For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"மது ஆலைகளின் பாதுகாவலர் ஜெயலலிதா, மது விலக்கு அமல்படுத்துவாரா?": ராமதாஸ் கேள்வி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: படிப்படியாக மது விலக்கை அமல்படுத்த உள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளது நாடகம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று சென்னையில் நடந்த அதிமுக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக மது ஆலைகளின் பாதுகாவலராக செயல்பட்டு வந்த ‘வீராங்கனை' ஜெயலலிதாவை, மதுவிலக்கு விஷயத்தில் பா.ம.க.வுக்கு ஆதரவாக மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி எந்த அளவுக்கு நடுக்கம் காண வைத்திருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்.

Jayalalitha cheat the people by making false announcement on liquor ban, says Ramadoss

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அதைப்போல் தான் தேர்தல் என்ற பசி வந்தவுடன் பழங்கால வசனங்களையெல்லாம் மறந்து விட்டு படிப்படியாக மதுவிலக்கு என்று அறிவித்து மக்களை ஏமாற்ற முயல்கிறார்.‘‘முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும்.

கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப் பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும்'' என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு ஏமாற்று வேலை என்பதை நிரூபிப்பதற்கு சில கடந்த கால நிகழ்வுகளை மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

தீவுத்திடல் பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா,‘‘பூரண மதுவிலக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பது தான் எப்பொழுதும் நான் கொண்டுள்ள கொள்கை ஆகும்'' என்று கூறியிருக்கிறார். இதுதான் ஜெயலலிதாவின் உண்மையான கொள்கை என்றால், 1991 ஆம் ஆண்டில் முதல்முறை முதலமைச்சராக பதவியேற்ற போது, மலிவுவிலை மது எனப்படும் பாக்கெட் சாராயத்தை ஒழிக்க முதல் கையெழுத்திட்டபோதே படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவதாக அறிவித்து அடுத்த இரு ஆண்டுகளிலோ, அந்த ஆட்சிக்காலத்தின் இறுதிக்குள் ளாகவோ முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.

பின்னர் 2001 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிறகாவது தமது எண்ணத்தை செயல்படுத்தியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. மாறாக தமது உடன்பிறவா சகோதரி குடும்பத்தினரின் பெயரில் தொடங்கப்பட்ட மிடாஸ் கோல்டன் மது ஆலையில் வடிக்கப்படும் மதுவகைகளை அதிக அளவில் விற்க வேண்டும் என்பதற்காக மதுக்கடைகளை அரசுடைமையாக்கி மக்கள் மீது மதுவைத் திணித்தவர் தான், மக்களுக்காகவே வாழ்வதாக கூறிக்கொள்ளும் ஜெயலலிதா.

ஒருவேளை முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் திட்டம் 2011 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது என்றால் அந்த ஆண்டின் காந்தியடிகள் பிறந்தநாளில் படிப்படியான மதுவிலக்கை அறிமுகப்படுத்தியிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இப்போது தமிழகம் மது இல்லாத பூமியாக மாறியிருக்கும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.

மாறாக 300&க்கும் மேற்பட்ட புதிய மதுக்கடைகளையும், எலைட் கடைகளையும் திறந்தார். 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலும், திசம்பர் மாதத்திலும் மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்தியதற்காக என்னையும், பா.ம.க. நிர்வாகிகளையும் கைது செய்தார். விபத்துக்களைத் தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்ற போது அந்த மதுக்கடைகளை திறக்க மறுத்தார்.

உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகு தான் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சில மதுக்கடைகளை மூடினார். மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.

பள்ளி வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு அருகில் உள்ள 1500 மதுக்கடைகளை மூட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகளை குப்பைத்தொட்டியில் வீசினார். குறைந்தபட்சம் குடிப்பகங்களையாவது மூட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டபோது, அதை செய்ய மறுத்து குடிப்பகங்கள் இல்லாத சுமார் 3,000 மதுக்கடைகளில் அதிமுகவினரைக் கொண்டு அனுமதி பெறாத சட்டவிரோத குடிப்பகங்களை நடத்தினார். மதுவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியவர்கள் மீது அடக்குமுறைகளையும், வன்முறை களையும் கட்டவிழ்த்து விட்டார்.

இப்படிப்பட்ட ஜெயலலிதா, இப்போது திடீர் ஞானம் வந்தவரைப் போல படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போகிறேன் என்று கூறினால் அதை தள்ளாத போதையில் தடுமாறும் குடிகாரன் கூட நம்பமாட்டான்.

அடுத்தபடியாக 2001&06 அதிமுக ஆட்சியை விட 2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மது விற்பனை 109% அதிகரித்ததாகவும், ஆனால், இப்போது 2010-11 ஆம் ஆண்டை விட நடப்பாண்டில் மது விற்பனை குறைந்து விட்டதாகவும் உறுதி செய்ய முடியாத புள்ளிவிவரத்தை கூறி மக்களை ஏமாற்ற ஜெயலலிதா முயற்சி செய்திருக்கிறார்.

உண்மையில் மது விற்பனை விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட 2011-12 முதல் 2013-14 வரையிலான 3 ஆண்டுகளிலும் அதற்கு முந்தைய ஆண்டை விட அதிகமாக மதுவும் பீரும் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. 2010-11 ஆம் ஆண்டில் 4 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பெட்டிகள் மதுவும், 2 கோடியே 70 லட்சத்து 52 பெட்டிகள் பீரும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் 2011-12 ஆம் ஆண்டில் மது விற்பனை 5 கோடியே 36 லட்சத்து 35 ஆயிரம் பெட்டிகளாகவும், பீர் விற்பனை 2 கோடியே84 லட்சத்து 29 ஆயிரம் பெட்டிகளாகவும் அதிகரித்துள்ளது. 2012-13 ஆம் ஆண்டில் இது முறையே 5.6784 கோடி பெட்டிகள், 3.0472 கோடி பெட்டிகளாகவும், 2013-14 ஆம் ஆண்டில் இது 5.6307 கோடி பெட்டிகளாகவும், 2.7083 கோடி பெட்டிகளாகவும் உயர்ந்துள்ளன.

மது விற்பனையை அதிகரித்த விஷயத்தில் திமுக அரசுக்கும், அதிமுக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டுமே மதுவைக் கொடுத்து தமிழக மக்களை சீரழிக்கும் பாவத்தை செய்து வருபவை தான். இவற்றுக்கு பாவமன்னிப்பு கிடையாது.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை வலியுறுத்தி கடந்த 35 ஆண்டுகளாக போராடி வருகிறேன். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து கடந்த 27 ஆண்டுகளாக போராடி வருகிறது. இதன்பயனாக தமிழகத்தில் மதுவுக்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.

இதனால் ஏற்பட்ட அச்சத்தினால் தான் படிப்படியாக மது விலக்கு வாக்குறுதியை ஜெயலலிதா அறிவித்துள்ளார். திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் கடந்த ஆண்டு இத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டதற்கும் பா.ம.க. ஆதரவு எழுச்சி தான் காரணம். அந்த வகையில் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி.

ஆனால், அதிமுகவும், திமுகவும் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களின் கடந்த காலம் அப்படிப்பட்டது. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.1.90 லட்சம் கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதில், அரசுக்குக் கிடைத்த வரி வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி போக, மீதமுள்ள ரூ.70,000 கோடி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த மது ஆலை அதிபர்களுக்கே சென்றுள்ளது.

மிக எளிதாக கிடைக்கும் இவ்வளவு பெரிய வருவாயை இழக்க தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ விரும்பாது. எனவே, இந்த இரு கட்சிகளும் ஒரு போதும் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பது உறுதி.

அதேநேரத்தில் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதை ஒரு தவமாக கருதி பா.ம.க. மேற்கொண்டு வருகிறது. இதை மக்களும் அறிவர். எனவே, அடுத்த 40 நாட்களில் பா.ம.க ஆட்சிக்கு வருவதும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதும் உறுதி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

English summary
Jayalalitha cheat the people by making false announcement on liquor ban, says Ramadoss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X