For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்பாய் இருங்கள்!… ஆத்திரப்படாதீர்கள் ஜெ. சொன்ன குட்டிக்கதைகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அன்பும், அமைதியும் இல்லாத இடத்தில் ஆத்திரம் தான் குடிகொண்டு இருக்கும்.கோபத்தை தவிருங்கள். அன்புடனும், அமைதியுடனும் வாழுங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா குட்டிக் கதைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அமைச்சர்கள் இல்லத்திருமண விழாவில் பங்கேற்ற அவர் மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

பின்னர் மணமக்களுக்கு அறிவுரைகள் கூறும் வகையில் குட்டிக்கதைகளை கூறினார்.

Jayalalitha tell a short story for newly married couple

துறவியும் சீடனும்

ஒரு துறவி, தன் சீடருடன் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் திடீரென ஒரு சிங்கம் தென்பட்டது.

சிங்கத்தைப் பார்த்த சீடன் நடுநடுங்கிப் போய், "இப்போது என்ன செய்வது?" என்று குருவிடம் கேட்டான்.

அன்பால் சாதிக்கலாம்

"ஒன்றும் செய்ய வேண்டாம்", என்று கூறிய குரு, கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். குருவின் மனதில் உருவான அமைதி, அந்தச் சிங்கத்தையும் தொற்றிக் கொண்டது. சிங்கம், தன் மூர்க்கத் தன்மையை இழந்து சாதுவாக திரும்பிச் சென்றது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அன்பும், அமைதியும் தவழ்ந்தால், எதிரில் இருப்பது கொடிய மிருகமே ஆனாலும், அதற்கு நாம் அன்பையும், அமைதியையும் ஊட்ட முடியும் என்பதைத் தான். அன்பும், அமைதியும் இல்லாத இடத்தில் ஆத்திரம் தான் குடிகொண்டு இருக்கும்.

காணாமல் போன மான்

ஒரு கிராமத்தில் ஒருவன் அழகிய புள்ளிமான் ஒன்றை தன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள், அந்த மான் காணாமல் போய்விட்டது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மனிதர், அந்த மானை பிடித்துப் போயிருப்பவனை பழிவாங்கத் துடித்தான். கடவுளிடம் முறையிட்டான். கடவுளும் வந்தார்.

கடவுளே காப்பாற்று!

கடவுளிடம் அந்த மனிதர், தான் ஆசையாய் வளர்த்த மானை தாருங்கள் என்று தானே கேட்டிருக்க வேண்டும்? ஆனால் அவ்வாறு கேட்கவில்லை.

மாறாக, ஆத்திரத்தில், "நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மானை திருடியவன் யாராக இருந்தாலும் அவனை என் முன் நிறுத்த வேண்டும்" என்று கேட்டான்.

அதற்கு கடவுள், "பக்தா! மானை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால், மான் காணாமல் போனதற்கு காரணமானவர்கள் யார் என்று கேட்காதே" என்றார்.

கடவுள் கொடுத்த வரம்

"கடவுளே! நான் மிகுந்த கோபத்தில் உள்ளேன். மானை திருடியவனை பழிவாங்காமல் விட மாட்டேன். எனவே, திருடியவனை இங்கு வரவழைக்க வேண்டும்" என்று பிடிவாதமாக கேட்டான்.

இதனைக் கேட்ட கடவுள், "சரி. நீ கேட்கின்ற வரத்தை தருகிறேன். ஆனால், பின்னால் வருத்தப்படக் கூடாது" என்றார். அந்த மனிதரும் சரி என்றார்.

"தந்தேன் நீ கேட்ட வரத்தை. இந்த மானை திருடிச் சென்றவர் உன் பின்னால் நிற்கிறார்", என்று பக்தனிடம் கூறினார் கடவுள்.

உடனே பக்தன் திரும்பிப் பார்த்தான். மிகப் பெரிய சிங்கம் நின்று கொண்டிருந்தது.

ஆத்திரம் அழிவு தரும்

சிங்கத்தைப் பார்த்தவுடன், பழிவாங்கும் கோபம் மறைந்து, பயம் கவ்விக் கொண்டது. "அய்யோ கடவுளே காப்பாற்று!" என்று அலறியடித்துக் கொண்டு ஓடினார் பக்தர்.

இந்தக் கதையில் வரும் பக்தனுக்கு அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் தான் வேலை செய்தது. அது அழிவைத் தந்தது. எனவே, கோபத்தை தவிருங்கள். அன்புடனும், அமைதியுடனும் வாழுங்கள்.

இ-மெயில் முகவரி

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் பணியாளராக ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த நிறுவனத்துக்கு, புதிதாக நியமிக்கப்பட்ட மேலாளர், அங்கு பணி புரியும் அனைவரின் இ-மெயில் முகவரியையும், கேட்டார். கம்ப்யூட்டர் பற்றி ஏதும் தெரியாத அந்த தரை துடைக்கும் பணியாளருக்கு இ-மெயில் முகவரி கிடையாது. எனவே, தனக்கு, இ-மெயில் முகவரி இல்லை என்று மேலாளரிடம் அவர் தெரிவித்து விட்டார்.

"கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவருக்கு இ-மெயில் இல்லை என்றால், எப்படி?" என்று கூறி, அந்த பணியாளரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.

வெங்காய வியாபாரி

வேலை இல்லை என்றதும், அந்த மனிதருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தனது சேமிப்பில் இருந்த ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு, சந்தைக்கு சென்று வெங்காயம் வாங்கினார். அதனைக் குடியிருப்புப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று, கூவிக் கூவி விற்றார். சில ஆண்டுகளில், பெரிய வெங்காய வியாபாரியாக ஆகிவிட்டார்.

கம்யூட்டர் தெரியாது

இந்தச் சூழ்நிலையில், ஒரு வங்கியில் கணக்கு துவக்குவது தொடர்பாக வங்கி ஊழியர் அந்த வெங்காய வியாபாரியை சந்தித்தார். கணக்குத் துவங்குவதற்கான விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்துவிட்டு, இ-மெயில் முகவரியை எழுதுவதற்காக முகவரியை கேட்டார். அதற்கு அந்த மனிதர், தனக்கு கம்ப்யூட்டர் பற்றி ஏதும் தெரியாது என்றும், எனவே இ-மெயில் முகவரி இல்லை என்றும் பதில் அளித்தார்.

முயற்சி பலன் தரும்

உடனே அந்த வங்கி ஊழியர், "இ-மெயில் இல்லாமலேயே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி இருக்கிறீர்களே? உங்களுக்கு கம்ப்யூட்டர், இ-மெயில், இண்டர்நெட் ஆகியவை தெரிந்திருந்தால், எந்த அளவுக்கு முன்னேறி இருப்பீர்களோ!" என்று ஆச்சரியமாக கேட்டார்.

உடனே, அந்த வெங்காய வியாபாரி, "அது தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்" என்றார்.

எனவே, வாய்ப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்லும் போது வருத்தப்படாதீர்கள். முயற்சி செய்யுங்கள். அதைவிட பெரிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும். இது மணமக்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள எல்லோருக்கும் பொருந்தும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

English summary
TN Chief Minister J. Jayalalitha told a short story for newly wedding couple at ministers family marriage function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X