சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த டிஎஸ்பி காதர்பாட்ஷா கைது

சென்னை: சாமி சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு உடந்தையாக இருந்த வழக்கில் தேடப்பட்டு வந்த காவல்துறை டிஎஸ்பி காதர்பாட்ஷா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் காதர்பாட்ஷாவை கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்பு கோட்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் பணியின் போது சிவன், பார்வதி பஞ்சலோக சிலை உள்ளிட்ட 6 சாமி சிலைகள் கிடைத்துள்ளன.

இந்த சிலைகளை தாசில்தாரிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக அதே ஊரை சேர்ந்த சந்தானம் என்பவருடன் சேர்ந்து சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ஆரோக்கியராஜ் முயன்றுள்ளார். அந்த சிலைகளின் மதிப்பு சுமார் ரூ.20 கோடியாகும்.
இந்நிலையில், இந்த தகவல் வெளிவந்தவுடன் சிலைகளை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் காதர் பாட்ஷா, உதவி ஆய்வாளர் சுப்புராஜ் மற்றும் மற்றொரு கான்ஸ்டபிள் ஆகியோர், அந்த சிலைகளை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சிலை கடத்தல்காரர்களிடம் ரூ.15 லட்சத்துக்கு அந்த சிலைகளை விற்றுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.
இது முறைகேடு தொடர்பாக இவர்கள் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி அசோக் நடராஜனிடம் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சிலைகளை விற்ற காவல் ஆய்வாளர் காதர் பாட்ஷா தற்போது டி.எஸ்.பி யாகவும், சுப்புராஜ் ஆய்வாளராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதனால் இவர்கள் மீதான வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் புலன்விசாரணை நடத்தக் கோரி , வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்,
வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பொன்.மாணிக்கவேல் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார். இந்த நிலையில் ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் தலைமறைவாக இருந்த காதர்பாட்ஷாவை கும்பகோணத்தில் கைது செய்தனர்.
காதர் பாட்ஷா மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காதர் பாட்ஷா திருச்சி சிறையில் அடைத்தனர்.