• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Exclusive: யாருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல... ஐ.யூ.எம்.எல். அபுபக்கர் எம்.எல்.ஏ. ஓபன் டாக்

|

சென்னை: பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே மூன்றாண்டுகளாக ஆட்சி நடத்தியதே எடப்பாடி பழனிசாமியின் பெரிய சாதனை தான் என்றும், இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் திமுக முதல் குரல் கொடுப்பதாகவும் கூறுகிறார் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் அபுபக்கர் எம்.எல்.ஏ.

இந்நிலையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு;

iuml general secretary abubacker mla exclusive interview about political affairs

கேள்வி: முத்தலாக், குடியுரிமை சட்டம் விவகாரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தனித்து போராட்டங்களை நடத்தியது போல் தெரியவில்லையே?

பதில்: குடியுரிமைச் சட்டத்தை பொறுத்தவரை அதை எதிர்த்து முதல் ஆளாக வழக்கு தொடர்ந்ததே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தான் என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில் தான் எங்களின் வழக்கறிஞர். இன்று 142 பேர் வழக்கு போட்டிருந்தாலும் கூட அதில் நம்பர் 1 நாங்கள் தான். உத்தரப்பிரதேசத்தில் சத்தமின்றி 40,000 பேரை அகதிகள் என்ற போர்வையில் வெளியேற்ற யோகி ஆதித்யாநாத் முயற்சி செய்கிறார். அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருக்கிறோம். இப்படி எந்தக் கட்சிக்கும் சளைக்காத வகையில் முத்தலாக் தடை, குடியுரிமைச் சட்ட விவகாரத்தை கடுமையாக எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம்.

கேள்வி: ஐ.யூ.எம்.எல். என்றாலே அது வயதானவர்களின் கட்சி என்ற கருத்து நிலவுகிறது... இளைஞர்களை உங்க கட்சி ஈர்க்காதது ஏன்?

பதில்: இன்று எத்தனையோ இஸ்லாமிய கட்சிகள் இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இப்போது இருக்கும் கட்சிகளை அந்தந்த கட்சித் தலைவர்களே தொடங்கியிருப்பார்கள். ஆனால், இது காயிதேமில்லத் சாஹிப் போன்ற அரும்பெரும் தலைவர்களால் தொடங்கப்பட்டு காலம் காலமாக இயங்கி வரும் ஒரு இயக்கம் ஐ.யூ.எம்.எல். மாற்று அரசியல் எனக் கூறி புதிதாக அரசியல் கட்சி தொடங்கியவர்கள் எதை சாதித்துவிட்டார்கள். எங்கள் கட்சிக்கு விளம்பரம் இல்லையே தவிர, மற்றபடி ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து கொண்டுதான் வருகிறோம். புதிதாக கட்சி தொடங்கி நடத்துபவர்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. எல்லோரும் ஒவ்வொரு படித்தளங்களில் ஜீனியஸாக இருப்பார்கள். சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

கேள்வி: இதன் மூலம் இஸ்லாமிய அமைப்புகளுக்கு நீங்கள் கூற வருவது என்ன?

பதில்: ஒரே விஷயத்தை பத்து அமைப்புகள் தனித்தனியாக செய்வது வீண் வேலை. பொருளாதார இழப்பு, நேரம் விரயம், உடல் உழைப்பு வீண், போன்றவைகள் தான் ஏற்படும். இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து செயல்பட்டால் அது வெற்றியை தேடித்தரும். இன்று வக்பு விவகாரத்தை ஒரு அமைப்பு கவனிக்கட்டும், கல்வி விவகாரத்தை ஒரு அமைப்பு கவனிக்கட்டும், சட்டப்போராட்டங்களை ஒரு அமைப்பு நடத்தட்டும், மருத்துவசேவைகளை ஒரு அமைப்பு செய்யட்டும், யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. இஸ்லாமிய அமைப்புகள் பிளவுப்பட்டு உள்ளதால், இன்று எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பிரதிநிதித்துவம் கூட முழுமையாக கிடைக்காத நிலை தான் உள்ளது. இதையெல்லாம் மனதில்வைத்து இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஓரணியில் திரண்டிருந்தால் பாஜக 2-வது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கவே முடியாது.

iuml general secretary abubacker mla exclusive interview about political affairs

கேள்வி: திமுகவின் தோழமைக்கட்சிகளில் ஐ.யூ.எம்.எல்.பிரதான இடத்தில் இருக்கிறது, கூட்டணி எப்படி போகுது?

பதில்: திமுகவுடனான கூட்டணி மிக நல்ல முறையில் இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்திலும் உணர்வுப்பூர்வமாக ஸ்டாலின் மதிப்பு அளிக்கிறார். மதச்சார்பற்ற ரீதியில் இது கொள்கை கூட்டணி. குடியுரிமைச் சட்ட விவகாரம் வெறுமனே இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல, ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் எதிரான ஒன்று என்பதால் தமிழகத்தில் திமுக தலைமையில் அதனை எதிர்த்து வருகிறோம். இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சனை என வரும்போது ஸ்டாலின் முதல் குரல் கொடுக்கிறார். இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் கோரிக்கைகளை திமுக செவிமடுக்கிறது, மதிப்பளிக்கிறது. இதனால் தான் அவர்களுடன் இருக்கிறோம், மற்றபடி அரசியல் ஆதாயத்துக்காக அணிமாறும் பழக்கமில்லை.

கேள்வி: பிப்ரவரி மாதத்துடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகி 3 ஆண்டுகளை நிறைவு செய்கிறார், ஒரு சட்டமன்ற உறுப்பினரா அவருடைய செயல்பாடு பற்றி சொல்லுங்க..

பதில்: அதிமுக ஆட்சியில் ஊழல் இருக்கிறது அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் பார்த்தால் இந்த மூன்றாண்டுகளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியை தக்கவைத்தார் என்பதே பெரிய விஷயம் தான். சாதாரணமாக எந்த பின்புலமும் இல்லாமல் இந்தப் பதவிக்கு வந்து நெருக்கடிகளை சமாளித்து இயங்கியதே சாதனைதான். அறிவிப்புகளை வெளியிடுகிறாரே தவிர அதை அவரால் முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. காரணம், பாவம் இவர் டெல்லியில் இருந்து வரும் உத்தரவுகளை தட்டமுடியாமல் செயல்படுத்துகிறார். பல விவகாரங்களில் அவருக்கே உடன்பாடில்லை என்றாலும் கூட வேறுவழியில்லையே. வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் அரசை சுதந்திரமாக முழுமையாக அவரால் நிர்வகிக்க முடியவில்லை.

கேள்வி: அவையில் இருந்து அடிக்கடி வெளிநடப்பு செய்வது ஏன்?

பதில்: புறக்கணிப்பு வேறு, வெளிநடப்பு வேறு. சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்கிறது என்றால் ஒட்டுமொத்தமாக செல்லாதது. வெளிநடப்பு என்பது அவைக்குள் நான் ஒரு தீர்மானம் கோருகிறேன் என்றால், அதற்கு எந்த ரியாக்‌ஷனும் இல்லை என்கிறது போது வெளிநடப்பு செய்து எனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுமா இல்லையா. அண்மையில் கூட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக, ஐ .யூ. எம்.எல் கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றக் கோரினோம். ஆனால் அதை விவாதத்திற்கே எடுத்துக்கொள்ளவில்லை என்கிற போது நான் வெளிநடப்பு செய்துதானே எனது எதிர்ப்பை அரசுக்கு காட்ட முடியும்.

கேள்வி: எம்.எல்.ஏ.வாகிய பிறகு உங்கள் கடையநல்லூர் தொகுதிக்கு என்ன செய்திருக்கிறீர்கள்?

பதில்: தென்காசியை மாவட்டமாக்க வேண்டும் என கடுமையாக அரசை வலியுறுத்தி வந்தேன். அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டம் ஆகியுள்ளது. கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 3 சிறுநீரக டயாலிஸிஸ் இயந்திரங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். எனது தொகுதிக்குட்பட்ட திருமலை கோவில், கேரள எல்லையில் மலைக்கு மேல் அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் மிக பிரசித்தி பெற்ற அந்தக் கோவிலுக்கு ரூ.62 லட்சம் அரசிடம் கேட்டுப்பெற்று நிதி ஒதுக்கி விளக்குகள் போட்டு கொடுத்திருக்கிறேன். மாலை 5 மணிக்கு மேல் அந்தக் கோவிலுக்கு செல்ல முடியாத நிலையை மாற்றி, இப்போது இரவு நேரங்களில் கூட அந்த கோவிலுக்கு செல்லும் வகையில் விளக்குகளால் ஜொலிக்க வைத்திருக்கிறேன். எனது தொகுதியில் நானே நேரடியாக களத்தில் இறங்கி போராட்டம் நடத்தி 4 டாஸ்மாக் கடைகளை மூடியிருக்கிறேன். எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து சமுதாய மக்களும் எனக்கு ஒத்துழைப்பு நல்குகிறார்கள். கடையநல்லூர் தொகுதியில் 85% கிராமங்களில் எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஏதோ ஒருவகையில் பணிகளை செய்து கொடுத்திருக்கிறேன்.

கேள்வி: நீங்கள் தேசியக் கட்சியின் நிர்வாகி என்பதால் கேட்கிறேன், பாஜக, காங்கிரஸ் கட்சிகளை தவிர்த்து 3-வது அணிக்கு சாத்தியம் உள்ளதா?

பதில்: 3-வது அணி உருவாகினால் அது பாரதிய ஜனதா கட்சிக்கு தான் சாதகமாகும். மதச்சார்பற்ற வாக்குகள் பிரியும் போது அது பாஜகவுக்கு தான் பயனைத்தரும். சிறு சிறு குறைகள் இருந்தாலும் அதை களைந்துவிட்டு, காங்கிரஸ் கட்சி அடங்கிய அணியில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்தால் தான் தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க முடியும். அதேபோல் தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்தால் தமிழகம் மீண்டும் எழுச்சிப்பெறும்.

பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க 7 அல்லது 10 நாட்கள் போதும்.. அதற்கு மேல் வேண்டாம்.. மோடி ஆவேசம்

 
 
 
English summary
iuml general secretary abubacker mla exclusive interview about political affairs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X