For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ டிஆர்பி ராஜாவை மை டியர் யங் மேன் என்று அழைத்த ஜெ.,

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் தி.மு.க எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜாவுக்கும், முதல்வருக்கும் ஆங்கிலத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. 'மை டியர் யங் மேன்' என ராஜாவை அழைத்த முதல்வர் 'தமிழகத்தில் இருந்து எந்த தொழிற்சாலையும் வெளியே செல்லவில்லை. வரும் காலங்களில் இங்கே தொழில் தொடங்க, முதலீட்டாளர்கள் வரிசையில் நிற்பார்கள்' என்று கூறினார்.

சட்டசபையில் இன்று தொழில்துறை மற்றும் சிறு-குறு நடுத்தர தொழில் துறை ஆகியவற்றின் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடந்தது.

Jayalalithaa calls My dear young man in TRB Raja

முன்னதாக, திமுக எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா ( டி.ஆர்.பாலுவின் மகன் ) இன்று சட்டசபையில் முதல்முறையாக பேசப் போவதை முன்னிட்டு எதிர்க்கட்சித்தலைவரும் திமுக பொருளாளருமான முக.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

இன்றைய தினம் சட்டசபையில் தமிழகத்தில் இருந்து தொழிற்சாலைகள் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டதாக டி.ஆர்.பி.ராஜா கூறினார். இதற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார். இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

டி.ஆர்.பி.ராஜா பேசும் போது, நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை முதல்வர் புரிந்து கொள்வார் என்று உறுதியாக நம்புகிறேன். ஆனால் 2 அமைச்சர்கள் குறைந்தபட்ச ஆதார விலை பற்றி இங்கு பேசுகிறார்கள் என்றார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, மை டியர் யங் மேன், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கு முழுமையாக தெரியும். தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் போய் விட்டதாக நீங்கள் சொன்னதற்கு நான் பதில் அளித்துள்ளேன் என்று கூறினார்.

அதற்கு டி.ஆர்.பி.ராஜா, உங்கள் கருத்தில் இருந்து நான் மீண்டும் மாறுபடுகிறேன். தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிட்டன என்ற சந்தேகங்கள் கிளம்பி உள்ளன என்று தான் நான் கூறினேன் என்றார்.

அதற்கு அர்த்தம் என்ன வென்றால், இந்த சந்தையில் இந்த சந்தேகங்கள் நிலவுகின்றன என்றுதான் கூறினேன். அது உங்களுக்கு சரியாக புரியவில்லை என்று நினைக்கிறேன். எனவேதான் அது பற்றி நான் விளக்கம் அளித்தேன் என்று கூறினார்.

மீண்டும் முதல்வர் ஜெயலலிதா, மை டியர் யங் மேன், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கு மிகவும் நன்றாக தெரிகிறது. நீங்கள் வார்த்தை ஜாலத்தோடு விளையாடுகிறீர்கள். இந்த விளையாட்டெல்லாம் என்னிடம் நடக்காது என்றார்.

தொடர்ந்து அவர், நீங்கள் என்ன சொன்னீர்கள், தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் போய் விட்டதாக கூறினீர்கள். அதில் உண்மை இல்லை என்று திரும்ப, திரும்ப நான் தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.

உடனே டி.ஆர்.பி.ராஜா, சரி... மேடம். நீங்கள் புரிந்து கொண்டால் சரிதான். எத்தனை தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுள்ளன என்பது பற்றி நான் விரைவில் சொல்கிறேன். அதன் பிறகு நாம் இதுபற்றி பேசலாம் என்று கூறினார்.

அதற்கு முதல்வர் ஜெயலலிதா, உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, தமிழ் நாட்டிலிருந்து வேறு எங்கும் செல்லாத தொழிற்சாலைகள் பற்றி, சென்றதாக சொல்லப்படுகிறதே என்று கூறியுள்ளார்.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலை, ஏன் இங்கு நடத்தப்படாமல், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டிக்கு சென்றுவிட்டது, ஏன் அங்கு துவங்கப்பட்டது என்று விளக்கம் கூற தயாரா என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

பதில் சொல்லத் தெரியாத வி‌ஷயங்களுக்கெல்லாம், நான் அதற்குள் போக விரும்பவில்லை என்று சொல்கிறார். இந்தப் பிரச்சினையை ஆரம்பித்ததே உறுப்பினர்தான் என்றும் ஜெயலலிதா கூறினார்.

இங்கிருந்து செல்லாத தொழிற்சாலைகள் ஆந்திராவிற்கும், கர்நாடகத்திற்கும் சென்றதாக, பேசப்படுகிறது, கூறப்படுகிறது என்றார். உண்மையாகவே இங்கிருந்து ஆந்திராவிற்கு சென்ற, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்ற, ஒரு தொழிற்சாலை ஏன் சென்றது?

மெட்ரோ ரயில் இங்கே ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்காக பெட்டிகளை தயாரிக்கப்பட வேண்டிய தொழிற்சாலை இங்கே துவங்கப்படாமல், அது ஏன் ஆந்திராவிற்கு சென்றது? ஏன் அங்கே துவங்கப்பட்டது என்று உறுப்பினர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது என்று பேசினார்.

மெட்ரோ ரயில் திட்டமே மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஒப்பந்தம் செய்துகொண்டு நடத்துகின்ற ஒரு திட்டம். இதற்கு ஆரம்பத்தில் பிள்ளையார் சுழி போட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். அப்பொழுது அதற்கான மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை இங்கே தொடங்குவதாகத்தான் திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இங்கே துவங்கப்படாமல், அது ஆந்திராவுக்கு சென்றுவிட்டது. ஆகவே, இங்கே ஏன் துவங்கப்படவில்லை என்று கேட்டதற்கு, இது மத்திய அரசின் திட்டம் என்றால், இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் அல்ல. மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் சேர்ந்து நடத்துகின்ற ஒரு திட்டம்தான் இது.

கேட்கப்பட்ட கேள்வி, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஏன் ஆந்திராவுக்கு சென்றது? தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஏன் சென்றது? என்றுதான் கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொல்லாமல், உறுப்பினர் வேறு புள்ளிவிவரங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார் ஜெயலலிதா. சட்டசபையில் இவ்வாறு காரசார விவாதம் நடைபெற்றது.

திமுக உறுப்பினர் ராஜா பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக உறுப்பினர் ராஜா பேசுவதற்கு கூடுதல் நேரம் ஒதுக்க கோரியும் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட திமுகவினருக்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.

English summary
Speaker Dhanapal expunged the speech of DMK Member TRB Raja from the records.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X