For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குற்றவாளிகளை பிடிக்க உதவிய 251 போலீசாருக்கு பரிசுத் தொகை அறிவித்த ஜெயலலிதா

By Siva
Google Oneindia Tamil News

Jayalalithaa announces reward for policemen
சென்னை: தீவிரவாதிகளை பிடிக்க உதவிய 251 போலீசாருக்கு முதல்வர் ஜெயலலிதா பரிசுத் தொகையினை அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்து முன்னணிப் பிரமுகர் வெள்ளையப்பன் வேலூரில் கொலை செய்யப்பட்ட வழக்கு, பாரதீய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கு, மதுரை திருமங்கலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைத்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் மதுரையைச் சேர்ந்த ‘போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், திருநெல்வேலியைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில் மற்றும் நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறப்புப் புலனாய்வுப் பிரிவுடன் மாநில உளவுத் துறையின் சிறப்புப் பிரிவும் இணைந்து துப்பு துலக்கியதன் பேரில், சென்னை பெரியமேடு காவல் நிலைய சரகம் சூளை அருகே மேற்படி தலைமறைவு எதிரிகளில் ஒருவரான ‘போலீஸ்' பக்ருதீன் 4.10.2013 அன்று மாலை கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த இதர தலைமறைவு எதிரிகளான பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை தமிழக காவல் துறையினர் 5.10.2013 அன்று கைது செய்தனர்.

இந்தப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினரின் வீரதீரச் செயலையும், கடமை உணர்வையும் பாராட்டி, தமிழகக் காவல் துறையின் பெருமையை நிலைநிறுத்தியதற்காக அவர்களை கெளரவிக்கும் வகையில் அவர்கள் அனைவருக்கும் பரிசுத் தொகை மற்றும் ஒருபடி பதவி உயர்வு அளிக்க நான் உத்தரவிட்டேன்.

இதன்படி, இந்த வீரதீரச் செயலில் ஈடுபட்டு படுகாயம் அடைந்து, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை, சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் எஸ். லட்சுமணனை 9.10.2013 அன்று நான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவருடைய வீரதீரச் செயலைப் பாராட்டி 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவருடைய மனைவியிடம் வழங்கினேன்.

மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் எஸ்.லட்சுமணன்னின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து, அவர் இயல்பு நிலைக்குத் திரும்பிட தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அளிக்குமாறு நான் அறிவுறுத்தினேன். அவரது சிகிச்சைக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்கும் என்பதையும் அறிவித்தேன்.

இதன் தொடர்ச்சியாக, தலைமறைவு எதிரிகளை கண்டுபிடிக்க ஏதுவாக விரைவு நடவடிக்கைகளை மேற்கொண்ட காவல் துறையினரை 9.10.2013 அன்று தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து, அவர்களை கெளரவிக்கும் வகையில், 21 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, உயிரை துச்சமென கருதி வீரதீரத்துடன் செயலாற்றியமைக்காக எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும் நான் தெரிவித்தேன்.

இது போன்ற குற்றவாளிகளைப் பிடிப்பதில் கூட்டு முயற்சி மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவை இன்றியமையாதவை. இதனைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்குகளிலும், இது தொடர்பான சில வழக்குகளிலும் சிறப்பாகப் பணியாற்றி நுண்ணறிவு தகவல்கள் அளித்து, தங்கள் கடமையை செவ்வனே செய்துள்ள வேறு பலருக்கும் ரொக்கப் பரிசினை வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.

1. இதன்படி, 4.10.2013 அன்று போலீஸ் பக்ருதீனை பிடிப்பதற்கு முயற்சி செய்த ஆய்வாளர் லட்சுமணன் மற்றும் ரவீந்திரன் ஆகியோரை எதிரி தாக்கி தப்ப முயற்சித்த போது அங்கு உடனடியாக வந்து அந்தக் குற்றவாளியை மடக்கி கைது செய்வதற்கு பெரும் துணையாக இருந்த பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் வீரகுமாருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

2. மேலும், புத்தூரில் வீட்டில் பதுங்கியிருந்த பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகிய குற்றவாளிகளை வெளிக்கொணருவதற்கும், வீட்டிலிருந்த பெண் மற்றும் மூன்று குழந்தைகளை உயிருடன் வெளியே கொண்டு வருவதற்கும் குற்றப்பிரிவு கண்காணிப்பாளருக்கு உதவியாக இருந்த மதுரை சிறப்பு நுண்ணறிவு பிரிவு தலைமைக் காவலர் விஜயபெருமாள் மற்றும் மதுரை சிறப்பு புலனாய்வுப் பிரிவு தலைமைக் காவலர் மாரியப்பன் ஆகிய இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

3. போலீஸ் பக்ருதீனை பிடிப்பதற்கு ஆய்வாளருக்கு தகவல் அனுப்பி உதவி செய்த பெரியமேடு காவல் நிலைய பெண் காவலர் ராதிகாவுக்கு 2 லட்சம் ரூபாயும், மேற்படி வழக்குகளில் தக்க தகவலை தகுந்த சமயத்தில் அளித்த மதுரை சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் திருநெல்வேலி சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் பண்டரிநாதன் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.

4. இது தவிர, சென்னையில் பெரியமேடு காவல் ஆய்வாளருக்கு உதவி செய்த ஐந்து காவல் அலுவலர்கள், புத்தூரில் வெடிப் பொருட்களை கைப்பற்றி செயலிழக்கச் செய்த ஆறு பேர் மற்றும் பல்வேறு வழக்குகளில் எதிரிகளை அடையாளம் காணவும், பிடிக்கவும் உதவி செய்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அலுவலர்கள்; மேலும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு, சிறப்பு புலனாய்வுப் பிரிவு, சிறப்பு நுண்ணறிவுக் குழு, சிறப்புப் புலனாய்வுக் குழு ஆகிய பிரிவுகளில் பணியாற்றி பயனுள்ள தகவல்கள் சேகரித்தும், விசாரணைகளில் உதவி செய்தும் கடமை உணர்வுடன் பணியாற்றிய அலுவலர்கள் மொத்தம் 245 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் காவல் துறையினர் தங்கள் கடமையை மேலும் சிறப்புற செய்ய வழிவகுக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
CM Jayalalithaa has announced rewards for those policemen who helped in nabbing the terrorists and other culprits
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X