For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடையாளச் சிக்கலில் சிவ சேனா!

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளாக மஹாராஷ்டிர அரசியலை கலக்கிக் கொண்டிருக்கும் சிவ சேனா தற்போது முதன்முறையாக ஓர் அடையாளச் சிக்கலில் மாட்டி முழித்துக் கொண்டிருக்கிறது.

1966 ம் ஆண்டு மஹாராஷ்டிராவில், குறிப்பாக அன்றைய பாம்பேயின் மராத்தியர்களின் நலன்களைக் காப்பாற்றுவதற்காக ஆரம்பிக்கப் பட்டதுதான் சிவ சேனா. அந்தக் காலகட்டத்தில் பாம்பேயில் வந்து குவிந்த குஜராத்திகள், உத்திர பிரதேசம், பீஹாரிலிருந்து வந்தவர்கள், இது தவிர தென்னிந்தியர்கள், இதில் குறிப்பாக கர்நாடகாவின் ஷெட்டிகள் மற்றும் தமிழர்களுக்கு எதிராகத் துவங்கப் பட்டதுதான் சிவ சேனா.

Identity crisis for Siva Sena

மஹாராஷ்டிரம் மராத்தியர்களுக்கே என்பதுதான் அதன் தாரக மந்திரம். ஆரம்பத்தில் மராத்தியர்களின் நலன்களுக்கென்று ஆரம்பிக்கப் பட்ட சிவ சேனா 1990 களின் துவக்கத்தில் ஹிந்துத்துவா கட்சியாக பரிணமித்தது.

1992 - 1993 ம் ஆண்டுகளில் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது பாம்பேயில் நிகழ்ந்த கலவரங்களில் பெரும் பங்கு வகித்தது. இதற்கான பலன் 1995 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் கிடைத்தது. பாம்பேயின் 32 சட்டமன்றத் தொகுதிகளில் 31 ஐ சிவ சேனா வென்றது. இதற்கு முக்கியக் காரணம், உத்திர பிரதேசம் மற்றும் பிஹாரிலிருந்து வந்தவர்களும், கன்னடர்களும், தமிழர்களும் கூட சிவ சேனா வுக்கு வாக்களித்ததுதான். அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு, அதாவது 1985 ல் பாம்பே மாநகாரட்சி தேர்தலில் அமோக வெற்றிப் பெற்ற சிவ சேனா உள்ளாட்சி நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டது. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது பாம்பே மாநகராட்சியின் ஆண்டு பட்ஜெட் இந்தியாவின் சில சிறிய மாநிலங்களின் பட்ஜெட்டை விடப் பெரியது என்பதுதான்.

இந்த காலத்தில் தான் பாம்பே மாநகராட்சியின் அனேகமாக அனைத்து பணிகளும் தனியார் வசம் ஒப்படைக்கப் பட்டன. இதே காலகட்டத்தில்தான் ஷாக்காக்கள் எனப்படும் சிவ சேனா வினரின் குழுக்களை கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே உருவாக்கினார். இந்த ஷாக்காக்கள் பாம்பே முழுவதும் பொது மக்களிடம் அவர்களது குடிநீர், சாலை வசதிகள், மின்சாரம் உள்ளிட்ட அன்றாட வாழ்க்கைக்கான தேவைகளை நிறைவேற்றுகிறோம் என்று கூறி செயற்பட்டது. பாம்பே மாநகராட்சியின் ஒருங்கிணைப்புடன் செயற்பட்ட இந்தக் குழு சிவ சேனா வினர் தங்களது கஜானாக்களையும் நிரப்பிக் கொள்ளவும் உதவியது, சிவ சேனா வை மிக ஆழமாக பாம்பேயில் காலூன்றவும் செய்தது.

2014 மக்களவைத் தேர்தலில் நீண்ட இழுபறிக்குப் பின்னரே பாஜக சிவ சேனா இடையே கூட்டணி இட பகிர்வு ஒப்பந்தம் எட்டப் பட்டது. ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித் தனியாகவே போட்டியிட்டன. 288 இடங்களை கொண்ட மஹாராஷ்டிர சட்டமன்றத்தில் சிவ சேனா 63 இடங்களைக் கைப்பற்றியது. இன்று பாஜக வின் ஃபட்னாவிஸ் அரசு சிவ சேனா ஆதரவுடன்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் சிவ சேனா வுக்கும் நரேந்திர மோடிக்கும் எப்போதுமே ஆகாது என்பதுதான்.

பால் தாக்கரே உயிருடன் இருந்த வரையிலும் பிரதமர் பதவிக்கு அவரது சாய்ஸ் சுஷ்மா ஸ்வராஜ்தான். பால் தாக்கரேவுக்கு பாஜக மூத்த தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி ஆகியோரிடம் இருந்த நெருக்கம் மோடியுடன் என்றுமே கிடையாது. இது மோடி பிரதமரானவுடன் உறவை மேலும் கசக்க வைத்தது. தனி மெஜாராட்டிப் பெற்ற மோடி, சிவ சேனா வுக்கு, மத்தியில் அவர்கள் விரும்பிய இலாக்காவை கொடுக்காமல் முக்கியத்துவம் இல்லாத கனரகத் தொழிற்துறையை கொடுத்தார். இது தங்களுக்கு இழைக்கப் பட்ட அவமானமாகவே சிவ சேனா இன்றளவும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களில் நடை பெற்ற சம்பவங்கள் பாஜக சிவ சேனா இடையிலான கசப்பை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டதும், அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி மீது கருப்பு மையை ஊற்றியதும் திட்டமிட்டே சிவ சேனா மோடி அரசுக்கு கொடுத்த நெருக்கடி என்றே பார்க்கப் படுகிறது. இழந்து போன வாக்கு வங்கியை மீட்டெடுப்பதற்காகவே, தீவிரவாத ஹிந்துத்துவா கொள்கைகளை, பாஜக வை விட தாங்களே ஹிந்துக்களின், இந்தியாவின் நலன்களை காப்பதில் முன்னணியில் இருப்பவர்கள் என்பதை நிறுவுவதற்காக சிவ சேனா இந்த காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக மஹாராஷ்டிர அரசியலையும், சிவ சேனாவை யும் ஊன்றி பார்க்கும் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இன்னொரு சுவாரஸ்யமான தகவல், சிவ சேனா அரசியலை பல்லாண்டுகாலம் அவதானித்து வருபவர்கள் சொல்லுவது: மஹாராஷ்டிர அரசியலில் தற்போது மீண்டும் பிராமணர்களின் கை ஓங்கி வருவதாகவும், இதற்கு எதிராகத்தான், சிவ சேனா அதீத தீவிர பாகிஸ்தான் எதிர்ப்பு பிரசாரங்களில் ஈடுபடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

‘தற்போதய மராட்டிய முதல்வர் பாஜக வின் ஃபட்னாவிஸ். இவர் பிராமணர். அதி தீவிர மராட்டிய பெருமை கொண்ட சிவ சேனா ஒருபோதும் மஹாராஷ்டிர அரசியலில் பிராமணர்களின் கை ஓங்குவதை விரும்பாது, அனுமதிக்காது. மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப் பட்டதையும் தீவிரமான சந்தேகக் கண் கொண்டே சிவ சேனா பார்க்கிறது. ஆர்எஸ்எஸ், பாஜக வின் பிராமணீய செயற் திட்டம் தனது வாக்கு வங்கியை கபளீகரம் செய்து விடும் என்ற அச்சத்தின் காரணமாகவும் தான் தன்னுடைய பாகிஸ்தான் எதிர்ப்பை சிவ சேனா திட்டமிட்டு கொம்பு சீவி வளர்த்துக் கொண்டிருக்கிறது' என்கிறார் சிவ சேனா மற்றும் மஹாராஷ்டிர அரசியலை பல்லாண்டுகள் கவனித்து வரும் மூத்த பத்திரைகையாளர், எழுத்தாளர் சித்தார்த் பாட்டியா.

இவரது கருத்தை மெய்பிக்கும் விதமாக சிவ சேனா தலைவர், உதவ் தாக்கரே தன்னுடைய தசரா உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் .. ‘முடியின் நிறமும், அடர்த்தியும், பூணுல், வேதங்கள் இவற்றின் அடிப்படையிலான ஹிந்துத் துவாவில் எங்களுக்கு நம்பிக்கையில்லை' என்று பேசியது மஹாராஷ்டிராவில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் என்பது பிராமணர்களின் கட்சிதான் என்ற சிவ சேனா வின் கருத்தை மீண்டும் ஒருமுறை ஒலிப்பதாகவே பார்க்கப் படுகிறது. உதவ் தாக்கரே இன்னொன்றும் சொன்னார். ‘யாராவது மாட்டிறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய ஒருவரின் வீட்டில் எட்டி பார்ப்பதையும் நிறுத்துங்கள்' என்பதுதான்.

அனேகமாக சங் பரிவாரத்தின் அனைத்து அமைப்புகளும், பாஜக, விஷ்வ ஹிந்து பரீஷத், பஜ்ரங் தளம் மற்றும் பல அமைப்புகள் ஆர்எஸ்எஸ் ஸின் தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. தங்களுக்குள் இவர்கள் எவ்வளவு மோதிக் கொண்டாலும், இறுதியில் ஆர்எஸ்எஸ் தலையிட்டால் இவர்கள் ஒற்றுமையாகி விடுவர். ஆனால் சிவ சேனா மட்டும் இதற்கு பால் தாக்கரே காலத்திலிருந்தே விதி விலக்கு. பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவர் வேட்பாளராக காங்கிரசால் அறிவிக்கப் பட்டபோது பாஜக அவரை ஆதரிக்காத போதும், பால் தாக்கரே எடுத்த எடுப்பிலேயே பாட்டீலுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். காரணம் பாட்டீல் மராட்டியர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் இந்திரஜித் குப்தா 2002 ல் காலமான போது, அவருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிலை வைக்க வேண்டும் என்று பேசியது சிவ சேனா எம்.பி. இது பலரது புருவங்களையும் உயர்த்தியது. இதற்கு காரணம் 1997 ல் தேவே கவுடா ஆட்சியில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த இந்திரஜீத் குப்தா, மஹாராஷ்டிராவில் அப்போது ஏற்பட்ட அரசியில் நெருக்கடியில் அப்போதய பாஜக - சிவ சேனா மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வந்த போது அதனை ஏற்க மறுத்து விட்டார். அதற்கு நன்றி கடனாகவே இந்திரஜித் குப்தா வுக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைக்க வேண்டும் என்று பேசும் அளவுக்கு சிவ சேனா போனது.

‘சிவ சேனாவின் நடவடிக்கைகளில் உள்ள ஆச்சரியமான விஷயங்களில் இதுவும் ஒன்று. தங்களுக்கு நெருக்கடியான கால கட்டங்களில் உதவியர்களுக்கு நன்றி பாராட்ட அவர்கள் என்றுமே தயங்கியதில்லை. நெருக்கடியான கட்டங்களில் தங்களுக்கு உதவியவர்கள் அரசியல்ரீதியாக தங்களது பரம எதிரிகளாக இருந்தாலும், அந்த பரம எதிரிகளுக்கு ஒரு நெருக்கடி எனும் போது சிவ சேனா அவர்களை ஆதரித்துள்ளது. இதுதான் இந்திரஜித் குப்தா வுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழப்புவதற்கான அடிப்படை. இந்த குறைந்த பட்ச அரசியல் மற்றும் தனி மனித நேர்மை கூட பாஜக விடம் இல்லை என்பது வேறு விஷயம்' என்கிறார் சிவ சேனா அரசியலை ஊன்றி கவனித்தும், எழுதியும் வரும் மும்பை பத்திரிகையாளர் ஒருவர்.

தற்போதய நிலவரம் சமீப காலமாக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஃபட்னாவிஸ் அரசை சிவ சேனா காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆட்சியைக் கவிழ்க்கத் தயாராக இல்லை. காரணம் சிவ சேனாவின் வாக்கு வங்கியும் ஆட்டம் காணத் துவங்கியிருப்பதுதான். பெரு நகரங்களில் தனது பாரம்பரிய வாக்கு வங்கியை பாஜக விடம் வேகமாக இழந்துக் கொண்டிருக்கிறது சிவ சேனா. கிராமப் புறங்களில் சிவ சேனா வால் பெரிய அளவில் கால் பதிக்க முடியவில்லை. காரணம் மஹாராஷ்டிராவின் கிராமப் பகுதிகளில் ஷரத் பவாரின் தேசீயவாத காங்கிரஸ் இன்னமும் செல்வாக்குடனேயே உள்ளதுதான். மராட்டியத்தின் ஊரக பகுதிகளிலும் பாஜக வும் நன்றாகவே வளர்ந்து வருவதும் சிவ சேனா வின் வாக்கு வங்கியை ஆட்டங் காணச் செய்து கொண்டிருக்கிறது. அந்தக் கட்சியால் இப்போது புதிய வாக்கு வங்கியையும் ஈட்ட முடியவில்லை.

இதன் காரணமாகவே பாகிஸ்தானுக்கு எதிரான பேச்சுக்களும், எழுத்தாளர்கள் மற்றும் இந்திய பாகிஸ்தான் உறவு மேம்பட வேண்டும் என்று பேசுபவர்கள் மீது கருப்பு மை வீசுவது போன்ற நிகழ்வுகளும் அரங்கேற்றப்படுகின்றன.

ஹிந்து ராஷ்டிரா பேசும் சிவ சேனா வுக்கு அது தற்போது அறவே சாத்தியமற்றது என்பது நன்றாகவே தெரியும். ஆனால் இதன் மூலம் சிவ சேனா அடைய நினைப்பது, வேகமாக பறி போய்க் கொண்டிருக்கும் தனது வாக்கு வங்கியை மீட்டெடுப்பதும், மோடி அரசை சீண்டுவதும்தான். 2016 ல் தனது ஐம்பதாவது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் சிவ சேனா தனது அரசியல் வாழ்வின் மிகப் பெரியதோர் அடையாளச் சிக்கலை எதிர் கொண்டுள்ளது. ஒரு பக்கம் சிவ சேனாவை கபளீகரம் செய்ய காத்திருக்கும் நரேந்திர மோடியின் பாஜக ... இன்னொரு பக்கம் அரசியல் ரீதியாக போராட கையில் பெரிய விவகாரங்கள் ஏதுமில்லாத நிலை...

பால் தாக்கரே போன்ற கவர்ச்சிகரமான ஆளுமைகள் இல்லாதது இன்னொரு முக்கிய பிரச்சினை. இவை சிவ சேனா வின் எதிர்கால இருப்பையே இன்று பெருங் கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கின்றன. அடையாளச் சிக்கிலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் சிவ சேனா அழிந்து போவது இன்று மோடியின் பாஜக வுக்கு கொண்டாட்டத்தையும், குதூகலத்தையும் தரலாம். ஆனால் மதச் சார்பற்ற சக்திகளுக்கும் அதே குதூகலத்தை கொடுக்குமா என்று தெரியவில்லை.

ஆர்எஸ்எஸ் ஸி ன் கொடூரமான செயற் திட்டத்தை எதிர்த்தும், அதனை கேள்வி கேட்டும், சங் பரிவாரத்தின் செயற் பாடுகளை அதற்கு உள்ளேயிருந்தே, அதன் ஒரு கட்சி சிதைப்பதும், முடக்குவதும் இன்றையை காலகட்டத்தின் முக்கியமான தேவைதான். இது ஜீரணிக்கவும், சகிக்கவும் சற்றே கடினமானது என்றாலும், கண்டிப்பாக இது வரவேற்கத் தக்க ஜீரண கோளாறுதான்!

English summary
Columnist Mani is describing that Siva Sena, a key right wing party is now struggling in Identity Crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X