For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணல் அம்பேத்கர்.... தேசத்தின் ஒளிவிளக்கு! #BabasahebDrAmbedkar

By Shankar
Google Oneindia Tamil News

-எஸ் ஷங்கர்

பாபாசாகேப் டாக்டர் பிஆர் அம்பேத்கர்...

அவரை ஓரளவாவது புரிந்தவர்கள், படித்தவர்களுக்கு மயிர்க் கூச்செரிய வைக்கும் பெயர்! முழுசாகப் புரிந்தவர்களுக்கு தன்னிகரில்லா தலைவர், வழிகாட்டி!

In the memory of Babasaheb Dr Ambedkar

கொடிய சூழலில் பிறந்து, மோசமான வறுமையில் படித்து, படிப்பில் உலகில் எவரும் தொடாத சிகரத்தை அடைந்தும், அந்த மேதைமையை தன் வாழ்க்கைக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல், மக்களின் விடியலுக்காகப் பயன்படுத்திய மாமனிதர்!

மேலைத் தேசம் சென்ற பிறகும் கூட விடாமல் துரத்திய வறுமையையும் பட்டினியையும் போராடித் தோற்கடித்து உயர் பட்டங்கள் பெற்றவர்.

இளமையில், கல்வி நிலையங்களில் மட்டுமல்ல, அரசியல் அரங்கிலும் அம்பேத்கர் மாதிரி அவமானங்களையும் போராட்டங்களையும் சந்தித்தவர்கள் யாருமில்லை.

மும்பையில் குடியிருக்க வீடு கிடைக்காத நிலையில், வேறு சாதிப் பெயரைச் சொல்லி வீடு பெறுகிறார். ஒரு நாள் அந்த உண்மை தெரிந்துவிட, வீட்டிலிருந்து துரத்தப்படுகிறார். கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு கழிந்த பிறகும் இந்த அவலம் தொடர்கிறது. அம்பேத்கரின் அவசியமும் தொடர்கிறது!

In the memory of Babasaheb Dr Ambedkar

ஒரு நாளில் நான்கு மணி நேரங்களைக் கூட தூக்கத்துக்கென்று ஒதுக்காத மனிதர் அண்ணல்.

எப்போதும் எழுத்து, படிப்பு, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்கான சிந்தனையிலேயே அவர் காலம் கழிந்தது. இந்த தூக்கமற்ற உழைப்பே அவருக்கு நீரிழிவு நோயைப் பரிசாக அளித்தது.

அப்படியும் கூட அந்த மனிதர், தன்னை மாற்றிக் கொள்ளவே இல்லை. "என் இறுதிக் காலம் நெருங்குகிறது.. ஆனால் என் மக்களின் துயரங்களுக்கான இறுதிக் காலம் ரொம்ப தூரத்திலிருக்கிறதே... என்னால் எப்படி வேளைக்கு உண்டு, உறங்கி காலம் தள்ள முடியும்?"

- தன்னைக் கவனித்துக் கொண்ட மருத்துவரிடம் அண்ணல் எழுப்பிய கேள்வி!

1954-ல் அவர் கண் பார்வையைப் பறித்தது நீரிழிவு. பார்வை போய்விட்டதெனக் கூறி பரிதாபம் தேடவில்லை அந்த மகாத்மா. மனித குலத்தின் விடியலுக்கான சமூக அரசியல் போரைத் தொடர்ந்தார். தன் மூச்சு நிற்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூட 'The Buddha and His Dhamma' என்ற புத்தகத்தை எழுதி முடித்திருந்தார்!

இந்தியா என்றல்ல... உலகெங்கும் ஒடுக்கப்பட்டவனாய் தன்னை உணரும் ஒவ்வொருவருக்கும் அம்பேத்கர்தான் ஒளிவிளக்கு. அவர் வாழ்க்கைதான் ஆகப் பெரும் நம்பிக்கை.

In the memory of Babasaheb Dr Ambedkar

அவர் தலித் மக்களுக்காக மட்டுமே எழுதினார், சட்டம் இயற்றினார், போராடினார் என்கிறார்கள். அப்படி ஒரு வட்டத்துக்குள் அவரை அடைக்க முயல்வது அறியாமை. உண்மை என்ன தெரியுமா... சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் என்ற பெருமையும் அதிகாரமும் மிக்க பதவியை, ஒன்றரை ஆண்டுக்குள் ராஜினாமா செய்தார். ஏன், யாருக்காக? பட்டியல் பிரிவினருக்காக ஒதுக்கீடு செய்தது போல, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் ஒரு சட்டம் இயற்றினார் அம்பேத்கர். அதுதான் அரசியல் சாசன சட்டம் பிரிவு 340 (Article 340, The Constitution Of India 1949). அதாவது பட்டியல் பிரிவு மக்களுக்கான சட்டங்கள் 341, 342வுக்கு முன்பாகவே பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அவர் எழுதிய சட்டம் இது. இதன்படி கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இதர மக்கள் குறித்து ஆய்ந்து சலுகைகள் வழங்க ஒரு கமிஷன் அமைக்க வேண்டும் என்பதுதான் சட்டத்தின் சாராம்சம். ஆனால் அப்படி ஒரு ஆணையத்தை அன்றைய நேரு அரசு அமைக்கவே இல்லை. அதற்கு தன் எதிர்ப்பைக் காட்டும் விதமாக தனது அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தார் அண்ணல்.

"ஆடுகளைத்தான் கோயில்களுக்கு முன்பாகப் பலியிடுவார்கள்... சிங்கங்களை அல்ல; நீங்கள் சிங்கங்களாய் இருங்கள்!"

- எத்தனை தலைமுறைகள் கடந்தாலும், இந்த நாட்டு மக்கள் மனதில் இருத்த வேண்டிய அண்ணலின் வார்த்தைகள் இவை.

டிசம்பர் 6.. இந்த தேசம் நன்றியோடு நினைவு கூற வேண்டிய மாமனிதர் மறைந்த நாள்! #BabasahebDrAmbedkar

இன்று பாரத ரத்னா பாபாசாகேப் டாக்டர் பிஆர் அம்பேத்கரின் 61வது நினைவு தினம்

English summary
An article In the memory of Babasaheb Dr Ambedkar's 61st death anneversary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X