For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2014 பிளாஷ்பேக்: ஊழலால் பதவியிழந்த ஜெயலலிதாவும் செல்வகணபதியும்…

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்'... என்கிறது சிலப்பதிகாரம். அதே காப்பியம்தான் ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்றும் கூறியுள்ளது.

சிலப்பதிகாரத்தின் வார்த்தைகள் இன்றைக்கும் உண்மையாக திகழ்கின்றது. 18 ஆண்டுகளுக்கு முன் விதைத்த ஊழல் என்ற விதையை சில மாதங்களுக்கு முன்பு அறுவடை செய்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

அதேபோல ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்த செல்வகணபதிக்கும் ‘சுடுகாட்டு கூரை ஊழல்'தான் அவரது பதவிக்கும் சமாதி கட்டியது.ஊழல் பெருச்சாளிகளுக்கு சாவுமணி அடிக்கும் நேர்மையான நெஞ்சுரம் கொண்ட நீதிமான்கள் இருக்கின்றனர் என்பதை 2014 ஆம் ஆண்டு மக்களுக்கு உணர்த்தியது.

ஜெயலலிதாவிற்கு சிறை

ஜெயலலிதாவிற்கு சிறை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை தீர்ப்புக்கு முன், தீர்ப்புக்குப் பின் என்று வைத்துக்கொள்ளலாம். செப்டம்பர் 27ஆம் தேதி அவரது அரசியல் வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவமாக அமைந்து விட்டது. அன்றைய தினம்தான் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்கா, 4 ஆண்டுகால சிறைதண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். வழக்கில் தொடர்புடைய சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், இவர்கள் 3 பேருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கு

சொத்துக்குவிப்பு வழக்கு

எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு, இரண்டாக உடைந்த, அ.தி.மு.க.,வை இணைத்து, ராணுவ கட்டுக்கோப்போடு, அ.தி.மு.க.,வை வழி நடத்தினார் ஜெயலலிதா. 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த காலத்தில் அவரின் தோழியான சசிகலா, சசிகலாவின் உறவினர்களான வி.என். சுதாரகன், ஜே. இளவரசி ஆகியோரும் வருமானத்துக்கு மீறி 66.65 கோடி ரூபாய் சொத்து சேகரித்ததாக 1997 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்

இது தி.மு.க. அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறப்பட்டது. பின்னர் 2001 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவே திமுகவின் கோரிக்கையை ஏற்று இவ்வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது.

பதவி பறிப்பு

பதவி பறிப்பு

கடந்த 2011 தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக, ஜெயலலிதா முதல்வரானார். இந்நிலையில், அவர் முதல் முறையாக, முதல்வராக பதவி வகித்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தொடரப்பட்ட வழக்கு 18 ஆண்டுகளுக்குப்பின்னர் முடிவுக்கு வந்தது. ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகால தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். முதல்வர் பதவி பறிக்கப்பட்டது.

முதல் முதல்வர்

முதல் முதல்வர்

ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்று, சிறை சென்றுள்ள முதல் முதல்வராகி உள்ளார். அதே நேரத்தில், வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை காரணமாக, அவர் பதவி இழந்துள்ளது, இது, இரண்டாவது முறையாகும்.

நம்பர் 2தான்

நம்பர் 2தான்

மேலும், தமிழகத்தில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, பதவியை இழக்கும் இரண்டாவது நபர் இவர். இவருக்கு முன், சுடுகாட்டு கூரை வழக்கில், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதி பதவியை இழந்தார்.

செல்வகணபதி யார்?

செல்வகணபதி யார்?

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் செல்வகணபதி. ஆரம்பக் காலத்திலிருந்து அதிமுவின் ஆதரவாளராக இருந்த இவர், 1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஜெயலலிதாவின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது ஜவஹர் ரோஜ்கர் யோஜனா வேலைவாய்ப்புத் திட்டத்தில் சுடுகாட்டு கூரை அமைக்கும் பணியில் முறைகேடு நடந்தது.

சி.பி.ஐ வழக்கு

சி.பி.ஐ வழக்கு

இது தொடர்பாக இவர் மீது 1997ல் சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் புலன் விசாரணை நடத்தினர்.

திமுகவிற்கு தாவல்

திமுகவிற்கு தாவல்

வழக்குத் தொடர்ந்தபோதிலும் அதிமுகவிலேயே நீடித்து வந்த செல்வகணபதி 1999ல் சேலம் நாடாளுமன்றத் தொகுயில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் ஜெயலலிதா இவரை ஓரங்கட்டியதால் 2008ம் ஆண்டு திமுகவுக்குத் தாவினார். கட்சியில் இவருக்கு தேர்தல் பணிக்குழுச் செயலாளர் பதவி வழங்கியதோடு, 2012ல் ராஜ்யசபா எம்.பி.யாகவும் வாய்ப்பை திமுக வழங்கியது.

2 ஆண்டு தண்டனை

2 ஆண்டு தண்டனை

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ. வழக்குகளுக்கான சென்னை 9-வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.மாலதி கடந்த ஏப்ரலில் தீர்ப்பளித்தார். அப்போதைய அமைச்சர் செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்யமூர்த்தி, மாவட்ட திட்ட அதிகாரி எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தங்கள் பதவியின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதோடு, பாரதி என்பவருடன் சேர்ந்து அரசுக்கு ரூ.23 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அவர்கள் 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

எம்.பி பதவி ராஜினாமா

எம்.பி பதவி ராஜினாமா

16 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த சுடுகாட்டுக் கூரை வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றம் இவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனால், தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை கடந்த ஏப்ரல் 18ம் தேதி செல்வகணபதி ராஜினாமா செய்தார்.

2 ஆண்டு பதவி போச்சே

2 ஆண்டு பதவி போச்சே

செல்வகணபதியின் பதவிக்காலம் 2016ல் முடிவடைந்தபோதிலும் 2 ஆண்டுகால சிறைத் தண்டனையால் தனக்கு எஞ்சியிருந்த 2 ஆண்டுகால பதவியை இழந்தார்.

முதல்பெருமை

முதல்பெருமை

தமிழகத்தைச் சேர்ந்த, அரசியல்வாதி ஒருவர், ஊழல் குற்றச்சாட்டின் கீழ் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், எம்.பி. பதவியை இழந்தார் என்ற பெருமை, தமிழகத்துக்கு செல்வகணபதியால் கிடைத்தது.

இவர்களும் பதவி இழந்தவர்கள்தான்

இவர்களும் பதவி இழந்தவர்கள்தான்

தமிழகத்தில் ஊழல் வழக்கிற்காக தண்டனை பெற்று பதவி இழந்தவர்கள் இருவர் என்றால், மத்தியில் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, 1990 - 91 காலக்கட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ரஷீத் மசூத். எம்.பி.பி.எஸ்., இட ஒதுக்கீட்டில், முறைகேடாக பணம் பெற்று ஒதுக்கீடு செய்த வழக்கில், டெல்லி சி.பி.ஐ., நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்., 19ம் தேதி, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து இவர் தனது எம்.பி., பதவியை இழந்தார்.

லாலு பிரசாத் யாதவ்

லாலு பிரசாத் யாதவ்

லாலு பிரசாத் யாதவ், 1990ல் பீகார் முதல்வராக இருந்தார். அவர் மீதான, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ., நீதிமன்றம், 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி, ஐந்தாண்டு சிறை மற்றும் 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. அதனால், அவரது எம்.பி., பதவி பறிபோனது.

தப்பிவந்த ஊழல் பெருச்சாளிகள்

தப்பிவந்த ஊழல் பெருச்சாளிகள்

2013ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றவர்கள், ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெற்றால், அவர்கள் 3 மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்து விட்டால், பதவி இழக்க மாட்டார்கள் என்று ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 8-ன் உள்பிரிவு 4 கூறுகிறது. இந்த உள் பிரிவை பயன்படுத்தி, இந்தியா முழுவதும் ஏராளமான சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற, ஊழல் மற்றும் சட்டவிதிகளுக்கு மாறாக கூடுதல் சொத்து சேர்த்தல், லஞ்சப்புகார் போன்ற குற்ற வழக்குகளின் தண்டனைகளில் இருந்து தப்பி வந்தனர்.

இதன் சூத்திரதாரி யார்?

இதன் சூத்திரதாரி யார்?

ஜனநாயக நாடான இந்தியாவில், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், குற்றவாளிகள் என்பது உறுதியானால், அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடைசெய்யும் வகையில், தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, 2005-ம் ஆண்டு லில்லி தாமஸ் மற்றும் லோக் பிரஹாரி நிறுவனம் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இதன் மீது 2013ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 8-ன் உள்பிரிவு 4ஐ நீக்கி உத்தரவிட்டனர். இதனால் தற்போது, ஊழல் குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பதவி இழக்கும் நிலை உருவாகி விட்டது.மேலும் அவர்கள் குறைந்த பட்சம் 6 ஆண்டுகள் தேர்தலிலும் போட்டியிட முடியாது என்பதுதான் கூடுதல் சிறப்பம்சம்.

ஒரு ஒற்றுமை இருக்கே

ஒரு ஒற்றுமை இருக்கே

ரசீத் மசூத், லாலு, செல்வகணபதி என ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் பதவி பறிபோனவர்கள் பட்டியல் நீண்டாலும், லாலுவும் ஜெயலலிதாவும் 'அரசியலை கலக்கிய பிரபலங்கள்' என்பதால்தான் இந்தியாவே இவர்களைத் திரும்பிப் பார்த்தது. இதில் ஒரு ஒற்றுமை என்னவெனில் அனைவருமே 90களில் செய்த ஊழலுக்கு தண்டனை பெற்றதுதான். ஆக 2014 ஆண்டு ஊழலுக்கு எதிராக சாவுமணி அடிக்கும் ஆண்டாக அமைந்தது.

ஜாமீனில் வெளிவந்த ஜெ.

ஜாமீனில் வெளிவந்த ஜெ.

சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு கடந்த அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியது. டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தவிட்டது உச்ச நீதிமன்றம். இதனையடுத்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உச்சநீதிமன்றம் கெடு விதித்த நாளுக்கு முன்பாகவே மேல்முறையீடு தொடர்பான ஆவணங்களை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

2015 ஏப்ரல் 18 வரை

2015 ஏப்ரல் 18 வரை

டிசம்பர் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் வழங்கப்பட்ட இடைக்கால நிபந்தனை ஜாமீன் ஏப்ரல் 18ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர். ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க ஒரு சிறப்பு அமர்வை கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமைக்க வேண்டும். இந்த சிறப்பு அமர்வானது இன்று முதல் நாள்தோறும் விசாரணை நடத்தி 3 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

ஊழலின் தண்டனை

ஊழலின் தண்டனை

ஊழிற் பெருவலி யாவுள என்று திருவள்ளுவரும், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று இளங்கோவடிகளும் ஊழின் வலிமையைக் குறிப்பிட்டுள்ளனர். முன்வினைப் பயனை விட வலிமையானது வேறில்லை. அதேபோலத்தான் ஊழல் பெருச்சாளிகள் தங்களுக்கான தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என்கிறது இன்றைய சட்டமும் நீதியும்.

சிலப்பதிகாரத்தின் வலிமை

சிலப்பதிகாரத்தின் வலிமை

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்று அன்று சிலப்பதிகாரம் சொன்னது. அது இன்றும் பொருந்துகிறது. இது அன்றும், இன்றும், என்றும் மாறாத கோட்பாடு. இதை ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டாலே போதும். நாடு செழிக்கும், மக்கள் வளமை பெறுவார்கள், தர்மம் சிறக்கும் என்கின்றனர் இன்றைய அறிஞர்கள்.

English summary
With a Bangalore court sentencing her to four years of prison term in the disproportionate assets case, AIADMK supremo Jayalalithaa today earned the dubious distinction of becoming the first serving Chief Minister to lose her post and also walks into jail. Incidentally, Jayalalithaa is the second politician from the state to earn a disqualification as elected representative after former DMK Rajya Sabha MP TM Selvaganapathy who was convicted in the cremation shed scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X