For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் எப்படி எழுத்தாளன் ஆனேன் – குட்டிக்கதை சொன்ன கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

How karunanidhi became a writer?
சென்னை: தான் எப்படி எழுத்தாளன் ஆனேன் என்பது குறித்து சுவாரஸ்யமாக விளக்கியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

சென்னையில் நேற்று நடந்த திமுக முப்பெரும் விழாவின்போது இதைச் சொன்னார் கருணாநிதி.

கருணாநிதியின் பேச்சு:

நான் எப்படி எழுத்தாளன் ஆனேன் என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டும். இதுவரை சொல்லாத ஒரு ரகசியம் அது. பேனா கிடைத்தது, அதனால் எழுதினேன், எழுத்தாளன் ஆனேன் என்று சொல்லி விடலாம். அதல்ல. 1945ஆம் ஆண்டு புதுவை மாநிலத்திலே ஒரு நிகழ்ச்சியிலே கலந்து கொண்ட எதிர்க்கட்சிக்காரர்கள் என்னை குறி வைத்து தாக்கினார்கள்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனையும், என்னையும் தாக்குவது என்று ஒரு நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்தச் செயலைச் செய்து முடிப்பது என்று எண்ணி, என்னைத் தாக்கத் தலைப் பட்டார்கள். என்னுடைய நண்பர், திருவாரூர் டி.எஸ். ராஜகோபால் என்பவரும் நானும் இணைந்து புரட்சிக் கவிஞர் மீது ஒரு அடியும் படாமல் அவரைக் காப்பாற்றி அங்கிருந்த ஒரு வண்டியில் ஏற்றி அவரை அனுப்பி வைத்தோம். நான் சிக்கிக் கொண்டேன்.

புரட்சிக் கவிஞர் நல்ல திடகாத்திரமான ஆஜானுபாகுவாக இருக்கக் கூடியவர். கம்பீரமானவர். நாங்கள் சிக்கிக் கொண்டோம். சிக்கிக் கொண்ட போது, புதுவையில் என்னை அடித்து நொறுக்கி இன்றைக்கும் என்னுடைய முகத்திலே பல தழும்புகள் இருக்கின்ற அளவிற்கு காயங்களை ஏற்படுத்தி கீழே போட்டு விட்டுச் சென்று விட்டார்கள். அதற்குப் பிறகு தந்தை பெரியார் அவர்கள் - அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் - என்னைத் தூக்கி, என்னைச் சீராட்டி, பிறகு கண் கலங்கச் சொன்னார்கள்.

"யார் பெற்ற பிள்ளைகள் எல்லாம் எனக்காக அடிபடுகிறார்கள், உதை படுகிறார்கள்" என்று சொன்னார்கள். அப்போது நான் யார் என்று கூட அவருக்குத் தெரியாது. "யார் பெற்ற பிள்ளைகளோ" என்று சொல்லுகின்ற அந்த வரிசையிலே தான் நான் இருந்தேன். என்னை அதற்குப் பிறகு பெரியாருடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அந்தக் "குருகுலத்திலே" என்னை இணைத்தார்கள்.

அங்கே இருந்த போது தான், ஒரு நாள் இரவு 12 மணி அளவில் கண்விழித்து ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதை தான் - புறநானூற்றுப் பாடலை அடிப்படையாக வைத்து நான் எழுதியது.

குடிசைதான்! ஒரு புறத்தில்
கூரிய வேல்வாள்
வரிசையாய் அமைத்திருக்கும் - வையத்தைப்
பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்
வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும்;
மிளிரும்
புலியின் குகையினிலே அழகில்லை -
புதுமையல்லன்று!
கிலியும் மெய் சிலிர்ப்பும்
கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டா
மானத்தின் உறைவிடம் -
மறவன் மாளிகை!
இல்லத்து வாயிலிலே
கிண்ணத்துச் சோற்றோடு
வெல்லத்தைச் சிறிது கலந்து
வயிற்றுக்குள் வழியனுப்பப்
பொக்கை வாய்தனைத் திறந்து
பிடியன்னம் எடுத்துப் போட்டாள்
பெருநரைக் கிழவி யொருத்தி.
ஓடி வந்தான் ஒரு வீரன்
"ஒரு சேதி பாட்டி!" என்றான்.
ஆடிவந்த சிறுமிபோல்
பெருமூச்சு வாங்குகின்றாய்
ஆண் மகனா நீ தம்பி!
மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும். பின்,
பேச்சுக்குத் தொடக்கம் செய் என்றாள் அந்தக்
கிண்டலுக்குப் பேர்போன
கிழட்டு தமிழச்சி!

வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி - உன்
வாடிக்கைக் கேலியை விட்டுவிடு.
‘மடிந்தான் உன் மகன் களத்தில்'
என்றான் - மனம்
ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை!
"தாயம் ஆடுகையில் காய்களை
வெட்டுவதுண்டு-களமும் அதுதான்.
காயம் மார்பிலா? முதுகிலா?
கழறுவாய்" என்றாள் - முதுகிலென்றான்.
கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனன்;
வாளை எடுத்தனள்.

முழவு ஒலித்த திக்கை நோக்கி
முடுக்கினாள் வேகம்!
"கோழைக்குப் பால் கொடுத்தேன்
குற்புற வீழ்ந்து கிடக்கும்
மோழைக்குப் பெயர்
போர் வீரனாம்! முன்பொருநாள்
பாய்ந்துவந்த ஈட்டிக்குப்
பதில் சொல்ல மார்பைக் காட்டிச்
சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர்.
அவருக்குப் பிறந்தானா?
அடடா மானமெங்கே - குட்டிச்
சுவருக்கும் கீழாக வீழ்ந்து பட்டான்.
இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும் - இங்கு
வீணை நம்பினிலே இசை துடிக்கும்.
அதுவும் மானம் மானமென்றே ஒலிக்கும்!
மதுவும் சுறாவும் உண்டு வாழும்
மானமற்ற வம்சமா நீ - ஏடா
மறத் தமிழ்க் குடியிலே மாசு தூவி விட்டாய்
மார்பு கொடுத்தேன்
மகனாய் வளர்த்தேன் -
தின்று கொழுத்துத்
திமிர் பாய்ந்த தோள்களெங்கே?
தினவெடுக்கவில்லையா? அந்தோ!
வேலுக்கு வழி சொல்ல வகையற்ற
கோழையே - என் வீரப்
பாலுக்கு வழி சொல்வாய்!!
என்று கதறினாள்
எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி.
சென்றங்குச் செரு முனையில்
சிதறிக் கிடந்த
செந்தமிழ்க் காளைகளைப்
புரட்டிப் பார்த்தாள் - அங்கு
நந்தமிழ் நாட்டை காக்க
ஓடிற்று ரத்த வெள்ளம்!
பிணக்குவியலிலே பெருமூச்சு
வாங்க நடந்தாள்!
மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை - மகன்
பிறந்த போதும் மகிழ்ச்சிக்கு
எல்லையுண்டு - அவன்
இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி!
இதைக் கண்டாள் - இதயங் குளிர்ந்தாள்!
""எதைக் கண்டாலும் இனிக் கவலை இல்லை
என் மகன் வீரனாய் இறந்தான்" என்றாள்.
அறுத்தெறிய இருந்தேன்
அவன் குடித்த மார்பை - அடடா!
கருத்தெரியப் பொய் சொன்ன கயவனெங்கே?
வாளிங்கே! அவன் நாக்கெங்கே?"
என்று நாக்கை அறுப்பதற்குக் கேட்டாள் தமிழ்த் தாய். புறநானாற்றுத் தாய்!

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இங்கே தாய்மார்கள் வந்திருக்கிறீர்கள். அந்தத் தாயை மனதிலே நினைத்துக் கொண்டு, நம்முடைய வீட்டுப் பிள்ளைகள், வீரர்களாக விளங்க, இனமான உணர்ச்சி பெற்றவர்களாக விளங்க அவர்களை வளர்த்து ஆளாக்குங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்வதற்காகத் தான் - இறந்தாலும் புகழ் சாகாது, இறந்தாலும் பெயர் மாறாது என்ற அந்த உணர்வோடு நாம் நம்முடைய வீட்டுப் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த இனிய நிகழ்ச்சியிலே எடுத்துச் சொல்லி, இதை மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

English summary
DMK president Karunanidhi explained how he became a writer in DMK mupperum vizha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X