For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே தினம்: ஜெயலலிதா, கருணாநிதி,டாக்டர் ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் வாழ்த்து

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மே தினத்தையொட்டி முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா

உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே தின நன்னாளில் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த "மே தின" நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆரும் மே தினமும்

உழைப்பாளர்களுக்குள் உயர்வு, தாழ்வு இல்லை; அவர்களிடையே வேறுபாடு இல்லை; உழைப்போர் அனைவரும் சரிநிகர் சமானமானவர்களே. இதைத் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்,, "ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே! உழைக்கும் மக்கள் யாவரும், ஒருவர் பெற்ற மக்களே!" என்று உழைப்பின் மாண்பினையும், உழைப்பாளர்களின் பெருமையையும் உயர்த்தியுள்ளார்.

நாட்டின் பெருமை

தளர்வறியா உழைப்பின் மூலம் நமது நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த "மே தின" நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

டாக்டர் ராமதாஸ்

உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில் பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஜூலை 14&ஆம் தேதி பாரீசில் கூடிய உலகத் தொழிலாளர்கள் மே ஒன்றாம் தேதியை உலகத் தொழிலாளர் நாளாக அறிவித்தனர். இந்தியாவில் சென்னையில் தான் முதன்முதலில் தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டது என்பதும், தமிழராகிய சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் தான் இதைக் கொண்டாடினார் என்பதும் தமிழர்களாகிய நமக்கு பெருமையாகும். உழைப்பாளர்களின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்திய உழைப்பாளர் நாளை மே நாளாக கொண்டாடும் பாட்டாளிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வைகோ வாழ்த்து

தொழிலாளர்களின் உழைப்பே உலகத்தின் மூலதனம்' என்ற உண்மையை பாட்டாளி வர்க்கம் ரத்தம் சிந்திப் பிரகடனம் செய்த நாள்தான் மே முதல் நாள் ஆகும்.

16வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மே 16இல் வெளிவர இருக்கின்றன. ஈழத் தமிழ் குலத்துக்கும், தாய்த் தமிழகத்துக்கும் கொடிய வஞ்சகமும், துரோகமும் செய்த சோனியா காந்தி இயக்கும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையப்போகிறது. இதனை மனதில் கொண்டு மே தினத்தைக் கொண்டாடுவோம்.

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தோனுக்கு சங்காரம் நிசமெனத் தாய்த் தமிழகத்துப் பாட்டாளி வர்க்கமும்,இளையோர் கூட்டமும் சூளுரைக்கட்டும் என்று கூறியுள்ளார் வைகோ.

விஜயகாந்த் வாழ்த்து

உழைப்பவருக்கு உயர்வு தேடுகின்ற நாள் மே நாளாகும். ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினமாகும். நாடுகள் பலவாயினும் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவது மே தினம் மட்டுமே. எவ்வாறு பறவைகள் பறந்து இரை தேடுகின்றனவோ, மீன்கள் நீந்தி இரை தேடுகின்றனவோ, ஊர்வன ஊர்ந்து உணவு தேடுகின்றனவோ அதே போல மனிதர்களும் உழைத்து வாழ வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. ஆனால் ஒருவரை ஒருவர் ஏமாற்றியும், ஒருவரை இன்னொருவர் சுரண்டியும், ஒருவர் பொருளை இன்னொருவர் திருடியும் வாழ்வதென மனிதர்களுக்கிடையே தீயப் பழக்கங்கள் கால வேகத்தில் உண்டாகி விட்டன. எல்லோரும் உழைத்து வாழ்வதன் மூலமே இத்தகைய தீமைகளுக்கு முடிவு கட்ட முடியும் என்று கூறியுள்ளார்.

கருணாநிதி வாழ்த்து

இதேபோல் திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,தமிழகத்தின் வளம் பெருக்கும் தொழிலாளர் சமுதாய உடன் பிறப்புகளுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் வாழும் தொழிலாளர் சமுதாயம் நலம் பெறுவதற்குத் தேவையான மகத்தான பல திட்டங்களைச் செயல்படுத்தி ‘‘தொழிலாளர் சமுதாயத்தின் தோழனாக, தொண்டனாக திகழ்ந்தது, திகழ்கிறது என்றும் திகழும் இயக்கம் தி.மு.க.தான் என்பதனை நினைவுபடுத்தி, தொழிலாளர் சமுதாயம் எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்தி இந்த மே தின நன்னாளில் எனது நல்வாழ்த்துக்களை மீண்டும் மீண்டும் உரித்தாக்குகிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

English summary
TamilNadu chief minister J.Jayalalitha, MDMK leader Vaiko, DMDK chief Vijayakanth wishes the workers community in his May Day message and urged every one should work hard and enjoy the life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X