For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலர்ந்தது 'மதிமுகம்'... பல்கிப் பெருகும் சேனல்களால் என்ன லாபம்?

By R Mani
Google Oneindia Tamil News

- ஆர்.மணி

தமிழ் நாட்டிற்கு புதியதோர் வரவாக வந்திருக்கிறது ‘மதிமுகம்' தொலைக்காட்சி. இன்று காலையில் இந்த சேனலின் முறையான ஒளிபரப்பை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொத்தானை அழுத்தி தொடங்கி வைத்தார். சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது இந்த தொலைக் காட்சி சேனலின் அலுவலகம்.

பொழுது போக்கு மற்றும் செய்திச் சேனல் (ஜிஈசி சேனல்) இது. தினமும் நான்கு செய்திகள் ஒளிபரப்பாகவிருக்கின்றன. இது தவிர பத்திரிகைகளில் வரும் முக்கியமான செய்திகளை அலசும் நிகழ்ச்சி, விவாத நிகழ்ச்சிகள் மற்றும் டாக் ஷோக்களும் ஒளிபரப்பாக விருக்கின்றன.

அதிகாரபூர்வமாக இல்லாவிட்டாலும் ‘மதிமுகம்' மறுமலர்ச்சி திராவிடக் கழகத்தின் ஆதரவு சேனல்தான் என்பதுதான் யதார்த்தம். ஒளிபரப்பின் துவக்கத்திலேயே வைகோ தனக்கேயுரிய தோரணையில் நேயர்களுக்கு ஆற்றும் உரை சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

Is there any benefit from Politicised TV Channels?

‘நடுநிலையான சேனலாக இருப்போம் ... ஆக்கபூர்வமான அரசியல் விவாதங்களை நடத்துவோம் ... பாரம்பர்யத்தை காப்பாற்றும் விவாதங்களை, நிகழ்ச்சிகளை நடத்துவோம் ... செய்திகளை தருவோம் ...' என்றெல்லாம் வைகோ சேனலின் அறிமுக உரையில் பேசிக் கொண்டிருக்கிறார்.

தற்போதே அரசு கேபிள், டிசிசிஎல், ஜேக், பாலிமர் மற்றும் அக்ஷயா உள்ளிட்ட கேபிள் அலைவரிசைகளில் ‘மதிமுகம்' ஒளிபரப்பாகத் துவங்கி விட்டது. எடுத்த எடுப்பிலேயே அரசு கேபிளில் ‘மதிமுகம்'' தெரியத் துவங்கியிருப்பது ஆச்சரியமான, சுவாரஸ்யமான நிகழ்வுதான். தமிழ் நாட்டின் தற்போதய அரசியல் மற்றும் மீடியா விவகாரங்களையும், அரசு கேபிளின் செயற்பாடுகளையும் விருப்பு, வெறுப்பு இன்றி ஊன்றிப் பார்க்கும் பார்வையாளர்களிடம் நமட்டுச் சிரிப்பை வரவழைக்கும் நிகழ்வு, ஆரம்பக் கட்டத்திலேயே ‘மதிமுகம்' அரசு கேபிளில் இடம் பெற்றது.

தமிழ் நாட்டில் அனேகமாக அனைத்து பிரதான அரசியல் கட்சிகளுமே தங்களுக்கென்று ஒரு சேனலை - செய்திச் சேனல் அல்லது ஜிஈசி சேனல் - இன்று வைத்துக் கொண்டிருக்கின்றன. திமுக வுக்கு கலைஞர் டிவி மற்றும் கலைஞர் செய்திகள், அஇஅதிமுக வுக்கு ஜெயா டிவி மற்றும் ஜெயா பிளஸ் நியூஸ், காங்கிரசுக்கு வசந்த் டிவி, மெகா டிவி, பாமக வுக்கு மக்கள் தொலைக் காட்சி, தேமுதிக வுக்கு கேப்டன் டிவி மற்றும் கேப்டன் நியூஸ், பாஜக வுக்கு லோட்டஸ், இந்திய ஜனநாயக கட்சிக்கு வேந்தர் டிவி, நாம் தமிழர் கட்சிக்கு தமிழன் டிவி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெளிச்சம் டிவி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் என்ற கட்சிக்கு ‘வின் டிவி' (இது யாதவ சமூகத்தினரின் நலன்களைக் காப்பதற்கான கட்சியாக அறியப் படுகிறது)... அந்த வரிசையில் இன்று ‘மதிமுகம்' இன்று மலர்ந்திருக்கிறது. இடது சாரிகளுக்கு மட்டும்தான் இன்று தமிழகத்தில் சேனல் இல்லை.

இந்தியாவில் இன்று பல மாநிலங்களிலும் கிட்டத்தட்ட இதுதான் நிலைமை. அதாவது அரசியல் கட்சிகள் தங்களுக்கென்று ஒரு சேனலை ஆரம்பித்துக் கொள்ளுவது. ஆனால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் இது அதிகம் என்று தற்போது அறியப்பட்டிருக்கிறது. பிற மாநிலங்களில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஒன்றிரண்டு பெரிய பிராந்திய கட்சிகள் மட்டுமே டிவி சேனல்களை வைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இன்று தமிழகத்தில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளுமே டிவி சேனல்களை வைத்திருக்கின்றன.

இன்னும் சொல்லப் போனால் தமிழ் நாட்டில் தொலைக் காட்சி சேனல்களின் வெற்றிக்கு ஒரு கட்சியின் பின்புலத்தில் வந்த சேனல்தான் முகவுரை எழுதியது என்பதுதான் ஆச்சரியமான, சுவாரஸ்யமான தகவல். 1993 ம் ஆண்டு முதலில் தினமும் நான்கு மணி நேரம் என்று பரீசார்த்த முறையில் ஒளிபரப்பை துவங்கிய ‘சன் தொலைக்காட்சி' மூன்றே ஆண்டுகளில் தன்னுடைய வெற்றிச் சரித்திரத்தை எழுதியது. 1991 - 1996 ம் ஆண்டு காலத்திய ஜெயலலிதா ஆட்சியின் அராஜகங்களும், அவலங்களும் ‘சன் டிவி' க்கு உரமாக அமைந்தன.

1995 செப்டம்பர் 7 ம் தேதி ஜெயல லிதா வின் வளர்ப்பு மகன் திருமணம். அதற்கு முதல் நாள் மிகப் பிரமாண்டமான மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அடையாறில் நடந்த அந்த வரவேற்பு ஊர்வலத்தில்தான் முதலமைச்சர் ஜெயலலிதா வும், சசிகலா வும், ஏராளமான உறவினர்கள் புடை சூழ வலம் வந்தனர். அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய ‘சன்' டிவி ஒரே இரவில் ஏக இந்தியாவிலும் புகழ் பெற்றது.

1996 ம் ஆண்டில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தில் திமுக பதவிக்கு வந்த பின்னர், ‘சன் டிவி' தன்னுடையை கால்களை ஆழமாக ஊன்றிக் கொண்டது. 1995 வரை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்து ‘ஜெஜெ டிவி. 1996 ல் திமுக பதவிக்கு வந்த பின்னர், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்குகளால் மூடப்பட்டது.

1999 ல் ‘ஜெயா டிவி' தன்னுடையை ஒளிபரப்பைத் தொடங்கியது. அதன் பின்னர் இந்த 17 ஆண்டுகளில் ஒவ்வோர் அரசியல் கட்சியும் தங்களுக்கென்று ஒரு செய்திச் சேனலையாவது அல்லது ஜிஈசி சேனலையாவது துவங்கிக் கொண்டேதானிருக்கின்றன.

2007 ம் ஆண்டில் திமுக தலைவர் மு.கருணாநிதியின் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையால் உருவானது ‘கலைஞர் டிவி' மற்றும் ‘கலைஞர் செய்திகள்' சேனல்கள். அதுவரையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இயங்கிக் கொண்டிருந்து ‘சன் டிவி' பின்னர் தனியாக பத்து மாடிக் கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்து விட்டது.

இதில் ஒரு சராசரி தொலைக்காட்சி நேயர் கவனிக்க வேண்டிய விஷயம் பல்கிப் பெருகும், பச்சையாகவே அரசியல் சாயம் பூசிக் கொண்டிருக்கும் இந்தச் சேனல்களால் என்ன லாபம்? யாருக்கு லாபம்? இந்தப் போக்கு தகவல் பரிமாற்றத்தை, உண்மையான செய்திகள் மக்களிடம் போய்ச் சேருவதை எப்படி பாதிக்கிறது என்பதையும், அதற்கடுத்தபடியாக இது அரசியல் ஜனநாயகத்தை எப்படி பாதிக்கிறது என்பதையும்தான்.

‘அடிப்படையில் இரு ஒரு ஆரோக்கியமான போக்கு. முன்பு அரசியல் கட்சிகளுக்கு என்று ஒரு பேப்பர் இருந்தது. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் இது சேனல் ... வெகுஜன மக்கள் திரளுடன் அரசியல் கட்சிகள் நடத்தும் விவாதம், பேச்சு (political communication) என்றே நாம் இதனை வரவேற்கலாம். ஆனால் இத்தகைய சேனல்களை நடத்துபவர்கள் தங்களை நடுநிலை என்று சொல்லிக் கொள்ளக் கூடாது. அதுதான் சிக்கலே. நீங்கள் ஒரு கட்சியின் ஆதரவு நிலைப்பாட்டில் நாங்கள் செயற்படுகிறோம் என்று கூட வெளிப்படையாக சொல்லிக் கொள்ள வேண்டாம். ஆனால் நடுநிலை என்ற தோற்றம் (pretending) கொள்ள வேண்டாம். இதில் உள்ள இன்னுமோர் சிக்கல் அரசியல் கட்சிகளின் சார்பாக இயங்கும் சேனல்கள் குறைந்த பட்ச தொழில் முறை அளவுகோல்களையும் (Professioal standards) குறைந்த ஊடக அறத்தையும் (media ethics) கடைபிடிக்காமல் செயற் பட்டுக் கொண்டிருப்பதுதான்,'' என்று ஒன் இந்தியா விடம் கூறினார் அரசியல், மீடியா விமர்சகரும், எழுத்தாளருமான ஆழி செந்தில் நாதன்.

ஒரு கட்சி தனக்கென்று ஒரு பேப்பரை நடத்திக் கொள்ளுவதற்கும் ஒரு சேனலை நடத்துவதற்கும் அடிப்படையிலேயே சில வித்தியாசங்கள் இருக்கின்றன. ‘விடிவெள்ளி' என்ற காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஒரு நாளிதழில் நான் பணியாற்றிய போது அதன் ஆசிரியர் தெள்ளூர் மு தருமராசன் கட்சி பேப்பர்களை பற்றி இவ்வாறு கூறுவார்: 'ஒரு கட்சி பேப்பர் என்பது நியூஸ் பேப்பர் கிடையாது. அது வியூஸ் பேப்பர்தான். செய்திகளுக்கு மற்ற பேப்பர்களைத்தான் படிக்க வேண்டும்'. அதுதான் ‘முரசொலி', ‘நமது எம்ஜிஆர்', ‘தீக்கதிர்' போன்ற பேப்பர்களுக்கு இன்றளவும் உண்மை.

ஆனால் ஒரு சேனலுக்கு இந்த இலக்கணம் பொருந்தாது. சுவிசேஷச் சேனல்கள் வெளிப்படையாகவே தங்களது நோக்கத்தை தெளிவுபடுத்தி விடுகின்றன. அதில் ஒளிவு, மறைவு இல்லை. ஆனால் வலுவான தங்களது நோக்கத்தை மறைத்துக் கொண்டு ஒரு அரசியல் கட்சியின் சேனல் செயற்படும் போது அங்கு முதலில் பலியாவது தொழில் முறை அளவுகோல்களும் (Professional standards) குறைந்த ஊடக அறமும்தான் (media ethics). தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது அந்த முடிவுகள் தங்களது கட்சிக்கு சாதகமாக இல்லையென்றால், திடு திப்பென்று, அப்படியே அந்த முடிவுகளை விவாதித்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியை நிறுத்தி விட்டு சினிமா பாடல்களை போடத் துவங்குவதுதான் பெரும்பாலான கட்சி சேனல்களின் நிலைப்பாடாக இருக்கிறது.

"ஒரு பக்குவமடைந்த (matured) மீடியா இப்படி செயற்படாது. ஆனால் இங்கு அதுதான் நடக்கிறது. இது அந்தந்தச் சேனல்கள் தங்களது நேயர்களை கேவலப் படுத்தும் நடவடிக்கை என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் எதையும் எவரும் யாரிடமிருந்தும் மறைக்க முடியாது என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாத காரணத்தினால்தான் இவையெல்லாம் நடக்கின்றன," என்று கூறுகிறார் ஆழி செந்தில்நாதன்.

இன்று தமிழ்நாட்டில் ஒரு கட்சி, தேர்தல் அரசியல் களத்தில் செயல்பட வேண்டுமானால் அதற்கென்று ஒரு சேனல் தேவையென்பது அத்தியாவசிய தேவையாகி விட்டது. இது போன்று கட்சி சேனல்களின் நோக்கம் லாபம் கிடையாது. அந்தந்த கட்சிகளின் தீவிர விசுவாசிகளும் கூட இன்று உண்மையான செய்திகளைத் தெரிந்து கொள்ள இந்தச் சேனல்களை பார்ப்பது இல்லை. விவரம் அறியாத திருவாளர் பொது ஜனம் வேண்டுமானால் அந்த தவறை அடிக்கடியோ, அவ்வப்போதோ செய்யலாம். "ஒரு விதத்தில் இத்தகையை அரசியல் சார்பு நிலைக் கொண்ட சேனல்களின் வெற்றிக்கு தொழில்முறையில் செயற்படும், ப்ரொஃபஷனல் சேனல்கள்தான் காரணம் என்றே நான் கூறுவேன். பின்னவர் தொடர்ந்து செய்யும் சில காரியங்கள்தான் முன்னவரின் பாப்புலாரிட்டிக்கு சில சமயங்களில் வழி வகுத்து விடுகிறது," என்று மேலும் கூறுகிறார் ஆழி செந்தில்நாதன்.

இந்தியா முழுவதிலும் காணப்படும் ஒரு நிலைமைதான் தமிழகத்திலும் இன்று காணப்படுகிறது. அதாவது அரசியல் கட்சிகள் இன்று சேனல்கள் துவங்குவது என்பது கார்ப்போரேட் நிறுவனங்களுக்கும் விரிவடைந்து விட்டது. தங்களது வர்த்தக நலன்களை காப்பதற்காக ஒரு கார்ப்பேரட் நிறுவனம் சேனலை துவங்குவது முதலில் தன் மீதான விமர்சனங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் கேடயம் என்பதில் துவங்கி, எதிரி நிறுவனங்களை தோலுரிப்பது என்று விரிவடைகிறது. பின்னர் நாட்டின் முக்கியமான கொள்கைகளை வகுப்பதில் ஆதிக்கம் செலுத்துவதில் போய் முடிகிறது.

இதில் பலியாவது மக்களிடம் உண்மை செய்திகள் போய்ச் சேருவது என்பதுதான்.

"பட்டவர்த்தனமாக அரசியல் கட்சிகளின் ஊதுகுழலாக செயற்படும் சேனல்களால்தான் சமநிலையான சேனல்களின் (balanced channels) பணி சிதைக்கப் படுகிறது. அதுவும் நெருக்கடியான தருணங்களில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எதிரான மிக முக்கியமான நிகழ்வுகள் ஏற்படும் சமயங்களில் உண்மைகள் காவு கொடுக்கப் படுகின்றன. மேலும் தங்களுக்கென்று ஒரு சேனலை வைத்துக் கொண்டிருக்கும் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் சம நிலையான சேனல்களை மதிப்பதில்லை. நான் ஏன் உன்னிடம் பேச வேண்டும் என்று எகத்தாளமாக கேட்கும் நிலையும் ஏற்பட்டு விட்டது. எனது அனுபவத்தில் நான் பார்த்தது அரசியல் கட்சிகளின் சேனல்கள் இன்று சம நிலையான சேனல்களின் செயற்பாடுகளுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான். சில நேரங்களில் நாங்கள் இதனால் பல விதமான நெருக்கடிகளுக்கு ஆளாகின்றோம்," என்கிறார் சென்னையில் பணியாற்றும் வட இந்திய ஆங்கில செய்திச் சேனலின் செய்தியாளர் ஒருவர்.

இன்றைய தமிழக ஊடகச் சூழலின் உண்மையான தோற்றத்தை பிரதிபலிப்பது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம். ஒரு குறிப்பிட்ட சேனல் அல்லது அரசியல் கட்சிக்கு எதிரானது அல்ல இந்தக் கட்டுரை. சேனல்கள் பல்கிப் பெருகுவதால் சில ஆயிரம் பத்திரிகையாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பது ஆரோக்கியமானதுதான். ஆனால் இன்று ஒரு செய்தியைத் தெரிந்து கொள்ள பாரம்பர்ய ஊடகங்களை நம்பியிராமல் சமூக வலைதளங்களை மக்கள் நாடும் போக்கு மிக அதிக அளவில் வளர்ந்து வரும் சூழலில், தொழில் முறை அளவுகோல்களை காவு கொடுத்துக் கொண்டிருக்கும் சேனல்களால் நஷ்டம் யாருக்கு என்பதுதான் அடிப்படைக் கேள்வி.

கையளவில் உலகம் சுருங்கி விட்ட சூழ்நிலையில் இன்னும் எத்தனை காலத்துக்கு தற்போதய தோற்றத்திலேயே கட்சி சார்புச் சேனல்கள் செயற்படப் போகின்றன என்று தெரியவில்லை காலத்துக்கு ஏற்ப மாற மறுக்கும் எதுவும் மறைந்து போகும் என்பது இயற்கை விதி.

English summary
Nowadays every political party is having their own TV channels. Today MDMK has launched a new channel titled Mathimugam. What is the benefir for people through these politicised channels? Here columnist Mani's article discussed this issue deeply.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X