For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் இனிய தமிழ் மக்களே.. உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜாவுக்கு.. இன்று பிறந்த நாள்!

இயக்குனர் இமயம் பாரதிராஜா பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: இயக்குனர் இமயத்தின் பிறந்த நாள் இன்று.

70-ம் ஆண்டுகளில் தமிழ்த்திரையுலகம் தொய்வில் விழுந்தது. அப்போது ஆழ்ந்த நித்திரையை நோக்கி படவுலகம் பயணித்து கொண்டிருந்தது. ஒரு இறுக்கமான மௌனம் சூல் கொண்டிருந்தது.

பலநாள் பசித்து கிடந்தவனுக்கு பால்சாதம் கிடைத்ததுபோல, கரடு முரடாய் காய்ந்து கிடந்த பூமியில் துளிர்த்து விழுந்த நீர்த்துளிகள் போல் கிராமத்தையும், அதன் எழில் கொஞ்சும் வனப்பையும், அதில் வாழும் மனிதர்களின் ஆன்ம ஓலத்தையும் காட்டும் காலக்கண்ணாடியாக ஜொலிக்க வந்தார் பாரதிராஜா.

கலாரசனையும், வாழ்க்கையின் மீது நம்பிக்கையும், இயற்கையின் மீது ஆழந்த காதலும் கொண்டவர் பாரதிராஜா. கதாநாயகன் என்றால் கட்டுடல் கொண்டவனாகவும், பட்டத்து இளவரசனைப்போல் பளபளப்பாகவும் வீரதீர சாகசம் நிறைந்தவனாகவும்தான் இருப்பான் என்கிற மாயைகளை உடைத்தெறிந்தவர் பாரதிராஜா. சப்பாணிகளையும், சவரத் தொழிலாளியையும், மீன் பிடிக்கும் குப்பத்து ஏழையையும் கதாநாயகனாக கோபுரத்தின் மேல் உட்கார வைத்தவர் பாரதிராஜா.

 மண்வாசனை நுகர்ந்த 16 வயதினிலே

மண்வாசனை நுகர்ந்த 16 வயதினிலே

தமிழ் சினிமாவின் 75 ஆண்டுகால வரலாற்றில் பிரதான இடத்தை பிடித்துள்ள படம் 1977-ம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே. ஸ்டுடியோக்களிலிருந்து சினிமாவை கிராமங்களின் தெருக்களில் நடமாட வைத்த முதல் படம். மண்வாசனையை ரசிகர்கள் நுகர்ந்த முதல் படம்... திரைப்படம் என்றாலே இப்படியெல்லாம்தான் இருக்கும் என்னும் மாயையை சுக்குநூறாக உடைத்தெறிந்த படம். இயக்குனராக வரவேண்டும் என்ற கனவுடன் 'மயிலு' என்ற பெயரில் கதை எழுதி... திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் பாரதிராஜா. கதாபாத்திரத்திற்கேற்றார்போல், வயதிற்கேற்றார்போல் கனக்கச்சிதமாக பொருந்தினார் ஸ்ரீதேவி... பின்பு 16 வயதினிலே என்ற பெயரில் ஸ்ரீதேவியை மயிலுவாகவே அதில் நடமாடவிட்டார். மயிலின் மிளிர்ந்த நடிப்பும், சப்பாணியின் அரை நிர்வாண உடையும், பரட்டையின் புது ஸ்டைலும், குருவம்மாளின் யதார்த்தமும்... 'மைல்'... 'மைல்' என்றழைத்த டாக்டரின் தமிழ் உச்சரிப்பும், இளையராஜாவின் கிராமிய இசை ஆளுமையும்... நிவாஸின் ஒளிப்பதிவும், கிராமிய வாழ்வியலை அப்பட்டமாக நம் கண்முன்விரிய செய்தது.

 இமயமாக உயர்ந்தார்

இமயமாக உயர்ந்தார்

ராதிகா-சுதாகர் நடித்த "கிழக்கே போகும் ரயில்", ராதிகா-விஜயன்-சுதாகர் நடித்த "நிறம் மாறாத பூக்கள்", பாரதிராஜா-அருணா நடித்த "கல்லுக்குள் ஈரம்', கார்த்திக்-ராதா நடித்த "அலைகள் ஓய்வதில்லை", சத்யராஜ்-ரேகா நடித்த "கடலோரக் கவிதைகள்" போன்ற படங்கள் தமிழகமெங்கும் சக்கை போடு போட்டன. இவை அனைத்தும் முழுக்க முழுக்க காதலை மட்டும் அடிப்படையாக கொண்ட படங்கள் என்றாலும், அவற்றில் வெவ்வேறு கதாபாத்திரங்களையும், வெவ்வேறு வாழ்க்கை அம்சங்களையும் புகுத்தியிருப்பார் பாரதிராஜா. கிராமத்து படம்தான் எடுப்பார் பாரதிராஜா, என்ற எண்ணத்தை தவிடுபொடியாக்கியது "சிகப்பு ரோஜாக்கள்" க்ரைம் படம். இது பின்னாளில் வந்த பல க்ரைம் படங்களுக்கெல்லாம் முன்னோடியாக இன்றுவரை உயர்ந்து நிற்கிறது. பாரதிராஜாவின் பல வித்யாசமான முயற்சிகளில் ஒன்றாகவும், இளையராஜா தன் முழுபலத்தை இசையில் காட்டிய படங்களில் ஒன்றாகவும் அமைந்த படம் காதல் ஓவியம். தொடர்ந்து ஒரு கைதியின் டைரி, டிக்டிக்டிக், மண்வாசனை, புதுமைப்பெண், நாடோடி தென்றல், புதுநெல்லுபுதுநாத்து, என் உயிர்தோழன் என படங்கள் அவரை இயக்குனர் இமயமாக உயர்த்தியது.

 முதல் மரியாதை

முதல் மரியாதை

மேலோட்டமாக பார்த்தால் முகத்தை சுளிக்கக்கூடிய நெருடலான கதைதான் இது. கம்பிமேல் நடப்பது மாதிரியான கதை. கொஞ்சம் பிசகினாலும், விரசமாகவும், ஆபாசமாகவும் மாறிவிடும் ஆபத்தை உள்ளடக்கியது. ஆனால் அதை நாசூக்காகவும், நயமாகவும், அதே சமயத்தில் நாகரீகமாகவும், நெஞ்சில் ஆணியடித்ததுபோல் சொல்லியிருப்பார் பாரதிராஜா. சொன்னதுடன், அதில் அவர் மிகப்பெரிய வெற்றியும் பெற்றார். சிவாஜி கணேசன் எந்த வயதில் இருந்தாரோ, என்ன தோற்றத்தில் இருந்தாரோ, அதையே ஒரு கதாபாத்திரமாக மாற்றியமைத்து புதுமையை செய்தார் பாரதிராஜா. 50 வயது நிலச்சுவான்தாருக்கு ஒரு தாழ்த்தப்பட்ட மீனவப் பெண் மீது ஏற்படுவது, பாசமா? ஈர்ப்பா? ஈடுபாடா? அல்லது எல்லாவற்றையும் தாண்டி நிற்கிற காதலா? என்கிற கேள்விகளை எழுப்பியது இந்த படம். 50 வயது கதாநாயகன் உடலால் களங்கப்படாமல், தன்னை விரும்பும் இளம் பெண்ணையும் கரைப்படுத்தாமல், அவளை இதயத்தில் வைத்து நேசித்த வயோதிக காதல் சற்று வித்தியாசமானதுதான். இதுவரையிலும் எந்த தமிழ்ப்படத்திலும் இடம்பெறாத காதல் இது.

 வர்ணாசிரம அநியாயம்

வர்ணாசிரம அநியாயம்

சமூக பிரச்சினையை வெளிக்காட்டிய படங்களையும் கையிலெடுத்தார் பாரதிராஜா. வர்ணாசிரம அநியாயத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய முயன்ற படம் "வேதம்புதிது". அதுமட்டுமல்லாமல் பிராமண சிறுவனை மறவன் வீட்டில் வளரச் செய்து சாதி பாகுபாட்டினை உலுக்கிய படமும் இதுவாகும். அண்ணன்-தங்கை பாசப்பிணைப்புகளையும், நிலபிரபுத்துவ வாழ்க்கை முறைகளையும், பெண்ணியல்புகளின் அம்சங்களை தாங்கி வந்த திரைப்படம் "கிழக்கு சீமையிலே". பசும்பொன் படத்தில், பெண்களின் மறுமணத்தை வலுவாக வற்புறுத்தியிருந்தார் பாரதிராஜா. கருத்து ரீதியாக தரமாகவும், முற்போக்காகவும், மனிதநேயத்தோடும் சித்தரித்த படமும் பசும்பொன்தான். பெண் சிசுக்கொலையை சாடிய கருத்தம்மாவும், சுதந்திர தியாகி ஒருவர் தற்போதைய காலகட்டத்தில் படும் இன்னலை மிக அழகாக வெளிப்படுத்திய "அந்திமந்தாரை"யும் பாரதிராஜாவை அசைக்க முடியாத இடத்தில் தூக்கி நிறுத்தியது.

 பிறவிக்கலைஞர்-பாரதிராஜா

பிறவிக்கலைஞர்-பாரதிராஜா

கே.பாக்யராஜ், மணிவண்ணன், கே.ரங்கராஜ், மனோபாலா, சீமான், பொன்வண்ணன் போன்ற வெற்றிப்பட இயக்குனர்களை உருவாக்கிய பெருமை பாரதிராஜாவுக்குதான் சேரும். அத்துடன் வைரமுத்து போன்ற பாடலாசிரியர்களையும், ராதிகா, ராதா, ரேவதி, ரஞ்சிதா, ரஞ்சனி, ரதி, சுகன்யா, விஜயசாந்தி போன்ற ஏராளமான நாயகிகளையும், கார்த்திக், கவுண்டமணி, நிழல்கள் ரவி, நெப்போலியன், ராஜா, பாண்டியன் உள்ளிட்ட நாயகர்களை அறிமுகப்படுத்தியதும் பாரதிராஜாதான். பத்மஸ்ரீ, 6 முறை தேசிய விருதுகள், 3 முறை மாநில அரசு விருதுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ‘நந்தி' விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். தன் தாய் கருத்தம்மாவின் பெயரில் வெளிவந்த படத்துக்கான தேசிய விருதை தன் தாயையே பெற்றுக்கொள்ளவும் வைத்தார். அந்தத் தாய் பெருமிதப்பட்டு மேடையிலேயே உணர்ச்சி வசப்பட்டது நெகிழ்ச்சியாக அமைந்தது.

 தனிச்சிறப்பியல்புகள்

தனிச்சிறப்பியல்புகள்

அதேபோல, 1986 -ல் தாஷ்கண்ட் படவிழாவில் `முதல் மரியாதை' திரைப்படத்தை திரையிட்டார்கள். ஆனால் படத்தை பார்த்த மக்களுக்கு சப்டைட்டில் போட்டும் ஒன்றுமே கதை, வசனம் விளங்கவில்லை. அப்போது அந்த விழாவுக்கு சென்றிருந்த இந்தி நடிகர் ராஜ்கபூர், ரஷ்ய மொழியிலேயே முழுக்க முழுக்க ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்தார். பின்னர் அதை மக்கள் வெகுவாக ரசிக்க, ரசிக்க, பாரதிராஜா கண்களிலோ ஈரமழை பொழிந்துகொண்டே இருந்தது. தமிழ் சினிமாவின் ‘திருப்புமுனை' இயக்குநர் என போற்றப்படும் பாரதிராஜா நன்றாக ஓவியம் வரையக்கூடியவர். சுடச்சுட நாட்டுக்கோழி குழம்பு என்றால் கொள்ளை பிரியம் இவருக்கு. வெள்ளுடை தேவதைகள் வானத்திலிருந்து மிதந்து வருவதுபோல் கனவுலக கற்பனைகள் இவரது ஆரம்ப கால படங்களில் ட்ரேட் மார்க் ஆயிற்று.

 என் இனிய தமிழ் மக்களே

என் இனிய தமிழ் மக்களே

பாரதிராஜா ஒரு பிறவிக்கலைஞர். இன்றும் அவரை வழிகாட்டிகளில் ஒருவராகவே வெள்ளித்திரை வரித்து கொண்டுள்ளது. காதல் என்பதை சமூக பிரச்சினைக்குள் கொண்டு செல்லும் வாகனமாக பயன்படுத்தியதுடன், அதில் வெற்றியும் பெற்றவர். சிறிது காலம் தனது படைப்பாற்றலை வீணாக்காமல் சின்னத்திரைக்கும் பயன்படுத்தினார். இதயத்திற்குள் நீண்டகாலம் அசைபோடும் அளவிற்கு பல அற்புதமாக படங்களை வழங்கிய பாரதிராஜாவுக்கு திரையுலகில் என்றுமே ஒரு அழியாத இடம் உண்டு. அந்த இடத்திலிருந்து, "என் இனிய தமிழ் மக்களே. உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன் என்ற சிம்மக்குரல் கலையுலகம் வாழும்வரை ஒலித்து கொண்டே இருக்கும்.

English summary
Bharathiraja is a Famous Tamil film director. He often catches sensational folk Films. Fans are celebrating his birthday today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X