For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரிஜா வைத்தியநாதன் அறையில் ராமமோகன் ராவ் நுழைந்தால் என்ன நடக்கும்?

பணியிடை மாற்றம் செய்யப் பட்ட ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளருமான, சத்தியகீர்த்தி, உத்திமபுத்திரன் ராமமோகன் ராவ் பொங்கி எழுந்து விட்டார்.

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர் மணி

பணியிடை மாற்றம் செய்யப் பட்ட ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளருமான, சத்தியகீர்த்தி, உத்திமபுத்திரன் ராமமோகன் ராவ் பொங்கி எழுந்து விட்டார். சென்னையில் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராவ், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியிருக்கிறார். யாரிடம் இருந்து உங்களது உயிருக்கு ஆபத்து என்று கேட்ட போது, 'தெரியாது' என்றே பதிலளித்தார். அதனை விட முக்கியமாக அவர் கூறியது இதுதான்;

If Ram Mohan Rao enters in to Chief Secretary's room?

"ஒரு தலைமை செயலாளரின் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரி சோதனைகள் என்பது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதாலாகும். என்னை பாதுகாக்கும் தைரியம் மாநில அரசுக்கு இல்லை. என்னை பணியிலிருந்து மாற்றும் உத்திரவு இன்னும் என் கைகளுக்கு வந்த சேரவில்லை. ஆகவே இன்னமும் நான்தான் தலைமை செயலாளர். நான் அம்மாவால் (ஜெயலலிதா) வழி நடத்தப்பட்டு, பயிற்றுவிக்கப் பட்டவன். ஜெயலலிதா இருந்திருந்தால் இது போன்று சோதனைகள் நடத்தும் தைரியம் மத்திய அரசுக்கு வந்திருக்குமா? என் அலுவலகத்தைச் சோதனையிடச் சென்ற போது வருமான வரித்துறையினர் கொண்டு சென்ற வாரண்டில் என் பெயர் இல்லை. என் மகனின் பெயர் இருக்கிறது. என் மகன்தான் தலைமைச் செயலாளரா? தலைமைச் செயலாளரின் அறையில் உள்ள கம்ப்யூட்டரில்தான் முதலமைச்சர் சம்மந்தப்பட்ட, மாநில அரசு சம்மந்தப்பட்ட ஏராளமான தகவல்கள் இருக்கும். அவற்றை இன்று வருமான வரித்துறை அள்ளிக் கொண்டு போயிருக்கிறது. என்னுடைய வீட்டில் சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கி முனையில் என்னை 26 மணி நேரம் வைத்திருந்தனர். தலைமை செயலாளரின் அலுவலக அறையில் சிஆர்பிஃஎப் நுழைவதற்கு முதலமைச்சரின் அனுமதி பெறப்பட்டதா? அப்படியென்றால், நாளைக்கு யாருடைய வீட்டிலும் யாரும்

நுழைந்து விடலாமா? யாருக்கும் பாதுகாப்பு இல்லை. நாடு முழுவதிலும் உள்ள எல்லா ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் நான் இந்த கேள்வியை முன்வைக்கிறேன்''.

-இவைதான் ராம மோகன ராவ் கொடுத்த பேட்டியின் சாராம்சமாகும். ஏகப்பட்ட குழப்பம் நிலவிய அந்த பேட்டியில் யார் என்ன பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை. பேட்டி ஆரம்பித்த உடனேயே அவர் உதிர்த்த முதல் பெயர் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி. அவருக்கும், ராகுல் காந்தி, எஸ் ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் தீரன் ஆகியோருக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்ளுவதாக அவர் கூறிவிட்டார்.

ராம மோகன ராவின் பேட்டி வெளிப்படையாகவே முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் அதிகாரத்துக்கு விடப்பட்ட சவாலாகவே தெரிகிறது. காரணம் இந்த ஐடி ரெய்டுகள் நடைபெற்று ஒரு வாரகாலம் ஆன பின்னரும் இது பற்றி ஓபிஎஸ் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. மாநில அரசு வாய் மூடி மெளனம் காக்கிறது. மமதா கண்டிக்கிறார், ஆனால் ஓபிஎஸ் மெளனம் காக்கிறார்.

இந்தக் கதை இனி ரொம்ப காலம் ஓடாது. சசிகலாவுக்கும் காவல், மோடிக்கும் தோழன் என்ற நிலைப்பாட்டை ஓபிஎஸ் இனியும் கடைபிடிக்க முடியாது. ஒரு முதலமைச்சர் என்கின்ற முறையில், அவருடைய முன்னாள் தலைமை செயலாளர் இன்று, 'மாநில அரசுக்கு என்னை காப்பாற்றும் தைரியம் இல்லை' என்றே பொது வெளியில் குற்றம் சுமத்திய பின்னர் ஓபிஎஸ் வாய் திறந்து பேசியே ஆக வேண்டும்.

ஒன்று மத்திய அரசு செய்தது தவறுதான். தலைமை செயலகத்திற்குள் சிஆர்பிஎஃப், ஐடி அதிகாரிகள் வந்திருக்க கூடாது என்று பேச வேண்டும். அல்லது ராம்மோகன ராவை நடத்தை விதிகளை மீறியதற்காக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இரண்டையும் செய்யாமல், ஊமை சாமியாராக ஓபிஎஸ் தொடருவார் என்றால் அது அவலமானது.

இப்படியும் நடக்கலாம். 'நான் தான் இன்னமும் தலைமை செயலாளர்' என்கிறார் ராம்மோகன் ராவ். திடீரென்று ராம்மோகன் ராவ் தலைமை செயலகத்திற்குப் போய், தலைமை செயலாளரின் அறையில் நுழைந்து விடுகிறார். தற்போதய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் நாற்காலியின் அருகில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்து விடுகிறார்.

அப்போது என்ன நடக்கும்? மாநில காவல் துறை என்ன செய்யும்? மாநில காவல் துறை முதலமைச்சரின் உத்தரவுக்குத்தான் கட்டுப்படும். ஓபிஎஸ் மெளினியாக, நடு நிலை வகிக்கிறார். கிரிஜா வைத்தியநாதனை காப்பாற்ற சிஆர்பிஎஃபை மோடி அனுப்பி வைப்பாரா? ஐடி சோதனைகளுக்கு வேண்டுமானால் சிஆர்பிஎஃபை அழைக்கலாம். ஆனால் இது போன்ற விவகாரங்களுக்கு மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிஆர்பிஎஃப் வர முடியாது. தற்போதய தமிழக சூழலில் இதெல்லாம் நடக்காது என்று யாராலும் ஆருடம் கூற முடியாது. விரைவாக நடந்து வரும் சம்பவங்களின் அடிப்படையில் பார்த்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

உண்மையான நிலவரம் இதுதான்.... சசிகலா தரப்புக்கும் மோடிக்கும் மோதல் முற்றிக் கொண்டிருக்கிறது. தாங்கள் சொன்னபடி நிர்வாகத்தில் எல்லாவற்றையும் செய்ய வேண்டும், சசிகலா தரப்பிடமிருந்து எந்த உத்திரவையும் பெறக் கூடாதென்றே மோடியின் மத்திய அரசிடமிருந்து ஓபிஎஸ்ஸூக்கு நேரத்துக்கு நேரம் அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் சசிகலா தரப்பும் ஓபிஎஸ் ஸை தங்களது தாளத்துக்கு மட்டுமே அவர் ஆட வேண்டும் என்று கடும் நிர்ப்பந்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. கிரிஜா வைத்தியநாதன் நியமனமே சசிகலா தரப்பின் கடும் எதிர்ப்பையும் மீறி, மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால் தான் ஓபிஎஸ்ஸால் செய்யப் பட்டிருக்கிறது.

"நான் மேடம் அவர்களால் (ஜெயலலிதா) செங்கற்பட்டு (காஞ்சிபுரம்) கலெக்டராக இருக்கும் போதே பயிற்றுவிக்கப்பட்டவன். எனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண அஇஅதிமுக தொண்டனின் நிலைமை என்ன?'' என்று கேட்டதுதான் ராம்மோகன் ராவின் செய்தியாளர் சந்திப்பின் ஹைலைட். ஒரு ஐஏஎஸ் அதிகாரி தன்னுடைய விசுவாசத்தை இந்திய அரசியல் சாசனத்துக்கு மட்டும்தான் காட்ட முடியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சித் தலைவருக்கு தன்னுடைய விசுவாசத்தைக் காட்டுகிறார் என்றால், இவர் எப்பேற்பட்ட அதிகாரி, இவரது தகுதிகள் என்னவென்பதை சுலபத்தில் எவரும் புரிந்து கொள்ளலாம்.

மாநில அரசு தன்னுடைய மெளனத்தைக் கலைக்க வேண்டிய நேரமும், மத்திய அரசு தன்னுடைய நடவடிக்கைகளை பன்மடங்கு அதிகரிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டதாகத்தான் தெரிகிறது. இல்லையென்றால் ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்றுவது என்பது மிகவும் கடினமான காரியமாகி விடும்!

English summary
R Mani's analysis on former Chief Secretary Ram Mohan Rao's recent interview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X