For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்துக்குள் சிந்து பாடுகிறாரா வாசன்?.. தனி அணியாக திரளும் த.மாகா., வி.சி, கம்யூனிஸ்டுகள்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியல் களத்தில் புதிதாக ஒரு அணி திரண்டு வருவதாக சந்தேகப் பார்வை கிளம்பியுள்ளது. நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் இணைந்து நடத்திய கூட்டம்தான் இதை வலுவாக்கியுள்ளது. வாசனுடன் இணைந்திருப்போம் என்று மற்ற தலைவர்கள் கூறியதை வைத்துப் பார்க்கும்போது அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கான புதிய அணிக்கான கட்டியமாக இது பார்க்கப்படுகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காந்தி நினைவு நாளையொட்டி நேற்று சென்னையில் கருத்தரங்கம் மதசார்பற்ற இந்தியாவின் சவால்களும் அச்சுறுத்தல்களும் என்ற தலைப்பில் நடந்த இந்த கருத்தரங்குக்கு ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.

இதை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் ஜி.கே.வாசன், பிருந்தா காரத் தவிர விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், டி.ராஜா எம்.பி., மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதம் சார்ந்து இயங்கக் கூடாது

மதம் சார்ந்து இயங்கக் கூடாது

கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசுகையில், தனி மனிதன் மதத்தை, மத நூல்களை பின்பற்றலாம். ஆனால் அரசு அரசியல் அமைப்பு சட்டத்தைதான் பின்பற்ற வேண்டும். மதம் சார்ந்து இயங்கக்கூடாது. மதம் சார்ந்த அரசாக இல்லாமல் மக்கள் நலம் சார்ந்த அரசாக இருக்க வேண்டும்.

இந்தியர்களாக ஒன்றுபடுகிறோம்

இந்தியர்களாக ஒன்றுபடுகிறோம்

மதம், இனம், மொழி என்ற பல்வேறு வேறுபாடுகளை கொண்டது நமது நாடு. ஆனால் சிந்தனை செயல் ஆகியவற்றில் இந்தியர்கள் என்ற உணர்வுடன் ஒன்றுபடுகிறோம். இந்தியாவில் 110 கோடி மக்கள் தொகை உள்ளது. அதில் 22 கோடி பேர்தான் மத சிறுபான்மையினர்களாக உள்ளனர். அவர்களை ஒதுக்கி விட்டு எப்படி வளர்ச்சி அடைய முடியும்.

மதச்சார்பின்மையைக் காக்க வேண்டும்

மதச்சார்பின்மையைக் காக்க வேண்டும்

காந்தி கற்றுத்தந்த மதசார்பின்மையை காப்பாற்ற வேண்டும். காந்தி, நேரு அமைத்துக் கொடுத்த அடித்தளமான பாராளுமன்ற ஜனநாயகத்தை அசைத்துப் பார்க்க பா.ஜனதா அரசு முயற்சி செய்கிறது. காந்தியை கொலை செய்த கோட்சேவுக்கு சிலை வைப்போம். கோவில் கட்டுவோம் என்றெல்லாம் பேசுகிறார்கள். இந்த அச்சுறுத்தும் சவால்களை நாம் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என்றார்.

சரியான நேரத்தில்.. பிருந்தா காரத்

சரியான நேரத்தில்.. பிருந்தா காரத்

பிருந்தா காரத் பேசுகையில், சரியான நேரத்தில் இந்த கருத்தரங்குக்கு ஜி.கே. வாசன் ஏற்பாடு செய்துள்ளார். தமிழகம் சமூக மறு மலர்ச்சிக்கு வித்திட்ட பூமி. தற்போது இந்தியாவில் மத சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மத்திய பா.ஜனதா அரசுக்கு 31 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். அரசியல் சாசனத்தில் இருந்து மதசார்பின்மை சோசலிசம் என்ற வார்த்தைகளை நீக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. இதை முறியடிக்க காந்தி நினைவு நாளில் உறுதி ஏற்போம். காந்தி வலியுறுத்திய மதசார்பின்மை கொள்கைகளும், ஜனநாயக கொள்கைகளும் நீர்த்துப் போக செய்யும் முயற்சியில் பா.ஜனதா அரசு ஈடுபட்டுள்ளது.

காந்தியை மட்டுமா கொன்றார் கோட்சே

காந்தியை மட்டுமா கொன்றார் கோட்சே

காந்தி கோட்சேவால் கொலை செய்யப்பட்டார். அவன் காந்தியை மட்டும் சுட்டுக்கொல்லவில்லை. இந்திய அரசியல் சாசனத்தை கொலை செய்துள்ளான். இந்திய அரசியல் சாசனம் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது.

ஒபாமாவே சொல்கிறார்

ஒபாமாவே சொல்கிறார்

சமீபத்தில் இந்தியா வந்த ஒபாமா மதசார்பின்மை குறித்தும், அரசியல் அமைப்பு சட்டத்தின் 25வது பிரிவை சுட்டிக்காட்டி இருக்கும் மத சார்பின்மை பற்றியும் கூறினார். ஒரு வெளிநாட்டு அதிபர் நமது நாட்டுக்கு வந்து மதசார்பின்மை பற்றி நமக்கு பாடம் நடத்த வேண்டிய இக்கட்டான நிலையில் நாம் இருக்கிறோம். அந்த அளவு மதம் சார்ந்த நிலையில் மத்திய அரசு உள்ளது.

லவ் ஜிகாத் என்ற பெயரில்

லவ் ஜிகாத் என்ற பெயரில்

இந்துத்துவா என்பது சிறுபான்மையினருக்கு மட்டும் எதிரானது அல்ல. சமூக ஒற்றுமை, பெண்களுக்கு எதிரானது. பண்பாடு கலாச்சாரம் என்ற பெயரில் பெண்கள் தங்களது துணையை தேர்வு செய்யும் உரிமையை தடுக்கிறார்கள். லவ் ஜிகாத் என்ற பெயரில் பெண்கள் காதலிப்பதை எதிர்க்கிறார்கள்.

இது பெரியார் பிறந்த பூமி

இது பெரியார் பிறந்த பூமி

தீண்டாமைக்கு எதிராக இந்துத்துவா போராடவில்லை. இது பெரியார் பிறந்த பூமி. தமிழக அரசியலை மதசார்பின்மை, சமூக நீதியை மையமாக வைத்து எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டணி என்பார்கள்.. திருமா

கூட்டணி என்பார்கள்.. திருமா

திருமாவளவன் பேசுகையில், ஒரு இக்கட்டான கால கட்டத்தில் ஒன்று சேர்ந்து இருக்கிறோம். இதை அடுத்து வரும் தேர்தல் கூட்டணி என்று ஊடகங்கள் நாளை சொல்லும். ஆனால் இது மக்களை காப்பதற்காகவும், மதவெறி அச்சுறுத்தலை தடுத்து நிறுத்துவதற்காகவும், தேசத்தை மிகப்பெரிய ஆபத்தில் இருந்து மீட்கவும் கூடியுள்ள கூட்டம். நரேந்திர மோடி மக்கள் நலன் சார்ந்தவராக இல்லை. மதவெறிபாசிஸ்ட் ஆக இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டுதான் ஒபாமா மதசார்பின்மையை கடைபிடிக்கும்படி எச்சரித்து சென்றுள்ளார்.

படேலுக்கு ஏன் சிலை

படேலுக்கு ஏன் சிலை

படேலுக்கு வானுயர சிலை வைக்கிறார்கள் ஏன்? காந்தியின் அடையாளத்தை சிதைப்பதற்காகத்தான். இதற்கு காங்கிரஸ் முகாமில் இருந்து எதிர்ப்பு வரும் என்று நினைத்தேன். ஆனால் வரவில்லை. கோட்சேவுக்கு சிலை வைப்போம் என்றார்கள். அதற்கும் காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு வரவில்லை. காங்கிரஸ் செய்யத்தவறிய காரியங்களை தமிழ் மாநில காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும். சாத்வீகமான காந்தியை சுட்டுக் கொன்றதை வைத்தே ஆர்.எஸ்.எஸ்.-ன் கொடூரமுகத்தை அறிந்து கொள்ள முடியும். இந்தியா வன்முறை நாடாக மாறி வருகிறது.

சக்திகள் இணைய வேண்டும்

சக்திகள் இணைய வேண்டும்

கடந்த தேர்தலில் மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணையாததால் தான் மோடி வெற்றி பெற்றார். இதே நிலை நீடித்தால் மோடியின் கொட்டம் இன்னும் அதிகமாகும். சிறுபான்மை மக்களை பாதுகாக்க, நாடு முழுவதும் மக்கள் அமைதியாக வாழ மதசார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டும்.

தூண்டி விடுவார் அமீத் ஷா

தூண்டி விடுவார் அமீத் ஷா

தமிழகத்தில் பா.ஜனதா வேரூன்ற எப்படிப்பட்ட மோதல்களையும் அமித்ஷா தூண்டி விடுவார். இது பெரியார், மூப்பனார் என்று பல பக்குவப்பட்ட தலைவர்கள் பிறந்த மண். இங்கு எந்தவித மோதலுக்கும் இடம் கொடுத்து விடக்கூடாது என்றார்.

கூட்டணிக்கான அச்சாரமா

கூட்டணிக்கான அச்சாரமா

இந்தக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் வாசனுடன் இணைந்து போராடுவோம், செயல்படுவோம் என்று கூறியது கவனிக்கத்தக்கது. வரும் சட்டசபை பொதுத் தேரத்லில் வாசனுடன் இணைந்து அவர்கள் சந்திக்க முயலலாம் என்று தெரிகிறது. கூடுதலாக மேலும் சில கட்சிகளையும் சேர்க்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

வாசனின் விருப்பமும் அதுவே

வாசனின் விருப்பமும் அதுவே

அடுத்த தேர்தலை தனியாக சந்தித்தால் டெபாசிட் கூட தேறாது என்பதால் கூட்டணியாக களம் இறங்கவே வாசனும் விரும்புகிறார். இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகவே நேற்றைய கருத்தரங்கம் பார்க்கப்படுகிறது.

இது கூட்டணியாக மாறுமா என்பதை அடுத்த தேர்தலுக்கு முன்பு வரை நாம் உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியாதுதான்.. இருந்தாலும் காத்திருந்து பார்க்கலாம்.

English summary
Yesterday' TMC organised seminar has created some curiosity among the political buffs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X