For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெசவாளர்கள் நலன்காக்க தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும்- ஜெயலலிதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காக தமிழக அரசு எண்ணற்ற சிறப்பான மற்றும் புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற தேசிய கைத்தறி தினவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதாவின் உரையை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

முதலாவது தேசிய கைத்தறி தினவிழா, சென்னையில் நடைபெறுவது மிகவும் பொருத்தமானதாகும். ஏனெனில் தமிழகம் ஜவுளித் தொழிலில், குறிப்பாக கைத்தறித் தொழிலில் பெருமைக்குரிய மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் 3.19 இலட்சம் நபர்கள் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஜவுளித் தொழிலான ஆலை மற்றும் விசைத்தறித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Jaya's speech read out in Modi function

தமிழக கைத்தறி துணி வகைகள் உலக பிரசித்தி பெற்றவையாகும். காஞ்சிபுரம் மற்றும் ஆரணி பட்டு சேலைகள் உலகெங்கிலும் வீட்டுக்கு வீடு பேசப்படும் பெயர் பெற்றவையாகும். பருத்தியினாலான "மெட்ராஸ் செக்'' என்ற வடிவமைப்பு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
1905 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7 ஆம் நாளன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக, தேசிய கைத்தறித் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு, சுதேசி இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.

கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காக தமிழக அரசு எண்ணற்ற சிறப்பான மற்றும் புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 1.64 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 54 இலட்சம் மாணவ-மாணவியருக்கு ஆண்டு தோறும் 4 இணை விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு ஆண்டு முழுவதும் கிடைக்கப்பெறுகிறது. இதற்கான நெசவுக்கூலியும் 20-12-2013 முதல் உயர்த்தி வழங்கப்படுகிறது.

சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் என்ற ஒரு முன்னோடித் திட்டம் என்னால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 10,000 நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், 260 கோடி ரூபாய் செலவில், 360 சதுர அடி பரப்பளவில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தறிக்கூடத்துடன் கூடிய சூரியசக்தியிலான பசுமை வீடுகள் கட்டப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு 1.34 இலட்சம் நெசவாளர் குடும்பங்களுக்கு கட்டணம் ஏதுமின்றி மின்சாரம் வழங்குகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியத் தொகை மற்றும் குடும்ப ஓய்வூதியத் தொகை 1,000 ரூபாயாக என்னால் உயர்த்தப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கான சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாநில அரசின் பங்குத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

பாரம்பரிய தொழிலான கைத்தறி நெசவுத் தொழிலை இளைய தலைமுறையினர் ஆர்வத்துடன் மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு பல புதுமையான முயற்சிகளை துவக்கியுள்ளது. பெடல்தறிகள், எலக்ட்ரானிக் ஜக்கார்டு, மின்மோட்டார் பொருத்திய தார் சுற்றும் இயந்திரம், மின்மோட்டார் பொருத்திய பாவு சுற்றும் இயந்திரம், மின்மோட்டார் பொருத்திய ஜக்கார்டு இயந்திரம் ஆகியவை பயன்படுத்தப்படுவதை ஊக்குவித்தல் உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த முன்னோடித் திட்டங்கள் நெசவாளர்களுடைய வேலைப் பளுவின் கடினத் தன்மையை வெகுவாக குறைத்ததோடு, உற்பத்தித் திறனையும் அதிகரித்துள்ளது.

கைத்தறி துறையின் வளர்ச்சி மற்றும் நெசவாளர் நலனுக்கான மத்திய அரசின் திட்டங்களான மகாத்மா காந்தி புங்கர் யோஜனா, நெசவாளர் கடன் அட்டை வழங்கும் திட்டம் மற்றும் ராஷ்ட்ரிய சுவஸ்த்ய பீமா யோஜனா ஆகியவற்றை செயல்படுத்துவதில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

தமிழக கைத்தறித் துறையின் வளர்ச்சிக்கு கூட்டுறவு இயக்கம் முக்கிய பங்காற்றியுள்ளது. கைத்தறி நெசவாளர்கள் 1,163 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் ஒருங்கிணைந்துள்ளனர்.

80 ஆண்டுகளைக் கடந்துள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் என்கிற "கோஆப்டெக்ஸ்" நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம், கைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் பொருட்களை சந்தைப்படுத்தி இந்தியாவின் மிகப்பெரிய தலைமை கூட்டுறவு நிறுவனமாக விளங்கி வருகிறது.

கோஆப்டெக்ஸ், தமிழ்நாட்டின் ஒரு சிறந்த அங்கீகாரம் பெற்ற வணிகச் சின்னமாக உள்ளது. வடிவமைப்பு மையம், துணி நூல் பரிசோதனைக் கூடம், துணிநூல் நூலகம் உள்ளிட்ட பல புதுமையான உத்திகளின் மூலம் கோஆப்டெக்ஸ் நிறுவனம் நெசவாளர்கள் மற்றும் தொடக்க கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. கோஆப்டெக்ஸ் நிறுவனம் அண்மையில் வலைதளம் மூலம் விற்பனையை துவக்கியுள்ளது.

முதலாவது தேசிய கைத்தறி தினத்தை கொண்டாட சென்னையே பொருத்தமான இடம் என்பதால், சென்னையைத் தெரிந்தெடுத்தமைக்கு பாரதப் பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தருணத்தில், கைத்தறி பிரிவின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் நெசவாளர்களின் நலனை காப்பது எனது அரசின் கடமையாகும் என்று நான் மீண்டும் உறுதியளிக்க விரும்புகிறேன்.

துணிநூல், குறிப்பாக கைத்தறித் தொழில், தமிழகத்தின் வளமையான பாரம்பரியத்தின் ஒரு கூறாகும். அப்பாரம்பரியத்தை காப்பதற்கு தனிக்கவனம் தொடர்ந்து செலுத்தப்படும். தமிழக மக்கள் தொகையில் ஒரு கணிசமான பங்கு வகிக்கும் நெசவாளர்களின் நலன் காக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். ஜவுளித்தொழிலில், குறிப்பாக கைத்தறி நெசவில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகிக்க எனது அரசு உறுதி பூண்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

English summary
CM Jayalalitha's speech was read out in PM Modi's function in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X