For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எய்ம்ஸ் மருத்துவமனையும், இரண்டு அரசுகளும் ஒரு நீதிமன்றமும்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கை இன்று நேற்று எழுந்த கோரிக்கை அல்ல. ஏறத்தாழ 20 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கை. அப்போது வரும், இப்போது வரும் என்று கூறப்பட்ட இந்த மருத்துவமனைக்கு தற்போது ஒரு வழியாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை வந்தால் தமிழகத்திற்கு மட்டுமல்ல கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் பயன் இருக்கும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை. இந்த மருத்துவமனை வந்தால் கூடுதலாக 100 மருத்துவ படிப்புக்கான இடங்கள், 60 நர்சிங் படிப்புகள், 750 படுக்கை வசதிகள் குறைந்த கட்டணத்தில் அறுவை சிகிச்சைகள் இதெல்லாம் மக்களுக்கு கிடைக்கப்போகும் பலன்கள். ஆனால் இவற்றை வைத்து அரசியல் லாபம் அடைய கட்சிகள் முயற்சிகின்றன என்பதுதான் தற்போது எழுந்திருக்கும் விமர்சனங்கள்.

மாநில அரசு தங்களின் முயற்சியால்தான் இந்த மருத்துவமனை இங்கு அமைக்கப்படுகிறது என்கிறது, மத்திய அரசோ தாங்கள்தான் இந்த மருத்துவமனையை கொண்டு வந்தோம் என்று கூறி பாஜகவுக்கு தமிழகத்தில் இருக்கும் நெகட்டிவ் இமேஜை மாற்ற முயற்சிக்கிறது. நிலைமை இப்படி இருக்கையில் உண்மையில் எய்ம்ஸ் மருத்துவமனை விசயத்தில் நடந்தது என்ன என்பதை பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

நீண்டகால கோரிக்கை

நீண்டகால கோரிக்கை

நீண்ட நெடுங்காலமாக இருந்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 2015 -ம் ஆண்டு தமிழகம் உட்பட 13 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் நிதி ஒதுக்கப்பட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகளும் வேகம் பிடித்தன. இந்த நிலையில் தமிழகம் சார்பில் 5 இடங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன. ஆனால் 2018 - வரை மத்திய அரசு எந்த இடம் என்பதை தேர்வு செய்யாமல் இருந்ததோடு அதற்கான நிதியை ஒதுக்கவில்லை என்பதுவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவலில் தெரியவந்தது. அதன் பின்னரே இப்போது மதுரை தேர்வு செய்யப்பட்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். அவரது வருகை வெறுமனே மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவது மட்டுமல்லாது பாஜக பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

எங்களது சாதனை

எங்களது சாதனை

இந்த பொதுக்கூட்டத்தில் எதிரொலித்த, எய்ம்ஸ் மருத்துவமனை எங்களது சாதனை என்ற குரல் அடுத்தடுத்து பாஜக மேடைகளில் சற்று ஓங்கியே ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நீதிமன்றம் தலையிட்டு செய்யப் போகிறீர்களா இல்லையா என்று அரசுகளின் தலையில் குட்டிய பிறகு இப்போது அடிக்கல் நாட்ட வந்த பிரதமர் மோடியின் இது போன்ற செயல்பாடுகள் பாஜகவுக்கு பெரும் பலத்தை தமிழகத்தில் பெற்றுத் தரும் என பாஜக அபிமானிகள் கூற உண்மையில் மக்கள் மனநிலை அப்படி மாறுமா என்ற கேள்வி பல்வேறு துணைக் கேள்விகளை எழுப்புவதை தவிர்க்க முடியவில்லை.

தலை நகரில் அம்மணமாக

தலை நகரில் அம்மணமாக

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் விவசாய விளை பொருள்களுக்கு தகுந்த விலை பெற்றுத் தருவோம் என்று கூறியது. ஆனால் இன்னமும் தமிழக விவசாயிகளை இந்திய தலை நகரில் அம்மணமாக ஓட வைக்கும் நிலையில்தான் மத்திய அரசு உள்ளது. திரை உலகினர் எளிதாக பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை பெறுகையில் ஓட்டு போட்ட விவசாயிகளுக்கு அந்த பாக்கியம் வாய்க்கவே இல்லை. திருப்பூரில் ஒரு லட்சம் கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற நிலையில் இப்போதுதான் கிட்டத்தட்ட 18 ஆயிரம் கோடிகள் என்ற நிலையையே எட்டியுள்ளது. அதாவது கொடுத்த வாக்குறுதியில் கால் பங்கு அளவுக்கு கூட நிறைவேற்ற முடியவில்லை.

நசிந்த பொறியியல் வணிகம்

நசிந்த பொறியியல் வணிகம்

கோவையில் பொறியியல் வணிகம் நசிந்துள்ளது. கன்னியாகுமரி உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என்ற நிலையில் அதற்கான எந்த பூர்வாங்கப் பணிகளும் தொடங்கப்படவில்லை. ராமநாதபுரத்தில் மீனவர்களுக்கு எங்கெங்கு மீன்கள் கிடைக்கும் என்பது தெரிவிக்கப்படும் என்ற வாக்குறுதி என்னவாயிற்று என்றே தெரியவில்லை. அதோடு தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் பலவீனமான பிரதமர் இருப்பதால்தான் ஏற்படுகிறது தன்னைப் போன்ற விரிந்த மார்பு கொண்ட பிரதமர் வந்தால் இது போன்ற பிரச்சனைகள் ஏறபடாது என்ற நிலையில் மீனவர்களின் கண்ணீர் இன்னும் நின்றபாடில்லை.

மக்களின் மனங்களை வெல்வாரா

மக்களின் மனங்களை வெல்வாரா

தற்போது நாகை, கடலூர், தஞ்சை போன்ற டெல்டா மாவட்டங்களில் ஒட்டு மொத்த மக்களும் வீடுகளின்றி வீதியில் நின்றபோது வராத பிரதமர் இப்போது வந்திருக்கிறார் என்றால் மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனை என்ற ஒற்றை மந்திரத்தை மட்டும் மனதில் கொள்வார்கள் என்பது சந்தேகமே. ஆக ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரும் ஆளுமைகள் தமிழகத்தில் இல்லாத இந்த சூழலில் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கும், பாஜக பொதுக் கூட்டத்திற்கும் வந்திருக்கும் பிரதமர் தமிழக மக்களின் மனங்களை வெல்வாரா என்பது ஐயமே.

English summary
Will Foundation to AIMS by PM pave Foundation to BJP in Tamilnadu?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X