For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவந்தால் முஸ்லிம் லீக் கடுமையாக எதிர்த்து போராடும்: கே.எம்.காதர் மொகிதீன்

By Mathi
Google Oneindia Tamil News

திருவள்ளூர்: பொதுசிவில் சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்தால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடுமையாக எதிர்த்து போராடும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலரும் தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.

திருவள்ளூரில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாக வசதிக்காக 52 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர் சேர்த்தல் புதுப்பித்தல் பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு பிரைமரிகள் அமைக்கப்பட்டு மாவட்ட தேர்தல்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

IUML will oppose Uniform Civil Code: K. M. Khader Mohideen

இதுவரையிலும் 30 மாவட்டங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதர மாவட்டங்களின் தேர்தல்கள் விரைவில் முடிக்கப்பட்டு செப்டம்பர் மாத கடைசிக்குள் மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும்.

மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு பல சட்டங்களை நிறைவேற்றி வரும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இது ஜனநாயகத்தை கேலிக்குறியதாக்கும் செயலாகும்.

பா.ஜ.க அரசின் இந்த செயலால் மதசார்பற்ற ஜனநாயகம் கேள்விக் குறியாக்கப்பட்டு வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொது சிவில் சட்டத்தை கொண்டுவரும் சதித்திட்டத்தில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளதாக டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பொதுசிவில் சட்டம் கொண்டுவர முயற்சித்தால் இந்நாட்டில் உள்ள 25 கோடி முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இந்து மகா சமுத்திரம் ஆர்ப்பரித்து பொங்கியது போல் பெரும் போராட்டத்தை நடத்துவோம்.

தமிழ்நாட்டில் இன்று அனைத்து தரப்பு மக்களாலும் மதுவிலக்கு கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைப் பொறுத்தவரையில் கடந்த நீண்ட நெடுங்காலமாக மதுவிலக்கை நாங்கள் வலியுறுத்தி வந்துள்ளோம்.

எங்களின் மாநாடுகள், செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்ற தவறுவதில்லை. மதுவிலக்கை வலியுறுத்தி கடந்த 2013 ஏப்ரல் 2-ந்தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் ஒரே நேரத்தில் மாபெரும் பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் மனு கொடுத்தோம்.

காந்தியவாதி சசிபெருமாள் மதுவிலக்கை வலியுறுத்தி நடத்திய பல்வேறு போராட்டங்களில் நாங்கள் பங்கெடுத்துள்ளோம் . மதுக்கடையை மூடக்கோரி போராடிய அவர் உயிர்நீத்தது மிகப்பெரிய இழப்பாகும். தமிழக அரசு அவரது தியாகத்தை கொச்சைப்படுத்தாமல் தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கருணாநிதி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மதுவிலக்குக்காக பலதரப்பட்டவர்களும் கோரிக்கை எழுப்பிய போது அது கிணற்றுக்குள் விழுந்த பாராங்கல்லை போல் கிடந்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை கொண்டு வருவோம் என கருணாநிதி அறிவித்ததும் கிணற்றுக்குள் இருந்து பூதம் கிளம்பியது போல் மதுவிலக்கு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து இன்று அது ஒரு புரட்சியாகவே வெடித்துள்ளது.

இதிலிருந்து கருணாநிதியின் கருத்துகளுக்கு மக்கள் எந்த அளவிற்கு மதிப்பளிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தின கொடியேற்ற விழாவின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதா, மதுவிலக்கு தொடர்பாக பல புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது உண்மையாக இருக்குமானால் நாங்கள் அதை வரவேற்போம்.

மதுவிலக்கை வலியுறுத்தி தி.மு.க நடத்தும் அறப்போராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டுள்ள மாணவ - மாணவியர் மீதான வழக்குகளை திரும்ப பெற்று அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.

தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் வரும் செப்டம்பர் 25-ந் தேதி முதல் 8-ந்தேதி வரை தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களிடமும் பிரச் சனைகள் குறித்து கருத்து கேட்டறிந்து அதனை தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்வதாக அறிவித்துள்ளார். தமிழக மக்களிடையே மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்த இருக்கும் இந்த நமக்கு நாமே பயணத்திற்காக மு.க. ஸ்டாலின் வருகை தரும் போது அனைத்து மாவட்டங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பச்சிளம் பிறைக் கொடியுடன் நாங்கள் வரவேற்ப்பளித்து ஆதரவு அளிப்போம்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்தார்.

இந்த பேட்டியின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிற்சங்க அமைப்பான சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில பொதுச்செயலாளர் கே.எம். நிஜாமுதீன், முஸ்லிம் லீக் மாநில துணைச்செயலாளர்கள் ஆப்பனூர் ஜபருல்லா, எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கீ, திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் காயல் அஹமது சாலிஹ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

English summary
IUML National General Secretary and Tamilnadu President Prof K. M. Khader Mohideen said that his party should oppose the Uniform Civil Code.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X