For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வரலாற்று பிழை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டம்- ஸ்டாலின்

அனைத்து கட்சி கூட்டம் திமுகவின் கூட்டமல்ல. இன்று வராதவர்கள் நாளை நம்மோடு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி விவகாரத்தில் வரலாற்று பிழை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிமுக அரசோ வேறு எந்தகட்சியோ இந்த கூட்டத்தை நடத்தியிருந்தால் திமுக பங்கேற்று இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சி கூட்டம் திமுகவின் கூட்டமல்ல. இன்று வராதவர்கள் நாளை நம்மோடு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் திமுக இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பங்கேற்கவில்லை. காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ், தமாகா, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகள் பங்கேற்றுள்ளன. திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன், கீ.வீரமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வந்த தலைவர்களை வரவேற்று ஸ்டாலின் பேசினார். அப்போது காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் கர்நாடக அரசு உருவாக்கியுள்ள பிரச்சினைக்காகக் கூட்டப்பட்டுள்ள இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், தலைவர்களையும், விவசாய அமைப்புகளைச் சேர்ந்த அன்பு நண்பர்களையும் வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

விவசாயிகள் பிரச்சினை

விவசாயிகள் பிரச்சினை

இந்தப் பிரச்சினையின் தொடக்கம் முதலே இது நமது விவசாய பெருமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதாலும்; காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்குள்ள நியாயமான, சட்டரீதியிலான உரிமைக்குக் குரல் கொடுத்து நிலை நாட்டிட வேண்டிய பிரச்சினை என்பதாலும்; நடுவர் மன்றம் அமைப்பது ஒன்றே தீர்வுகாண உதவிடும் என்பதால் முதன்முதலில் அதற்கான நகர்வை முன்னெடுத்து சட்டப்படி நடுவர் மன்றம் அமைத்திடவும், நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பினைப் பெற்றிடவும், அதைத் தொடர்ந்து இறுதித் தீர்ப்பினைப் பெற்றிடவும், அரசியல் ரீதியான பேச்சு வார்த்தைகள் - அலுவல் ரீதியான கடிதங்கள் - நீதிமன்ற நடவடிக்கைகள் என அனைத்துத் தளங்களிலும் தயங்காமலும், தவறாமலும் பாடுபட்டவர் தலைவர் கலைஞர் என்பதாலும்; திராவிட முன்னேற்றக் கழகம் அறிவுப் பூர்வமாகவும், உணர்ச்சிப் பூர்வமாகவும் ஈடுபாடு காட்டி வருகிறது.

அறவழி போராட்டங்கள்

அறவழி போராட்டங்கள்

தமிழ்நாட்டிற்குரிய நீர்ப் பங்கீட்டினை முறையாகவும் சட்டப்படியும் செய்வதற்குக் கர்நாடக அரசு தவறிவிட்ட காரணத்தினால், கடந்த ஐந்தாண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் குறுவை விவசாயம் பொய்த்துப் போய் விட்டது. இந்த ஆண்டு சம்பாவும் கேள்விக் குறியாகி விட்டது. முப்போகம் என்பது ஒரு போகம் மட்டும்தான் என்று சுருங்கி, தற்போது அந்த ஒரு போகத்திற்கும் ஊறு விளைந்து சூனியமாகி விட்டது. விவசாயப் பெருமக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அறவழிப் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள். அவர்களுடைய போராட்டங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்கவும், போராட்டங்களில் பங்கேற்கவும் முன்வந்திருக்கின்றன.

கண்டு கொள்ளாத அரசு

கண்டு கொள்ளாத அரசு

காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை தமிழகத்தின் பொதுப் பிரச்சினை என்பதால், ஓரிரு அரசியல் கட்சிகளைத் தவிர, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிப் போராடத் தொடங்கி விட்டன. தற்போதைய போராட்டங்கள் தொடங்கியதிலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பிலும், விவசாய அமைப்புகளின் சார்பிலும்; தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் - சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி ஒருமனதான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று, இந்தியப் பிரதமரை நேரில் சந்தித்து முறையிட்டு அரசியல் அழுத்தம் தர வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் வைத்தும்; தமிழக அரசு அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

சட்டசபை எதிர்கட்சி

சட்டசபை எதிர்கட்சி

விவசாய அமைப்புகளின் கூட்டத்தை நடத்தி, தீர்மானங்களை நிறைவேற்றி, அவற்றை நேரடியாக நானும், கழகத்தின் முதன்மைச் செயலாளரும் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களைச் சந்தித்து வலியுறுத்தியும் கூட, தமிழக அரசு அசைந்து கொடுக்கவில்லை. காவிரிப் பிரச்சினையில் விவசாயப் பெருமக்களுக்கு ஆதரவளித்திடும் அமைப்புகள் அனைத்தையும் ஒன்று திரட்டி ஒருமுகமாக ஒரே நோக்கில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான முயற்சி எதையும் தமிழக அரசு மேற்கொள்ளாத காரணத்தாலும்; பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் - ஐந்து முறை தமிழகத்தில் ஆட்சி நடத்திய கட்சி என்ற முறையிலும், தற்போது சட்டப் பேரவையில் 89 உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய எதிர்க்கட்சி என்ற முறையிலும் - கூட்டிட முன்வர வேண்டும் எனக் கேட்டு வந்தன.

கர்நாடகாவில் ஒற்றுமை

கர்நாடகாவில் ஒற்றுமை

கர்நாடக மாநிலத்தில் எதிரும் புதிருமாகச் செயல்படும் அரசியல் கட்சிகளும் கூட, கர்நாடக அரசுடன் கைகோர்த்து ஓரணியில் திரண்டு, பலமுறை அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டதையும், அந்தக் கூட்டங்களில் முன்னாள் பிரதமர், முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் உச்சமன்ற நீதிபதி, மத்திய அரசின் இன்றைய அமைச்சர்கள் கலந்து கொண்டதையும், ஒருமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றியதையும், அனைவரும் ஒன்றிணைந்து பிரதமரையும் மற்ற மத்திய அமைச்சர்களையும் சந்திப்பதையும் கண்ணுற்ற பிறகும் கூட, தமிழக அரசு ஜனநாயக ரீதியான கலந்துரையாடலை மேற்கொள்ளஅனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிடத் தொடர்ந்து தயக்கம் காட்டியதால்; இனியும் தாமதித்தால் தமிழகத்தின் ஒற்றுமையைப் பற்றித் தவறான எண்ணம் ஏற்படுவதைத் தவிர்த்திட அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதென முடிவெடுத்து, அ.தி.மு.க. உள்ளிட்ட தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்புகள் அனுப்பப் பட்டன. அப்படிக் கூட்டப்படும் கூட்டம் தி.மு.க. நடத்தும் கூட்டமல்ல; தமிழர்களின் உரிமைகளை நிலை நாட்டிட நடத்தப்படும் கூட்டம் என்பதை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக் காட்டிட, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கட்சிப் பாகுபாடின்றி, கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றிட வேண்டும் என்று பகிரங்கமாக, மெத்தப் பணிவோடு, நான் அழைப்பு விடுத்தேன்.

தமிழகத்தின் ஒற்றுமை

தமிழகத்தின் ஒற்றுமை

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, விவசாயிகளின் நலனுக்காகவும், உரிமைகள் பாதுகாப்புக்காகவும் தமிழக அரசு அல்ல, அ.தி.மு.க. அரசு அல்ல, வேறு எந்தக் கட்சி கூட்ட முன்வந்திருந்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, திராவிட முன்றேற்றக் கழகம் நிச்சயம் கலந்து கொண்டிருந்திருக்கும். வேறு யாரும் முன்வராத காரணத்தால், வரலாற்றுப் பிழை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டும் பொறுப்பை - அதன் மூலமாகக் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்திட வேண்டிய கட்டாயத்தை - கடமையாகக் கருதி நாங்களே மேற்கொண்டிருக்கிறோம். இன்று வராதவர்களும் நாளை நம்மோடு வருவார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவித்து; உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு முறை வருக, வருக என்று மனதார வாழ்த்தி வரவேற்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK wanted to avoid historical blunder in the Cauvery issue. Thats why we convened an all party meeting said DMK leader MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X