For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனுமதி பெறாமல் ‘பேனர்’ வைப்போர் மீது கிரிமினல் வழக்கு- தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

By Shankar
Google Oneindia Tamil News

அனுமதி பெறாமல் ‘பேனர்' வைப்போர் மீது கிரிமினல் வழக்கு- தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அனுமதியின்றி தெருக்களில் பேனர் வைப்போர் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுத்து உத்தரவிட்டுள்ளது.

டிராபிக் ராமசாமி

சென்னையைச் சேர்ந்த ட்ராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "சென்னை மற்றும் பிற மாவட்டங்களில், பொது மக்களுக்கு இடையூறாக நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் ராட்சத பேனர்கள் வைக்கப்படுகின்றன. இந்த பேனர்களை அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் வைக்கின்றனர்.

இதுபோன்ற பேனர்களை வைப்பதற்கு கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோரிடம் முறையான அனுமதி பெறுவதில்லை. சட்ட விரோதமாக, விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பேனர்களை அரசு அதிகாரிகளும் அகற்றுவதில்லை. ஏற்கனவே இந்த நீதிமன்றம், சட்ட விரோதமாக வைக்கப்படும் பேனர்களை அகற்ற உத்தரவிட்டுள்ளது," என்று கோரியிருந்தார்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை

இந்த மனுவை தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர்.

அவர்கள் பிறப்பித்த உத்தரவில், "மாநகராட்சி சட்டம், விதிகளின்படி கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோரிடம் அனுமதி பெறாமல், டிஜிட்டல் பேனர்கள் வைக்க முடியாது. டிஜிட்டல் பேனர்கள் குறித்து இந்த நீதிமன்றமும் நிபந்தனைகளுடன் விரிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் மனுதாரர் தாக்கல் செய்துள்ள போட்டோக்களை பார்க்கும்போது, இந்த நீதிமன்றத்தின் உத்தரவை அரசு அதிகாரிகள் யாரும் அமல்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

ஒப்புக்கு நடவடிக்கை

அதேபோல, இந்த வழக்கில் ஆட்சியர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பதில் மனுக்கள், தற்போதைய நிலை குறித்து அறிக்கைகள் ஆகியவற்றை பார்க்கும்போதும், இந்த வழக்கு எப்போது எல்லாம் விசாரணைக்கு வருகிறதோ, அப்போது மட்டும் ஒப்புக்கு சில நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர் என்பதும் தெளிவாகிறது.

விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களின் எண்ணிக்கையை விட, அந்த சட்டவிரோத டிஜிட்டல் பேனர்களை வைத்தவர்கள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

போட்டி போட்டு மீறுகிறார்கள்

சட்டவிரோத டிஜிட்டல் பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தைரியம் இல்லை. நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற மன உறுதியும் இல்லை. ஆனால், நடவடிக்கை எடுக்காததற்கு ஆள் (ஊழியர்கள்) பற்றாக்குறையை காரணமாக அவர்கள் கூறுகின்றனர்.

அதேநேரம், சட்டவிரோதமாக பேனர்களை பொது இடங்களில் வைத்து, நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த இந்த உத்தரவை அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மீறுகின்றனர் என்பது தெளிவாகிறது. அரசியல் கட்சிகளின் இந்த செயல் வருத்தம் அளிக்கிறது.

வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

சாலையோரங்களில் வைக்கப்படும் அனுமதி பெறாத டிஜிட்டல் பேனர்களால், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுகிறது. எனவே சென்னை மற்றும் பிற மாநகராட்சிகளில் உள்ள மாநகராட்சி கமிஷனர்கள், கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், பிற மாவட்டங்களில் கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் பிற அரசு துறை தலைவர்கள் தமிழகத்தில் சட்டவிரோதமாக, அனுமதி பெறாத டிஜிட்டல் பேனர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் வைக்கப்பட வில்லை என்பதை உறுதி செய்யவேண்டும்.

ஆய்வுக் கூட்டங்கள்

இதற்காக 3 மாதங்களுக்கு ஒருமுறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். அனுமதி இல்லாமல், சட்டவிரோதமாக பேனர்களை வைக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி தகுந்த நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும்.

மேலும், அரசியல் கட்சிகளும் தங்களது பொறுப்புக்களையும், கடமைகளையும் உணர்ந்து, எதிர்காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடங்களில் அனுமதி பெறாமல் சட்டவிரோதமான பேனர்களை வைக்க மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த வழக்கை இத்தோடு முடித்து வைக்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளனர்.

English summary
The Madras High Court has ordered Tamil Nadu govt to take criminal action against persons who erecting banners in roads and streets with out proper permission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X