For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரமடையும் ஆசிரியர்கள் போராட்டம்: பாதிப்பில்லை என்கிறது பள்ளிக்கல்வித்துறை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை: எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் சக்தி என்ன என்பதை சட்டசபை தேர்தலில் வெளிப்படுத்துவோம் என்று ஜாக்டோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியர்களின் போராட்டத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் பள்ளிகள் வழக்கம் போல செயல்படுவதாகவும் மாநில பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கட்கிழமையான இன்றும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆறாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக்குழுவில் உள்ள முரண்பாட்டை கலைந்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நீக்கம் செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர், ஆசிரியர் எண்ணிக்கையில் தொடக்கப் பள்ளிகளை மூடும் அரசின் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 3 நாள் தொடர் மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.

2011-ல் சட்டசபைத் தேர்தலில், ‘6வது ஊதியக்குழுவில் உள்ள வேறுபாடுகள் நீக்கப்படும்' என்றும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், மருத்துவப்படி, பயணப்படி, கல்விப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் ஜெயலலிதா உறுதியளித்தார். எங்களது கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடமும், இயக்குநரிடமும் மனு கொடுத்தும் பதில் இல்லை என்பது ஜாக்டோ அமைப்பினரின் குமுறலாகும்.

ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு

ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு

தமிழகத்தில் ஆசிரியர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்தைத் தாண்டுகிறது. இவர்கள் பல்வேறு சங்கங்களாகப் பிரிந்து இருந்தாலும், 21 ஆசிரியர் சங்கங்கள் சேர்ந்து ‘ஜாக்டோ' என்ற பொது அமைப்பின் கீழ் போராடிவருகிறார்கள். அடையாள வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் என போராடிய இந்த அமைப்பினர் கடந்த சனிக்கிழமை முதல் 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோரிக்கைகள் என்ன?

கோரிக்கைகள் என்ன?

ஆறாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக்குழுவில் உள்ள முரண்பாட்டை கலைந்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்கும் அனைத்து படிகளையும் வழங்க வேண்டும். கடந்த சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நீக்கம் செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைமுறைப்படுத்தி வரும் நலத்திட்டங்களை செயல்படுத்திட தனியாக நலத்திட்ட அலுவலரை நியமிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் தாய் மொழியான தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.

சென்னையில் சாலை மறியல்

சென்னையில் சாலை மறியல்

சென்னையில் ஜாக்டோ அமைப்பை சேர்ந்த உயர் மட்ட குழு உறுப்பினர் சங்கர பெருமாள், சென்னை மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், லிங்கேசன் ஆகியோர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு திரண்டனர். அவர்கள் கோட்டையை நோக்கி புறப்பட முயன்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து மறித்து அவர்களை கைது செய்தனர். அங்குள்ள மைதானத்திற்கு ஆசிரியர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

மதுரையில் போராட்டம்

மதுரையில் போராட்டம்

இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன் மறியல் போராட்டம் நடைபெற்றது. அமைப்பாளர்கள் சந்திரன், நடராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 250 ஆசிரியைகள் உள்பட 520 ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர். மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் போராட்டம் தொடரும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூரில் கைது

திருவள்ளூரில் கைது

திருவள்ளூரில் இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 502 ஆசிரியர்களை டிஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

நாமக்கல் ஆசிரியர்கள்

நாமக்கல் ஆசிரியர்கள்

இதேகோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கலில் பூங்கா சாலையில் ஆசிரியர்கள் 2வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 300 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரியில் போராட்டம்

கிருஷ்ணகிரியில் போராட்டம்

கிருஷ்ணகிரி பி.டி.ஓ., அலுவலகம் எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் மாயவன், பொதுச்செயலாளர் கோவிந்தன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் தலைவர் தியோடர் ராபின்சன் ஆகியோர் தலைமை வகித்தனர். தொடர்ந்து, கிருஷ்ணகிரி - பெங்களூர் சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 500 ஆசிரியைகள் உட்பட, 900 ஆசிரியர்களை போலீசார் கைது செய்து, திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். மாலை, 6 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

கடலூரில் கைது

கடலூரில் கைது

கடலுார் மாவட்ட ஜாக்டோ அமைப்பினர் அறிவித்தபடி மறியல் போராட்டத்திற்காக காலை 10 மணி முதல் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டனர். டி.எஸ்.பி., நரசிம்மன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஜாக்டோ மாவட்ட அமைப்பாளர்கள் எல்லப்பன், ராமச்சந்தினர் ஆகியோர் தலைமையில் 154 பெண் ஆசிரியர்கள் உட்பட 347 பேர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தேர்தலில் எதிரொலிக்கும்

தேர்தலில் எதிரொலிக்கும்

கடந்த, 2011 சட்டமன்ற தேர்தலின் போது, அ.தி.மு.க., அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப, தமிழக அரசு தன் பங்களிப்பு ஒய்வூதியம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஆசிரியர்கள் தொடர்ந்து ஈடுபடுவோம்.

சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்

சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்

தி.மு.க ஆட்சியின்போது பேச்சுவார்த்தையாவது நடத்தினார்கள். ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் அதுவுமில்லை. எங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்கள் தொடரும் என்று கூறியுள்ள ஜாக்டோ அமைப்பினர் சட்டசபைத் தேர்தலில் ஆசிரியர்களின் சக்தி என்ன என்பதை அ.தி.மு.க-வுக்குக் காட்டுவோம். எதிர்வரும் தேர்தலில் எங்களது 12 லட்சம் ஓட்டுகள் அ.தி.மு.க-வுக்கு இல்லை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு பாதிப்பில்லை

பள்ளிகளுக்கு பாதிப்பில்லை

சென்னையில் தொடங்கி குமரி வரை 3வது நாளாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சனி, ஞாயிறு பள்ளிகள் விடுமுறை தினம் என்பதால் மாணவர்களுக்கு பெருமளவு பாதிப்பில்லை. ஆனால் திங்கள்கிழமையும் போராட்டம் நீடிப்பதால் அரசுப் பள்ளிகள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், ஜாக்டோ அமைப்பினர் போராட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் மாநில பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கூறியுள்ளார்.

English summary
Police took into custody teachers affiliated to Joint Action Committee of Teachers Organisations (JACTO), when they attempted to stage a road block agitation all over TamilNadu for the second consecutive day on Sunday, to press their 15-point charter of demands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X