• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தின் திருப்பதியை கபளீகரம் செய்த ஆந்திரா.... தீரமிகு வடக்கு எல்லை மீட்பு போராட்டம்

By Mathi
|

- கே.எஸ். ராதாகிருஷ்ணன்

முன்பு தமிழ்ப் பகுதிகளாக இருந்து இப்போது ஆந்திராவுடன் இணைக்கப் பட்டுள்ள சித்தூர் மாவட்டத்தில் 19,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் பெரும் பகுதியும், 13,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு உள்ள நெல்லூர் மாவட்டத்தின் கணிசமான பகுதியும் தமிழகத்துடன் சேர்ந்து இருக்க வேண்டியது ஆகும். ஆனால், அவை தமிழகத்துடன் இணைக்கப்படாமல் போனதால், வடபெண்ணாறு, ஆரணியாறு, பொன் வாணியாறு முதலியவற்றின் வளமான மண் தமிழகத்திற்கு இல்லை என்றாகி விட்டது.

ஆரணி ஆற்றின் பாசனப் பகுதி தமிழ்நாட்டில் இருந்தாலும், அணைக்கட்டுப் பகுதி ஆந்திராவுக்குப் போய்விட்டது.

History of struggle for Thiruthani, Thirupathi in 1950's

கடந்தகால எல்லைப் பிரச்சினைகளை சரி செய்யாததால், சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்குவதற்காக செய்து கொண் ஒப்பந்தத்தை, 30 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் ஆந்திர மாநிலம் முழுமையாக நிறைவேற்றவில்லை. வட தமிழ்நாட்டின் குடிநீருக்கும், பாசனத்திற்கும் இன்றியமையாத பாலாற்றின் குறுக்கிலும், சித்தூர் மாவட்டம் கணேசபுரத்தில் ஆந்திர மாநிலம் புதிய அணை கட்டுவதால் வேலூர், காஞ்சி மாவட்டங்கள் பாதிக்கப்படும்.

1949இன் இறுதியில் சென்னையில் தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. 'தமிழக எல்லை மாநாடு' நடத்தினார். மத்திய நிதி அமைச்சராக இருந்த டாக்டர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் இம்மாநாட்டிற்கு தலைமை வகித்தார்.

சென்னை மாநில முதல் அமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜா இம்மாநாட்டில் கலந்து கொண்டார். 'வட வேங்கடம் முதல் தென் குமரி வரை உள்ள தமிழகத்தை அமைக்க வேண்டும்' என்ற தீர்மானத்தை ம.பொ.சி. முன்மொழிய தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கடந்த காலங்களில் ஆங்கிலேயரின் தவறான நிர்வாகத்தால் இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனம் மற்றும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் சரியாக அமையவில்லை. ஆங்கிலேயர் சூழ்ச்சியால் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தனர். வங்கப் பிரிவினையை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. அதே சமயத்தில், அய்க்கிய தமிழகம், விசால ஆந்திரம், நவ கேரளம், அகண்ட கர்நாடகம், சம்யுக்த மகாராஷ்டிரம், மகா குஜாõத் என மொழிவாரியான மாநிலக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

History of struggle for Thiruthani, Thirupathi in 1950's

பொட்டி ஸ்ரீராமுலுவின் உயிர்த் தியாகம்

தெலுங்கு பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் கோரி சென்னையில், பொட்டி ஸ்ரீராமுலு தொடங்கிய 65 நாள் உண்ணாவிரதம் அவரது மரணத்தில் முடிந்தது. அதனால், இப்போராட்டம் ஆந்திரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதன் விளைவாக கர்நூல் நகரைத் தலைநகரகமாகக் கொண்டு ஆந்திரம் தனி மாநிலமாக ஆக்கப்பட்டது. ஆந்திரர்கள், தமிழகத்திற்குச் சொந்தமான வேங்கட மலையையும் தம் வசப்படுத்திக் கொண்டது மட்டும அல்லாமல், 'மதறாஸ் மனதே' என்ற முழக்கத்தையும் முன்வைத்து பொருளற்ற முறையில் போராடினார்கள்.

சென்னை உரிமைப் போர்

மத்திய அரசால் சென்னையைக் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நீதிபதி வாஞ்சுக் குழு, இடைக்காலமாக ஆந்திராவின் தலைநகராக சென்னை இருக்கலாமெனப் பரிந்துரை செய்தது. இதைக் கண்டித்து வாஞ்ச் குழுசிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், 'சென்னை நகரம் தமிழருக்கே' என வலியுறுத்திதி மனு கொடுப்பப்பட்டது. முதல்வர் இராஜாஜியும் குழுவின் பாரிந்துரையை எதிர்த்தார்.

சென்னை மேயர் த.செங்கல்வராயன், ம.பொ.சி. ஆகியோர் 13.12.1953 அன்று சென்னை மாநகர் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டினார்கள். 'சென்னை நகரம் தமிழருக்கே உரியது' என வலியுறுத்தும் தீர்மானம் இதில் நிறைவேற்றப்பட்டது. 16.3.1953 அன்று சென்னைக் கடற்கரையில் கட்சி சார்பற்ற பொதுக் கூட்டத்தை மேயர் செங்கல்வராயன் கூட்டினார். இக்கூட்டத்தில் தந்தை பெரியார், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் எல்.எஸ். கரையாளர், மீனாம்பாள் சிவராஜ், எஸ். முத்தையா முதலியார், எம். பக்தவத்சலம், ம.பொ.சி. ஆகியோர் பேசினர். 'சென்னை நகரம் தமிழருக்கே உரியது' என்ற தீர்மானம் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக நேருவைச் சந்தித்த முதல் அமைச்சர் இராஜாஜி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். " சென்னைப் பட்டினத்தை ஆந்திராவிடம் தருவது என மத்திய அரசு முடிவு எடுக்குமானால் அதை அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்புத் தரும் சக்தி எனக்கு இல்லை. இந்த நிலையில் வேறு முதல் அமைச்சரைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள் எனப் பிரதமரிடம் கூறிவிட்டேன்" எனக் கூறினார். டில்லியில் இருந்து திரும்பியவுடன் இராஜாஜி, ம.பொ.சி.யிடம் இப்பிரச்சினைக் குறித்துப் பேசினார். 'சென்னை நகரைப் பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கும், ஆந்திராவுக்கும் பொதுத் தலைநகரமாக ஆக்க நேரு முடிவு செய்து விட்டார் என்றும், அவ்வாறு நேருமானால் நான் முதல் அமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும்' அச்சமயம் இராஜாஜி கூறினார்.

செட்டி நாட்டு அரசர் இராஜா சர்.எம்.ஏ. முத்தையா செட்டியார், ம.பொ.சி. ஆகியோர் கலந்து பேசி, சென்னை நகரின் மீது தமிழர்களுக்கு உள்ள உரிமையை வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரிக்குத் தந்திகள் அனுப்பும் இயக்கத்தை நடத்தினர். நகர சபைகள், வணிக நிறுவனங்கள், காங்கிரஸ் குழுக்கள், தமிழ் இலக்கிய மன்றங்கள் ஆகியவற்றின் சார்பில் லால்பகதூர் சாஸ்திரிக்கு சுமார் 2,000க்கும் மேற்பட்ட தந்திகள் அனுப்பி வைக்கப்பட்டன. சாஸ்திரியை காமராஜர் சந்தித்தபோது, அவர் தமிழ்நாட்டில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான தந்திகள் பற்றி கூறினார். சென்னை நகரை பற்றிய மத்திய அரசின் முடிவினை மறுபரிசீலனை செய்வதாகவும் சாஸ்திரி காமராஜரிடம் உறுதி கூறினார்.

மேயர் செங்கல்வராயன் தலைமையில் கூட்டப்பட்ட சென்னை மாநகராட்சியின் சிறப்புக் கூட்டத்தில், 'சென்னை நகரை இரண்டாகப் பிரிப்பதோ, ஆந்திர - தமிழக அரசுகளின் பொதுத் தலைநகரமாக ஆக்குவதோ, மத்திய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக செய்வதோ, ஆந்திரத்தின் இடைக்கால தலைநகராகவோ ஆக்கக் கூடாது' என்ற தீர்மானத்தை ம.பொ.சி. முன்மொழிய, முன்னாள் மேயர் எம். இராதாகிருஷ்ணன் வழிமொழிந்தார்.

25.3.1953 அன்று நாடாளுமன்றத்தில் ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பை பிரதமர் நேரு வெளியிட்டார். 'ஆந்திராவின் தலைநகரம் ஆந்திர எல்லைக்கு உள்ளேயே இருக்கும்' என அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழர்களின் கவலையைப் போக்கி மகிழ்ச்சியைத் தந்தது.

ஆந்திரா - வடக்கு எல்லைப் பிரச்சினை

சென்னை ராஜ்யத்தில் 1911 மார்ச் வரை சித்தூர் மாவட்டம் என்ற ஒன்று கிடையாது. முதன்முதலாக 1.4.1911இல் வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்த திருத்தணிகை, புத்தூர், சித்தூர், திருப்பதி, திருக்காளத்தி, பல்லவனேரி ஆகிய ஆறு தாலுக்காக்களைப் பிரித்து, அவற்றுடன் ஆந்திர மாநிலம் கடப்பையில் இருந்து பிரிக்கப்பட்ட மதனபள்ளி, வாயல்பாடி ஆகிய இரண்டு தாலுக்காக்களையும் சேர்த்துப் புதிதாக சித்தூர் மாவட்டம் உருவானது. வட ஆர்க்காடு மாவட்டம் எளிதில் நிர்வகிக்க இயலாதபடி அளவில் பெரியதாக இருந்ததால், தமிழர்கள் வாழ்ந்த சித்தூர் பகுதியை பிரித்து புதிய மாவட்டத்தை உருவாக்கியதாக ஆங்கிலேயர் கூறினர்.

அப்போதே அதற்குத் தமிழரிடம் இருந்து எதிர்ப்பு ஏற்பட்டதாகவும், சென்னை ராஜ்யம் மொழிவாரியாகத் திருத்தி அமைக்கப்படுங்கால், வட ஆர்க்காடு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகள் திரும்பவும் தமிழகத்திற்குத் தரப்படும் என்றும் அரசின் சார்பில் உறுதி கூறப்பட்டதாகத் தெரிகிறது. சித்தூர் மாவட்டம் படைப்பில் இரு மொழி மாவட்டமாக இருப்பினும், அரசாங்க நிர்வாகத்தில் தமிழ் மாவட்டமாகவே கருதப்பட்டு வந்தது. சித்தூர் மாவட்டமானது தமிழர்த் தாலுக்காக்களையும் தெலுங்கு தாலுக்காக்களையும் கொண்ட இருமொழிப் பிரதேசமாக இருந்தாலும் நில அமைப்பிலே அதன் தமிழ்த் தாலுக்காக்கள் தனிப் பிரிவாகவே அமைந்தன. சித்தூர் மாவட்டத்தில் தமிழ் வழங்கும் தெற்குப் பகுதி விரிந்த நிலப்பரப்பையும், தெலுங்கு வழங்கும் வடக்குப் பகுதி மலைத் தொடராகவும் இருந்தது.

தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகள் பற்றிய பிரச்சினைக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் காமராஜர், 'தமிழ்நாடு எல்லைக் குழு' என்ற பெயரில் ஒது தனி அமைப்பை 1949இல் அமைத்தார். இதற்குத் தலைவராக சி.என். முத்துரங்க முதலியார் நியமிக்கப்பட்டார். ஆந்திர எல்லைகளில் உள்ள தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட வேண்டும் என இந்தக் குழு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

வடக்கு எல்லை மீட்புப் போராட்டம்

மாநிலப் பிரிவினையின்போது, ஆந்திர மாநிலத்துடன் சேர்க்கப்பட்டுவிட்ட தமிழகத்தின் வடக்கு எல்லையான திருத்தணி, திருப்பதி பகுதிகளைத் தமிழகத்திற்குப் பெற சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நடத்திய போராட்டங்கள் வரலாற்றில் இடம்பெற்று உள்ளன.

தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் தலைமையில் 'வடக்கு எல்லைப் பாதுகாப்புக் குழு' ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் செயலாளராக கே. விநாயம் தேர்ந்து எடுக்கப்பட்டார். இக்குழுவில் மங்கலங்கிழார், சித்தூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் சி.வி. சீனிவாசன், தணிகை என். சுப்பிரமணியம், தியாகராசன், சுப்பிரமணிய முதலியார், சித்தூர் வழக்கறிஞர் என். அரங்கநாத முதலியார், திருவாலங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் திருமலைப் பிள்ளை, காஞ்சி ஜோதிடர் சடகோபாலாச்சாரியார், ந.அ. ரசீத் ஆகியோர் அங்கம் வகித்தனர். திருத்தணி, சித்தூர் நகரம், நகரி ஆகிய ஊர்களில் வடக்கு எல்லைப் பாதுகாப்பு மாநாடுகளை இக்குழு நடத்தியது. இம்மாநாடுகளில் ம.பொ.சி., செங்கல்வராயன், திருமதி சரசுவதி பாண்டுரங்கன், முன்னாள் அமைச்சர் குருபாதம் மற்றும் பலரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

திருப்பதி மீது படையெடுப்பு

ம.பொ.சி. அவர்கள் கோ.மோ. ஜனார்தனம், சோமா. சுவாமிநாதன், ஆ. தாமோதரன். சி. வேங்கடசாமி, ஆ.வை. கிருஷ்ணமூர்த்தி, அம்மையப்பன், விசுவநாதன், ஆ. லூயிஸ், மு. வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி. சுப்பிரமணியம் ஆகியோருடன் 'திருப்பதி மீது படையெடுப்பு' என்ற போராட்டத்தையும், அதற்கான பிரச்சாரப் பணிகளையும் மேற்கொண்டார். மங்கலங்கிழார் என்பவரின் அழைப்பை ஏற்று வடஎல்லைப் பகுதிக்கு புகைவண்டி மூலமாக ம.பொ.சி. திருப்பதி வரை செல்லப் பயணப்பட்டார்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் ம.பொ.சி.யின் போராட்டத்தை வரவேற்றனர். ம.பொ.சி.யின் திருப்பதி நுழைவைத் தடுக்கப் பலர் முனைந்தும், கீழ் திருப்பதியில் உள்ள குளக்கரைக் கூட்டத்தில் ம.பொ.சி. பேசும்பொழுது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு, மரங்களில் இருந்து கிளைகளை முறித்து வீசினர். இருப்பினும் ம.பொ.சி. சற்றும் அதைப் பொருட்படுத்தாமல், 'வேங்கடத்தை விட மாட்டோம்' என்று ஒரு மணி நேரம் மேடையில் கர்ஜித்தார். போராட்டம் வேகம் அடைந்தது.

சித்தூர், திருப்பதி ஆந்திரத்திடம் ஒப்படைக்கப்பட்டதற்காக ம.பொ.சி. பெரும் கவலை அடைந்தார். திருப்பதி, சித்தூர், திருக்õளத்தி, திருத்தணி, பல்லவநேரி, கங்குந்தி குப்பம் போன்ற பகுதிகளை நியாயமாக தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினர்.

09.04.1954இல் இருந்து 24.4.1953 வரை கடை அடைப்பும், பொது வேலை நிறுத்தமும் தொடர்ந்து 15 நாள்கள் மறியல், போராட்டம் நடைபெற்றது. புத்தூர் கலவரத்தில் ம.பொ.சி.யைத் தாக்க சதித் திட்டம் தீட்டப்பட்டது. அந்தக் கலவரத்தில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ம.பொ.சி.யைக் காப்பாற்றியதாகவும், இவரை 'நெல்லைத் தமிழன்' என்று ம.பொ.சி. பாராட்டியதாகவும், ம.பொ.சி. போராட்ட வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1953ஆம் ஆண்டு ஜுன் 3ஆம் தேதி எல்லைத் தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைரு செய்யப்பட்டு 6 மாத சிறைத் தண்டனையை ம.பொ.சி. பெற்றார்.

சித்தூர் தினம்

வடக்கு எல்லையை மீட்கும் போராட்டத்திற்குத் தமிழக மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக 5.4.1953 அன்று தமிழகம் எங்கும் 'சித்தூர் தினம்' கொண்டாடும்படி வடக்கு எல்லைப் பாதுகாப்புக் குழு அறிக்கை வெளியிட்டது. அதற்கு இணங்க, தமிழகத்தின் பல பகுதிகளில் ஊர்வலங்களும், பொதுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பிரதமர் நேருவுக்கு அனுப்பப்பட்டன. சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்த் தாலுக்காக்களில் கடை அடைப்பும், வேலை நிறுத்தமும் நடத்தப்பட்டன.

12.5.1953 அன்று மீண்டும் ஒரு மறியல் போராட்டத்தை, வடக்கு எல்லைப் பாதுகாப்புக் குழு தொடங்கிற்று. மே 18ஆம் தேதியன்று புத்தூரில் ம.பொ.சி. அவர்கள் பேசவிருந்த ஒரு கூட்டத்தில் ஆந்திரர்கள் பெரும் கலவரம் செய்தார்கள். இதையொட்டி தடியடிப் பிரயோகம் செய்து கூட்டத்தைப் போலிஸ் கலைத்தது. ம.பொ.சி., கே. விநாயகம், மங்கலங்கிழார், தியாகராஜன், சித்தூர் சீனிவாசன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

நேரு அறிவிப்பு

ஜூன் 22ஆம் தேதி திருத்தணி தாலுக்கா முழுவதும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை வடக்கு எல்லைப் பாதுகாப்புக் குழு தொடங்கிற்று. ஜூலை 4ஆம் தேதி பிரதமர் நேரு ஒரு முக்கிய அறிவிப்பை செய்தார். 'சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பகுதிகள் குறித்து விசாரிக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எல்லைக் கமிஷன்கள் அமைக்கப்படும்' என அறிவித்தார். நேருவின் இந்த அறிவிப்பை ஏற்று வடக்குப் பாதுகாப்புக் குழு தனது போராட்டத்தை நிறுத்திக் கொண்டது. இரண்டு வாரங்களாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் கள் சிறை சென்றனர்.

ஆந்திரத் தலைவர்களான என். சஞ்சீவ ரெட்டி, பிரகாசம் ஆகியோர் சித்தூர் மாவட்டம் பற்றிய விசாரணை நடத்த எல்லைக் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டனர். சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி, திருக்காளத்தி, சித்தூர், திருத்தணி, பல்லவநேரி, கங்குந்திக் குப்பம் ஆகிய ஆறு தாலுக்காக்களைத் தமிழகத்தில் சேர்க்க வேண்டும் என்று வடக்கு எல்லைப் பாதுகாப்புக் குழு வற்புறுத்தியது.

சட்டமன்றத்தில் விவாதம்

ஜூலை 17,18 தேதிகளில் எல்லைக் கமிஷன் கோரிக்கை பற்றிய பல்வேறு திருத்தங்கள் மீது வாக்குவாதமும் வாக்குப் பதிவும் சட்டமன்றத்தில் நடந்தன.

'சித்தூர் தமிழ்ப் பகுதிகளுக்கு எல்லைக் கமிஷன் அனுப்ப வேண்டும்' என்று கே. விநாயகம் கொண்டு வந்த திருத்தத்தை காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. உழைப்பாளர் கட்சியினர், காமன்வீல் கட்சியினர், பிரஜா சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தமிழர்களும் ஒட்டுமொத்தமாக வாக்கு அளித்தனர்.

அச்சமயத்தில், திருத்தணி ஊராட்சி மன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றபோது, வடக்கு எல்லைப் பாதுகாப்புக் குழுவின் சார்பில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களில் 9 பேர் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் திருத்தணி தமிழகத்துக்கே சொந்தமானது என்பது உறுதியானது.

காமராசர் - கோபால் ரெட்டி சந்திப்பு

நேரு அளித்த வாக்குறுதிக்கு இணங்க எல்லைக் கமிஷன் அமைக்கப் படவில்லை. இப்பிரச்சினையைப் பற்றித் தங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்வதாக தமிழக முதல் அமைச்சர் காமாரஜர், ஆந்திர முதல்வர் கோபால ரெட்டி ஆகியோர் அறிக்கை வெளியிட்டார்கள். அதன்படி சென்னையில் இரு முதல்வர்களும் சந்தித்துப் பேசினர்.

வடவேங்கடம் போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் செல்லாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஒரு காலத்தில் வட ஆர்க்காடு மாவட்டத்தில் இருந்த சித்தூர், திருப்பதி ஆகியவற்றை ஆந்திரர் எடுத்துக்கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓசூர் தாலுக்காவை கொடுத்தாலன்றி சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்க் கிராமங்களை தமிழகத்திற்குத் தர இயலாது என்று ஆந்திரத் தூதுக் குழு கூறியது. ஆனால், தமிழக முதல் அமைச்சர் காமராசர் இதை ஏற்க மறுத்து விட்டதால் பேச்சுவார்த்தை முறிந்தது.

இப்பிரச்சினை குறித்து திரும்பவும் திருப்பதியில் காமராஜரும், சஞ்சீவ ரெட்டியும் பேசியதன் விளைவாக தமிழக . ஆந்திர ச் சட்டமன்றங்களில் ஒரே நாளில் மாநிலங்கள் அமைப்பும் எல்லைகளைக் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின் இன்றைய தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் என பிரிக்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Here the History of Struggle for Thiruthani, Thirupathi in 1950's.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more