல்பாடுகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.

 இந்துத்வா கும்பலின் திட்டம்

இந்துத்வா கும்பலின் திட்டம்

இத்தகைய மாற்றத்தின் மூலம் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மைப் பயிற்சி நிறுவனத்திற்கு பா.ஜ.க அரசு உத்தரவிட்டால், இந்திய நிர்வாகத் துறையில் தங்களுக்கு வேண்டியவர்களை பணியில் அமர்த்த முடியும். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா கும்பல் ஆட்டிப்படைக்க முடியும் என்று கருதுகின்றன. இந்துத்துவா கோட்பாட்டின் மூலவரான சாவர்கர், இந்திய ராணுவத்தை இந்து மயமாக்கு என்று கூறியதை, அவர் வழி வந்தவர்கள் நிர்வாகத் துறையை இந்து மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

 ஜனநாயக முற்போக்கு சக்திகள்

ஜனநாயக முற்போக்கு சக்திகள்

மோடி அரசின் இதுபோன்ற மோசமான நடிவடிக்கைகள் இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு வேட்டு வைத்துவிடும் என்பதை உணர்ந்துகொண்டு தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் குடிமைப் பணிகள் தேர்வு முறையில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களை கடுமையாக எதிர்க்க வேண்டும். பா.ஜ.க. அரசின் இத்தகைய பாசிசப் போக்குகளை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Hindutva groups planning to occupy Administration System says Vaiko. MDMK General Secretary Vaiko says that, Rules that has to changed in Civil Services is to Capture the Administration System .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X