For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘விரைவில் மின் பற்றாக்குறையை தீர்ப்பேன்’’: 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இதையே சொல்லும் ஜெ.

By Chakra
Google Oneindia Tamil News

ஏற்காடு: ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர் சரோஜாவுக்காக ஜெயலலிதா நேற்று அங்கு பிரச்சாரம் செய்தார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு, திருச்சி விமான நிலையத்தை 9.47 மணிக்கு சென்றடைந்த அவர் அங்கிருந்து காலை 10.17 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சேலம் புறப்பட்டார்.

11 மணிக்கு சேலம் உடையாப்பட்டி ஹோலிகிராஸ் பள்ளி மைதானத்தில் உருவாக்கப்பட்ட சிறப்பு ஹெலிபேடில் இந்த ஹெலிகாப்டர் இறங்கியது.

அவரை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி, வேட்பாளர் சரோஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Jayalalithaa blames Centre, DMK for power crisis

11.25 மணிக்கு அங்கிருந்து வேனில் புறப்பட்ட ஜெயலலிதா சேலம் - ஆத்தூர் மெயின்ரோட்டில் மின்னாம்பள்ளி பை-பாஸ் சாலையில் பேசுகையில்,

நான் தமிழகத்தின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு, பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

உங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பல்வேறு நலத் திட்டப் பணிகளை எனது தலைமையிலான அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இவற்றின் பயன்களை வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் எல்லாம் பெற்று வருகிறீர்கள்.

மின்சாரத்தைப் பொறுத்தவரையில், தேவைக்கேற்ப மின்சார உற்பத்தியைப் பெருக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு துரிதமாக எடுத்து வருகிறது. மின் கட்டமைப்பினை பலப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

எனது அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக மின்வெட்டு படிப்படியாக குறைந்து, கடந்த ஜூலை மாதம் முதல் மின் நிலைமை முழுவதும் சீர் செய்யப்பட்டு மின்வெட்டே இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட்டது.

இரண்டரை ஆண்டு காலத்தில் எனது அரசு மேற்கொண்ட பகீரத முயற்சியின் காரணமாகவே இது சாத்தியமாயிற்று. கடந்த மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கூட மின்வெட்டே இல்லை என்ற நிலைமையை மிகவும் சிரமப்பட்டு உருவாக்கி இருக்கிறோம்; வேறு எந்த அரசும் செய்திருக்க முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டி இருக்கிறோம் என்று பெருமிதத்தோடு நான் தெரிவித்தேன்.

சொல்லி வைத்தாற்போல் இதற்கு அடுத்த வாரம் முதலே பல மின் உற்பத்தி நிலையங்களில் கோளாறுகள் ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் மீண்டும் மின்பற்றாக்குறை ஏற்பட்டது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மின் நிலையங்கள் எல்லாம் எப்பொழுதும் போல தொடர்ந்து நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

Jayalalithaa blames Centre, DMK for power crisis

ஆனால், கல்பாக்கம், நெய்வேலி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் தான் சொல்லி வைத்தாற் போல் ஒரே சமயத்தில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.

இதுவன்றி, மத்திய அரசு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் தயாரிக்கத் தேவையான நிலக்கரி மற்றும் நாப்தா ஆகியவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2,500 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக வேறு வழியின்றி மீண்டும் மின் வெட்டு செய்ய வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத்தான் தி.மு.கவினர் இந்த இடைத்தேர்தல் பிரசாரத்தில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். "மின்வெட்டே இல்லை'' என்று முதல்வசர் பெருமைபட்டார், சட்டப் பேரவையிலும் அறிவித்தார். ஆனால் அவர் அறிவித்த சில நாட்களிலேயே மின்வெட்டு மீண்டும் ஏற்பட்டு உள்ளதே என்று குதர்க்கமாக பேசுகிறார்கள்.

இதிலிருந்து இந்த மின் பற்றாக்குறை இயல்பாக ஏற்பட்டது அல்ல என்ற எண்ணமும், தி.மு.கவின் மறைமுக ஆலோசனையின் பேரில் மத்திய அரசு செய்யும் சதித் திட்டம் தானோ என்ற சந்தேகமும் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது.

மத்திய அரசுக்கு அடி பணிய மறுக்கிறேன் என்பதால் என் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியினால், கோபத்தினால், காங்கிரஸ் கட்சியும், தி.மு.கவும் கைகோர்த்துக் கொண்டு இப்படி தமிழக மக்களை பழி வாங்குவது நியாயம் தானா என்பதே இப்போதைய விவாதமாக மக்கள் மத்தியில் உள்ளது. இது போன்ற மக்கள் விரோதச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு இந்தத் தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய அரசின், இந்த சூழ்ச்சியை எதிர்கொண்டு, மின் நிலைமையை, வெற்றிகரமாக சமாளிப்போம் என்பதை, உங்களுக்கு நான், தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சரி செய்து, மின்வெட்டே இல்லாத ஒளிமயமான, சுபிட்சமான நிலைமையை விரைவில் உருவாக்கியே தீருவேன் என்பதை இந்தத் தருணத்தில் நான் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த பெருமாள் மனைவி சரோஜா போட்டியிடுகிறார். இவர் உங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர். உங்களுடனேயே இருப்பவர். உங்களையே சுற்றிச் சுற்றி வருவார். உங்களின் அடிப்படைத் தேவைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றிடப் பாடுபடுவார்.

வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் அனைவரும் 4.12.2013 அன்று நடைபெற உள்ள ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், இதயதெய்வம் புரட்சித்தலைவர் கண்ட வெற்றிச் சின்னமாம் ‘‘இரட்டை இலை'' சின்னத்தில் வாக்களித்து, கழக வேட்பாளர் சரோஜாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வதோடு, தி.மு.க. வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்போடு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன் என்றார்.

இதைத் தொடர்ந்து சரோஜாவை ஆதரித்து மேலும் 8 இடங்களில் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா.

மாலை 5.15 மணிக்கு ஹெலிகாப்டர் திருச்சிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

English summary
Blaming the cenral government and the DMK for the present spell of load shedding in Tamil Nadu,AIDDMK general secretary and Chief Minister Jayalalithaa affirmed that she would make the State “free of power cuts” shortly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X