For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் முழுவதும் 414 புதிய பஸ்கள்...தொடங்கி வைத்தார் ஜெயலலிதா

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் 414 புதிய பஸ்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

முதல்வர் ஜெயலலிதா நேற்று (30.12.2013) கோடநாடு முகாம் அலுவலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 333 புதிய பேருந்துகள், 81 புனரமைக்கப்பட்ட பேருந்துகள், என மொத்தம் 414 பேருந்துகளைத் துவக்கி வைத்தார்.

Jaya flags off 414 news buses from Kodanadu

மேலும், 5151 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை, பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளமாக 154 கோடியே 26 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் 2 கோடியே 37 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் செரிவான போக்குவரத்து சேவையை பொது மக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. சிற்றூர் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் தங்குதடையின்றி போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 10 லட்சம் பயணிகள் பயணிக்கின்ற அளவில் 20,634 தடப் பேருந்துகளை இயக்கி வருகின்றன.

சென்னை மாநகர மக்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்ட சிற்றுந்து சேவைகள் பொது மக்களின் பெரும் வரவேற்பினையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

பொது மக்களின் தேவைகளுக்கேற்ப முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது புதிய பேருந்துகள் மற்றும் புதிய வழித்தடங்களை அறிமுகம் செய்து வருகிறார். அந்த வகையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 333 புதிய பேருந்துகள், 81 புனரமைக்கப்பட்ட பேருந்துகள், என மொத்தம் 414 பேருந்துகளை துவக்கி வைப்பதன் அடையாளமாக நேற்று கோடநாடு முகாம் அலுவலகத்தில், முதல்வர் ஜெயலலிதா 7 ஓட்டுநர்களுக்கு பேருந்துகளுக்கான சாவிகளை வழங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

முதல்வர் ஜெயலலிதா எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலைமை மேம்பட்டு வருவதால் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை, பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளம் ஆகியவை தற்போது விரைவாக வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 247 பணியாளர்களுக்கு 5 கோடியே 52 லட்சம் ரூபாய் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை.2011 மற்றும் 2012_ஆம் ஆண்டுகளில் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 4,321 பணியாளர்களுக்கு 140 கோடியே 68 லட்சம் ரூபாய் பணிக்கொடை.மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மே 2012 முதல் ஜூன் 2013 வரை ஓய்வு பெற்ற 583 ஓய்வூதியதாரர்களுக்கு 8 கோடியே 6 லட்சம் ரூபாய் விடுப்பு சம்பளம்; என மொத்தம் 5151 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை, பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளமாக 154 கோடியே 26 லட்சம் ரூபாய் வழங்கும் அடையாளமாக 4 ஓய்வூதியதாரர்களுக்கு காசோலைகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் அமைந்துள்ள சாலை போக்குவரத்து நிறுவனத்தின், சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் கணிணி அறிவியல் பிரிவிற்கு 15,392 சதுர அடி பரப்பளவில் 1 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் மற்றும் முதுகலை மாணவர்களுக்கென 12,917 சதுர அடி பரப்பளவில் ஒரு கோடியே 21 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய தங்கும் விடுதி கட்டடம் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Chief Minister Jayalalitha flagged off 414 news buses from Kodanadu camp office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X