For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவகாசிக்குள் நுழையும் சட்டவிரோத பட்டாசு.. தடை விதிப்பாரா சீனாவிற்கு போன மோடி?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சிவகாசி: மோடியின் சீன பயணத்தை உலகமே உற்று நோக்கியது.. சீன பிரதமருடன் மோடி எடுத்த செல்ஃபி பற்றித்தான் உலக சமூக வலைத்தளங்களில் ஒரே பேச்சாகிப் போனது. ஆனால் மோடியின் சீனா பயணத்தின் மூலம் தங்களுக்கு புதிய விடியல் பிறக்கும் என்று காத்திருக்கின்றனர் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள்.

தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுதான்.

Illegal Chinese Firecracker; 5 Lakh Families Suffer in Sivakasi

இந்தியா முழுவதும் 930 பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. அதில், சிவகாசியில் மட்டும் 805 நிறுவனங்கள் உள்ளன. பட்டாசு தொழிலின் தாய்வீடு சிவகாசி. இந்த ஊரே பட்டாசு தொழிலை நம்பித்தான் இருக்கிறது.

பட்டாசு தொழில்

பட்டாசு தொழிலுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலையைக் கொண்டது சிவகாசி. பட்டாசு உற்பத்தி ஆண்டுக்கு 300 நாட்கள் இந்த பகுதியில் நடக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள், நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் உயிரை பணயம் வைத்து, ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றுகிறார்கள்.

வருவாய் தரும் பட்டாசு தொழில்

குட்டி ஜப்பான் என்ற பெருமை உடைய சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் மட்டும் ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் தயாராகின்றன. அந்த பட்டாசுகள், இந்தியாவிலும் வெளி நாட்டிலும் விற்பனையாகின்றன. இதனால், இந்தியாவுக்கு ஏகப்பட்ட வருவாய் கிடைக்கிறது. சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த 1.5 லட்சம் பேர் இந்தத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனப்பட்டாசு என்னும் அரக்கன்

ஆண்டுதோறும் பட்டாசு விலை கூடிக்கொண்டே போனாலும், விற்பனை கொஞ்சம்கூட குறையாமல் அதிகரித்துக்கொண்டே போனது. இதுவரையில் சிவகாசி பட்டாசுகளுக்கு போட்டியே இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது சீனப்பட்டாசு ரூபத்தில் சிவகாசி பட்டாசுக்கும் பலத்த போட்டி வந்துவிட்டது.

கள்ளத்தனமாக நுழையும்

சீனப்பட்டாசு இந்தியாவுக்குள் கொண்டுவருவதற்கு சட்டபூர்வ அனுமதி கிடையாது. ஆனாலும் கள்ளத்தனமாக கண்டெய்னர்களில் கப்பல் மூலம் இந்தியாவிற்குள் நுழைந்து விடுகின்றன சீனப்பட்டாசுகள். கடந்த ஆண்டு மட்டும் சீன பட்டாசுகளின் வரவால், ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ரூ.200 கோடி வரை பட்டாசு வர்த்தகம் குறைந்துள்ளது என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

விலை குறைவு

சீன மின்னணு பொருட்கள், பொம்மைகள் குறைந்த விலையில் கிடைக்கிறதோ, அதுபோல சீனப்பட்டாசுகள் விலையும், சிவகாசி பட்டாசுகளைவிட விலை குறைவாகவும், பேன்சி ரகங்களிலும் இருப்பதால் பொது மக்கள் நிச்சயம் சீனப்பட்டாசுகளை நாடியே செல்லப் போகும் சூழ்நிலையில், சிவகாசி பட்டாசு விற்பனை 30 சதவீதத்துக்குமேல் குறைந்துவிடும் என்பது உற்பத்தியாளர்களின் அச்சம்.

சுற்றுச்சூழலுக்கு ஆபத்து

சீனப் பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ள தரம் குறைந்த ரசாயன பொருட்களான குளோரைடு, பெர்குளோரேட்டால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் பல வண்ண நிறங்களில் விதவிதமான பட்டாசுகள், மத்தாப்புகளை உற்பத்தி செய்தாலும், இவையெல்லாம் அதை பயன்படுத்துபவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகும் என்று எச்சரிக்கின்றனர் உள்ளூர் உற்பத்தியாளர்கள்.

மூலப்பொருட்களின் விலை

சீன பட்டாசுகள் பொட்டாசியம் குளோரைடு மற்றும் பெர்குளோரேட் என்ற மூலப் பொருள்களால் தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் விலை கிலோ ரூ.40தான். ஆனால், சிவகாசி பட்டாசுகள் அலுமினிய பவுடர், பொட்டாசியம் நைட்ரேட், பேரியம் நைட்ரேட் என்ற மூலப் பொருள்களால் தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் விலை கிலோ ரூ.200.

எளிதில் தீப்பிடிக்கும்

சீன பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்கள் மிகவும் ஆபத்தானவை. எளிதில் தீப்பற்றக்கூடியவை. சுற்றுப்புறச் சூழலை மாசுப்படுத்துபவை. சிவகாசி பட்டாசுகளில் திரியில் தீ வைத்தால்தான் வெடிக்கும்.

சிவகாசி பட்டாசு அதிகம் ஏன்?

சிவகாசி பட்டாசைப் பொறுத்தமட்டில், மூலப்பொருட்கள் விலை அதிகம், பல மூலப்பொருட்கள் பெருமளவில் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படவேண்டியது இருக்கிறது, தொழிலாளர் சம்பளம் உள்பட உற்பத்தி செலவு அதிகம், வரி அதிகம் என்பதால், சீனப்பட்டாசு விலையோடு போட்டியிட முடியவில்லை என்கிறார்கள் உள்ளூர் உற்பத்தியாளர்கள்.

பட்டாசுகள் தேக்கம்

அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீன பட்டாசுகளுக்குத் தடை விதித்துள்ளன. ஆனால், அதையும் மீறி இந்த ஆண்டு சீனாவில் இருந்து கன்டெய்னர்களில் கள்ளத்தனமாகப் பட்டாசுகளை செய்கின்றனர். இதனால் சிவகாசியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேங்கிக் கிடக்கின்றன.

கனிமொழி வலியுறுத்தல்

சீனப் பட்டாசுகள் இந்தியாவுக்குள் பல்வேறு வழிகளில் ஊடுருவி, இந்திய பட்டாசு வியாபாரத்தை முடக்கி உள்ளது. இது தொடர்பாக, பெரிய அளவில் எதிர்ப்பு குரல் எழுந்ததும், அதன் மீது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்த நடவடிக்கையால், சீன பட்டாசுகளின் ஊடுருவல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இருந்தாலும், அந்த நடவடிக்கைகளில் தளர்வு ஏற்பட்டதால், தற்போது, மீண்டும் சீனப் பட்டாசுகள் இந்தியாவில் பெரிய அளவில் ஊடுகின்றன. இதையும் தடுக்க வேண்டும் என, மத்திய அமைச்சரை சந்தித்து திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

அழியும் அபாயம்

இந்திய துறைமுகங்களில் போதிய ஸ்கேனர் வசதி இல்லை.

அதனால் எளிதாக சீன பட்டாசுகள் இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. சீன பட்டாசுகளை வாங்கி அந்த லேபிள்களைக் கிழித்துவிட்டு தங்கள் நிறுவன லேபிள்களை ஒட்டி விற்பனை செய்கின்றனர். சீன பட்டாசுகள் இறக்குமதி தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் சிவகாசியில் பட்டாசுத் தொழிலே அழிந்துவிடும்.

அரசு நடவடிக்கை எடுக்குமா?

சீன பட்டாசு வரவால், சிவகாசியில் பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சீன பட்டாசுகளை இந்தியாவில் தடை செய்ய மத்திய, மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளூர் உற்பத்தியாளர்களின் கோரிக்கையாகும். மோடியின் சீனப்பயணம் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வயிற்றில் பாலை வார்க்குமா?

English summary
Five lakh Sivakasi people, threat from Chinese firecracker exports looms large. Abundant firecrackers imports from Chinese markets have hit Tamil Nadu's firecrackers manufacturing industry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X