For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டு தடைபட்டதற்கு அதிமுக அரசின் அலட்சியமே காரணம்.. சசிகலாவுக்கு ஐ..பெரியசாமி பதிலடி !

“ஜல்லிக்கட்டு” இன்றைக்கு தடைபட்டிருக்கிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க அதிமுக அரசின் அலட்சியமே காரணம் என்று தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழர்களின் வீர விளையாட்டான "ஜல்லிக்கட்டு" இன்றைக்கு தடைபட்டிருக்கிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க அதிமுக அரசின் அலட்சியமே காரணம்! இதை "கூகுளில்" தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. "கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை" என்பது போல் அதிமுக அரசின் தோல்வியை கண்டுபிடிக்க கூகுளில் தேட வேண்டிய அவசியமில்லை என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை" திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியிருப்பதாக அதிமுகவின் "புதிய" பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் முதல் அரசியல் அறிக்கை ஒன்றை விட்டிருக்கிறார். அந்த அறிக்கை முழுவதும் படித்துப் பார்த்தேன்.

 I periyasamy Has condemned on sasikala statement about jallikattu

எந்த வரியிலாவது "சட்ட பாதுகாப்புகளுடன் ஜல்லிக்கட்டு விளையாட்டை அதிமுக ஆட்சியில் நடத்தினோம்" என்று ஏதாவது வரிகள் இருக்குமா என்று தேடிப் பார்த்தேன். அப்படியொரு வரியை அந்த அறிக்கையில் சசிகலா நடராஜனால் சொல்ல முடியவில்லை. அதிலிருந்தே "ஜல்லிக்கட்டு விளையாட்டை பாதுகாப்புடன் நடத்த முடியாமல் அதிமுக ஆட்சி தோற்று விட்டது" என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அலங்காநல்லூரில் தளபதி அவர்களுக்கு வந்த கூட்டத்தையும், இளைஞர்களின் ஆரவாரத்தையும் பார்த்து அதிமுகவிற்கு "அலர்ஜி" ஏற்பட்டு, "பீதியில்" இந்த அறிக்கை வெளிவந்திருக்கிறது என்பதைத் தவிர சசிகலா நடராஜனின் அறிக்கையில் வேறு ஏதுமில்லை. தளபதி அவர்கள் மிக அழகாக "ஜல்லிக்கட்டு தி.மு.க.விற்கும், அதிமுகவிற்கும் அல்ல" என்று சுட்டிக்காட்டி முதலமைச்சர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சட்டமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை கோடிட்டுக் காட்டினார்.

50 எம்.பி.க்களை வைத்திருக்கிறீர்களே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் என்று தான் கோரிக்கை வைத்தார். ஆனால் அதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் திருமதி சசிகலா நடராஜன் இப்படியொரு "வெத்து வேட்டு" அறிக்கை வெளியிடுகிறார் என்றால் எங்கே முதலமைச்சர் பன்னீர்செல்வம் தளபதிக்கு பதில் சொல்லி ஏதாவது அறிக்கை விட்டு விடப் போகிறார் என்ற அச்சத்தில் தானே தவிர வேறு ஏதும் இல்லை.

ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு தி.மு.க. அரசு கொண்டு வந்தது போன்றதொரு அவசரச் சட்டத்தை ஏன் "நுணுக்கமான வாதங்கள்" தெரிந்த அதிமுக ஆட்சி கொண்டு வரவில்லை? 50 எம்.பி.க்களை வைத்திருக்கும் அதிமுக மத்திய அரசை அவசரச் சட்டம் கொண்டு வரச் சொல்லி ஏன் வலியுறுத்தி சாதிக்க முடியவில்லை? ஸ்டாலினின் நியாயமான இந்த கேள்விகளுக்கு சசிகலா நடராஜனால் பதில் சொல்ல முடியவில்லை.

"சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்" என்பது போல் அதிமுக அரசு ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த ஏதாவது துரும்பை எடுத்துப் போட்டிருந்தால் தானே, விளக்கிட முடியும். அதற்கும் வழி இல்லை. தளபதி அவர்கள் எழுப்பிய கேள்வியைத் தான் இன்றைக்கு ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த வேண்டும் என்று துடிக்கும் தென் மாவட்ட இளைஞர்கள் அனைவரின் கேள்வியாகவும் இருக்கிறது என்பது சசிகலா நடராஜனுக்கு தெரியாமல் போயிருக்கலாம். அதற்கு தி.மு.க. பொறுப்பாக முடியாது.

சசிகலா நடராஜன் இது மாதிரி அறிக்கைகளை விடும் முன்பு "கூகுளை" தேடிப் பார்க்க வேண்டாம். தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாம். இருந்தாலும் இப்போது இந்த அறிக்கை வாயிலாக ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தி.மு.க. எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிடுகிறேன். இந்த அறிக்கையையாவது பத்திரமாக வைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு பற்றி எதிர்காலத்தில் அறிக்கை விடும் போது கவனமாக தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஜல்லிக்கட்டுக்கு 29.3.2006 அன்று முதலில் தடை விதித்தது. உடனடியாக போர்க்கால வேகத்தில் செயல்பட்ட கழக அரசின் தீவிர சட்ட நடவடிக்கையால் அதே மதுரை உயர்நீதிமன்றம் "ஜல்லிக்கட்டு விளையாட்டை முறைப்படுத்தி நடத்தலாம்" என்று 9.3.2007 அன்று அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. அரசாங்கத்தில் உள்ள ஜல்லிக்கட்டு தொடர்புடைய கோப்புகளில் இது இருக்கும்.

இந்த விவரத்தை இல்லையென்று சசிகலா நடராஜனால் மறுக்க முடியுமா? கழக அரசு பெற்ற இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதன் விளைவாக 27.7.2007 அன்று "ஜல்லிக்கட்டு நடத்தலாம்" என்ற மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் கழக அரசு சும்மா இருந்து விடவில்லை. தமிழகத்தின் பாரம்பரியத்தை, பாரம்பரிய கலாச்சாரத்தை எடுத்து வைத்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக ஆக்க பூர்வமாக வாதிட்டது. அந்த வாதத்தின் பலனாக, "காளைகளை பாதுகாக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து

ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தலாம்" என்று 15.1.2008 அன்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. கழக அரசின் இந்த நடவடிக்கையை இல்லையென்று சசிகலா நடராஜனால் சொல்ல முடியுமா? அதன் பிறகு ஜல்லிக்கட்டு விளையாட்டை பாதுகாப்புடன் நடத்த "ஜல்லிக்கட்டு முறைப்படுத்தும் சட்டம்"-2009- யை கொண்டு வந்ததும் கழக அரசு தான். இந்த சட்டத்தின் படி ஜல்லிக்கட்டு விளையாட்டை ஜாம் ஜாம் என்று நடத்திக் காட்டியதும் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு தான்...

கழக ஆட்சியில் சிறப்புச் சட்டம் கொண்டு வந்து நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு பேராபத்து வந்தது அதிமுக ஆட்சியில் தான். இதை ஏதோ "வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ" என்று தளபதி அவர்கள் சொல்லவில்லை. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து 7.5.2014 அன்று வழங்கிய தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டியதைத்தான் அலங்காநல்லூர் ஆர்பாட்டத்தில் அடுக்கடுக்காக எடுத்து வைத்துப் பேசினார்.

அந்த உச்சநீதிமன்ற தீர்ப்பில், "தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி பாதுகாப்புடன் நடைபெறுகிறதா என்பதை தேசிய விலங்கு வாரிய அதிகாரிகள் இருவர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்தனர். அவர்கள் 14.1.2013 அன்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டையும், 15.1.2013 அன்று பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டையும், 16.1.2013 அன்று அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டையும் பார்வையிட்டார்கள். அதன்படி டாக்டர் மணிலால் வல்லியேட், அபிசேக் ராஜே ஆகிய இருவரும் அளித்த அறிக்கை விவரங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பார்த்தால் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு சட்டப்படி உருவாக்கப்பட்ட பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்காமல் ஜல்லிக்கட்டை அந்த மாவட்ட ஆட்சித் தலைவரும், போலீஸ் அதிகாரிகளும் நடத்தியுள்ளார்கள் என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியிருக்கிறார்கள். 2013ல் அதிமுக ஆட்சி நடக்கவில்லை என்று சசிகலா நடராஜனால் சொல்ல முடியுமா? அப்போது முதலமைச்சராக ஜெயலலிதா இல்லை என்று சசிகலாவால் சொல்ல முடியுமா? அதனால் தான் ஸ்டாலின் சொன்னார்.

"அதிமுக ஆட்சியில் சட்ட பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த தவறியதால் உச்சநீதிமன்றம் தடை விதித்தது" என்றார். ஆகவே ஜல்லிக்கட்டு விளையாட்டை - குறிப்பாக தமிழர்களின் வீர விளையாட்டு என்பதால் அதிமுக ஆட்சியில் திட்டமிட்டே கோட்டை விட்டார்கள் என்பது தான் தி.மு.க.வின் குற்றச்சாட்டு. சசிகலா நடராஜனின் அறிக்கையில் எந்த இடத்திலாவது நாங்கள் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு விளையாட்டை அதிமுக ஆட்சியில் நடத்தினோம் என்று சுட்டிக்காட்டியிருக்கிறாரா? அறவே இல்லை. சரி எந்த ஒரு நீதிமன்றத்திலாவது- உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதி பெற்று விட்டோம் என்று கூறியிருக்கிறாரா? அப்படி எதையும் சசிகலா நடராஜனின் அறிக்கையில் பூதக்கண்ணாடி போட்டு தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஆகவே சசிகலா நடராஜனுக்கு அழுத்தம் திருத்தமா சொல்லிக் கொள்கிறேன். தமிழர்களின் வீர விளையாட்டான "ஜல்லிக்கட்டு" இன்றைக்கு தடைபட்டிருக்கிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க அதிமுக அரசின் அலட்சியமே காரணம்! இதை "கூகுளில்" தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. "கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை" என்பது போல் அதிமுக அரசின் தோல்வியை கண்டுபிடிக்க கூகுளில் தேட வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு ஐ.பெரியசாமி வெயிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
DMK deputy general secretary I periyasamy Has condemned on Admk gentral secrtary sasikala's statement about jallikattu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X