For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய அரசை ஒருபோதும் தமிழர்கள் நம்ப மாட்டார்கள்- ராமதாஸ்

Google Oneindia Tamil News

India should bring resolution against SL in UNHRC, urges Dr Ramadoss
சென்னை தமிழர்களின் நலனில் மத்திய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே கொண்டு வர வேண்டும். அதை செய்யாத பட்சத்தில் இந்திய அரசை தமிழர்கள் ஒரு போதும் நம்ப மாட்டார்கள் என்பது உறுதி என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

இலங்கை இனப்படுகொலை குற்றச்சாட்டு மற்றும் போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்புவதற்காக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே நடத்திய காமன்வெல்த் மாநாடு, உலக அரங்கில் அவருக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சந்தித்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், போர்க் குற்றச்சாற்றுகள் குறித்து விசாரணை நடத்தி, குற்றம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சர்வதேச போர்க் குற்ற விசாரணைக்கு ஆணையிடப்படும் என்று எச்சரித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து இலங்கை அரசு நடுநிலையான விசாரனையை நடத்த வேண்டும் என்று சீனாவும் வலியுறுத்தியிருக்கிறது.

இன அழிப்புப் போரின்போது இலங்கை அரசுக்கு பல வழிகளிலும் உதவியதாக கூறப்படும் சீன அரசே, போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நெருக்கடி கொடுத்திருப்பது மிக முக்கியமான திருப்பமாகும். போர்க்குற்றம் தொடர்பான விவகாரத்தில் உலகச் சூழல் இலங்கைக்கு எதிராக திரும்பி வருவதையே இது காட்டுகிறது.

போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை நேருக்குநேராக எச்சரித்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், தொடர்ந்து அந்நாட்டிற்கு எதிரான அழுத்தத்தை அதிகரித்து வருகிறார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இலங்கை பிரச்சினை தொடர்பாக நேற்று சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்த அவர், இலங்கையில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் உறுதி அளித்திருக்கிறார்.

மேலும், போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார். ஈழத்தமிழர் நலனில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தொடர்ந்து காட்டி வரும் அக்கறை பாராட்டத்தக்கது. தனது நடவடிக்கைகளால் தமிழர்களின் மனதில் கேமரூன் கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார்.

ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள புதிய சூழலில், இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து இந்திய அரசு இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இலங்கை இனப்படுகொலை, போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான மறுவாழ்வு, சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் ஆகியவை குறித்தெல்லாம் பிரச்சினை எழுப்பப் போவதாகக் கூறி, காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், எந்த பிரச்சினை பற்றியுமே பேசாமல் வெறும் பார்வையாளராக கலந்து கொண்டு விட்டு திரும்பியிருக்கிறார்.

இந்தியாவின் இந்த அணுகுமுறை காரணமாகத் தான் உலக நாடுகளின் குரல்களை மதிக்காமல், போர்க் குற்றங்கள் குறித்து எந்த காலத்திலும் விசாரணை நடத்த முடியாது என்று மிகவும் திமிருடன் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறி வருகிறார்.

ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு மற்றவர்களை விட இந்திய அரசுக்குத் தான் அதிகம் உள்ளது. ஆனால், அந்தப் பொறுப்பை மத்திய அரசு தொடர்ந்து தட்டிக் கழித்து வருகிறது. இந்த அணுகுமுறை சரியல்ல.

தமிழர்களின் நலனில் மத்திய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே கொண்டு வர வேண்டும். அதை செய்யாத பட்சத்தில் இந்திய அரசை தமிழர்கள் ஒரு போதும் நம்ப மாட்டார்கள் என்பது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has urged the Indian govt to bring resolution against SL in UNHRC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X