For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாடு எக்கேடு கேட்டால் என்ன என்று நினைக்கிறது இந்த ஆட்சி...கருணாநிதி சாடல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தடுமாறுவதால் தமிழகத்தின் வளர்ச்சி தள்ளாடுவதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேடு, இன்று, "Infra Shutdown slows Down State" அதாவது "அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்கு மூடுவிழா நடத்தி விட்டதால் தமிழகத்தின் வளர்ச்சி தள்ளாடுகிறது"" என்ற தலைப்பில், தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை பற்றிய அதிர்ச்சி தரும் பல தகவல்களைத் தெரிவித்துள்ளது. அவையாவன :-

Industrial slow down: Karunanidhi blames Tamilnadu Government

25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. (மதுரவாயல் - சென்னைத் துறைமுகம் வரையிலான பறக்கும் சாலைத் திட்டம், எண்ணூர் - மணலி வரையிலான நெடுஞ்சாலைத் திட்டம், சென்னை - திருப்பதி நெடுஞ்சாலைத் திட்டம், சென்னை - தடா நெடுஞ்சாலைத் திட்டம், திருச்சி பை-பாஸ் திட்டம், கிருஷ்ணகிரி - வாலாஜாபாத் நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பல்வேறு செயற்கையான காரணங்களை தமிழக அரசு முன்னிறுத்தி வருவதால் தொடங்கப்படவில்லை).

38 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான மின் உற்பத்தித் திட்டங்கள் தொடங்கப்படாமல் உள்ளன. (660 மெகாவாட் எண்ணூர் அனல் மின் உற்பத்தித் திட்டம் - 1,600 மெகாவாட் உடன்குடி அனல் மின் உற்பத்தித் திட்டம் - 1600 மெகாவாட் உப்பூர் அனல் மின் உற்பத்தித் திட்டம் - 800 மெகாவாட் வடசென்னை அனல் மின் உற்பத்தித் திட்டம் - 1200 மெகாவாட் வடசென்னை சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் உற்பத்தித் திட்டம் - 660 மெகாவாட் எண்ணூர் விரிவாக்க அனல் மின் உற்பத்தித் திட்டம்)

மேலும் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், கருத்துரு கட்டத்தையே தாண்டவிடாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. மோதல் போக்கைக் கைவிட்டு தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் விரைவாக நிறைவேற்றப்பட ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்று தமிழக அரசைப் பல முறை மத்திய அரசு வற்புறுத்திக் கேட்டும்கூட, எவ்விதப் பலனும் ஏற்படவில்லையாம்.

மிகப் பெரிய நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதன் மூலம் தமிழக அரசின் தொழில் வளர்ச்சிக்கு முற்றிலும் எதிரான போக்கு வெளிப்பட்டிருக்கிறது.

மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாததன் காரணமாக கார் தொழிற்சாலைகள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, துறைமுகம் மூலம் அனுப்பப்படும் கார்கள் 48 மணி நேரத்திற்கு மேலாக துறைமுகத்திலேயே வீணாகக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பண விரயமும், கால விரயமும் ஏற்படுகின்றன.

உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்யும் தொகை குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவின் சராசரி செலவுத் தொகையான 7 சதவிகிதத் திலிருந்து 8 சதவிகிதம் என்பது, தமிழகத்தைப் பொறுத்தவரை வெறும் 5 சதவிகிதமாகச் சுருங்கி விட்டது.

முக்கியமான இந்தக் காரணத்தினாலேதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 2012-2013ஆம் ஆண்டில் தேசிய சராசரியான 4.4 சதவிகிதம் என்பதற்கு மாறாக 3.39 சதவிகிதமாகக் குறைந்து விட்டது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, திரு.தேவசகாயம், "ஒரு திட்டத்தைத் தமிழகத்தில் தொடங்குவதற்கே எடுத்துக் கொள்ளப்படும் நேரம் அரசியல் தலையீடுகளின் காரணமாக மிகவும் அதிகமாகி விட்டது. தொழில் தொடங்குவதற்காக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திப்பது என்பதே குதிரைக் கொம்பாக இருந்ததால், எதிலும் முடிவெடுப்பது இயலாத ஒன்றாக ஆகி விட்டது"" என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டினைத் தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக உலகம் முழுதும் உள்ள முதலீட்டாளர்களை அக்டோபர் மாதத்திலேயே சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றும் அந்தச் சந்திப்பு இதுவரை நிகழவில்லை.

ஜெயலலிதாவுக்குக் கிடைத்த தண்டனை மாநில நிர்வாகத்தை மேலும் முடமாக்கி விட்டது. வேறு முதலமைச்சர் பதவியேற்றிருந்தாலுங்கூட, தொழில் வளர்ச்சிக்கு எந்தவிதமான உந்துதலும் இல்லை. தமிழ்நாடு எக்கேடு கெட்டால் என்ன என்று நினைக்கின்ற ஆட்சியும் அதற்கு "பஜனை" பாடுகின்ற சில ஏடுகளும் இருக்கின்ற வரையில் இப்படித்தான் நடக்கும்

இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

English summary
Karunanidhi blames Tamilnadu Government for industrial slow down in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X