திமுக சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடத் தயார்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

சென்னை: திமுக சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடத் தயார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தமிழ் படங்களில் நடித்து வருகின்றார். ஒரு கல் ஒரு கண்ணாடி, சரவணா, மனிதன், நண்பேன்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்த்திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அண்மையில் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின் தான் அரசியலுக்க வருவதற்கான நேரம் வந்துவிட்டதாக கூறினார்.
இந்நிலையில் ஆலந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தேர்தலில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் திமுக சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடத் தயார் என்றார். மேலும் தான் பிறந்ததில் இருந்தே அரசியலில்தான் இருக்கிறேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் தன்னை பொறுத்தவரை முக ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் அவர் கூறினார். ரஜினி கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.