For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேடு மதி கொண்டவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும்.. ஜெ. அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: கேடு மதி கொண்ட அரசியல் எதிரிகள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும் அவை அத்தனையையும் எதிர்கொண்டு வெற்றி பெறுகின்ற ஆற்றல் அதிமுகவுக்கு முழுமையாக உள்ளது என்பதையே ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவும், கழக வேட்பாளரின் வாக்கு வித்தியாசமும் உலகுக்கு உணர்த்துகின்றன என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பதவியிழந்த காரணத்தால் அவர் எம்.எல்.ஏவாக இருந்து வந்த ஸ்ரீரங்கத்திற்கு இடைத் தேர்தல் நடந்தது. அதில் அதிமுக பெரும் வெற்றியைப் பெற்றது.

Jaya hails Srirangam by election result

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு 13-2-2015 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி 1,51,561 வாக்குகள் பெற்று, 96,516 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தி எனக்கும், கழக தொண்டர்களுக்கும், கழகத்தின் மீது பேரன்பு கொண்ட அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஸ்ரீரங்கம் தொகுதியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளைப் பட்டியலிட்டு, அப்பணிகளுக்கான அங்கீகாரமாக விளங்கும் வகையில் கழக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுமாறு ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு கடிதம் வாயிலாக அன்பு வேண்டுகோள் வைத்திருந்தேன்.

என் மீது எப்பொழுதும் மாறாத அன்பு கொண்டு, தங்கள் அன்புச் சகோதரியாம் என்னுடைய வேண்டுகோளை ஏற்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நமக்களித்த வெற்றிச் சின்னமாம் ‘இரட்டை இலை' சின்னத்திற்கு பெருவாரியாக வாக்களித்திருக்கும் எனதருமை ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு முதற்கண் என் நெஞ்சார்ந்த நன்றியை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

அ.தி.மு.க. தமிழக மக்களின் அரசியல் இயக்கம். தங்களுடைய வளர்ச்சிக்கும், உயர்வுக்கும், பாதுகாப்புக்கும் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்ட இயக்கமாகிய அ.தி.மு.க. சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் எந்தவித பாகுபாடுமின்றி பாடுபடும் இயக்கம்.

கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் எந்த சமத்துவ, சமதர்ம கொள்கைகளை இதயத்தில் கொண்டு இந்த இயக்கத்தைத் தொடங்கினாரோ, அவற்றில் சிறிதளவும் மாற்றம் இல்லாமல் மக்களுக்காகப் பாடுபடும் ஒரே அரசியல் கட்சி தமிழ் நாட்டில் அ.தி.மு.க. மட்டும் தான். எனவே தான் தமிழக மக்களின் ஆதரவு இந்த இயக்கத்திற்கு வளர்ந்து கொண்டே இருக்கிறது.

கேடு மதி கொண்ட அரசியல் எதிரிகள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும் அவை அத்தனையையும் எதிர்கொண்டு வெற்றி பெறுகின்ற ஆற்றல் அ.தி.மு.க.வுக்கு முழுமையாக உள்ளது என்பதையே ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவும், கழக வேட்பாளரின் வாக்கு வித்தியாசமும் உலகுக்கு உணர்த்துகின்றன.

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அரும்பணியாற்றி, அ.தி.மு.க. வெற்றிநடை போடுவதற்கு, அல்லும் பகலும் அயராது உழைத்திட்ட தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும், அமைச்சர்களுக்கும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகளுக்கும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டினையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த இடைத்தேர்தலில் பணியாற்றிய தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட நடுநிலையாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும், தமிழகம் முழுவதிலும் கழக அரசின் பணிகள் மக்கள் நலன் காக்க எந்நாளும் தொடரும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, வெற்றிக்காக அயராது உழைத்திட்ட அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

English summary
ADMK general secretary Jayalalitha has hailed the result of Srirangam by election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X