பழங்கால சிலைகளை கடத்தி விற்ற டி.எஸ்.பி. தப்பி ஓடி தலைமறைவு- போலீஸ் வலைவீச்சு
சென்னை: பழங்கால சிலைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கில் சிக்கிய டிஎஸ்பி காதர் பாட்ஷா தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை ஆலடிப்பட்டி ஆரோக்கியராஜ் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டினார். அப்போது 6 பழங்கால சிலைகள் கிடைத்தன.

இந்த சிலைகளை ஆரோக்கியராஜ் விற்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இது குறித்து தகவல் கிடைக்க போலீஸ் அதிகாரிகள் காதர் பாட்ஷா, சுப்புராஜ் ஆகியோர் ஆரோக்கியராஜிடம் இருந்து சிலைகளை பறிமுதல் செய்து கடத்தி வந்தனர்.
கடத்தி வந்த சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் சென்னை ஆழ்வார்பேட்டை சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் விற்றுவிட்டனர். இந்த விவகாரத்தை பெயர் குறிப்பிட விரும்பாத போலீசார் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கோரி வழக்கும் தொடர்ந்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது சென்னை கோயம்பேடு காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருக்கும் சுப்புராஜை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் நாளை ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற நெருக்கடியால் போலீஸ் நடவடிக்கை தீவிரமடைந்ததால் தற்போது திருவள்ளூரில் பணியாற்றும் டிஎஸ்பி காதர் பாட்ஷா தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.