For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருலோகசந்தர் மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பு: ஜெயலலிதா இரங்கல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பழம்பெரும் திரைப்பட இயக்குனர் திருலோகசந்தர் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

 jayalalithaa Mourning Legendary director AC Thirulogachander

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (15.6.2016) சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

திரைப்பட இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர் திரையுலகம் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் ஆவார். இவர் நன்கு படித்த பண்பாளர். நாகரிகமான மனிதர். ஏ.சி.திருலோகச்சந்தர் படப்பிடிப்பிற்கு வரும் ஒவ்வொரு காட்சியையும் திட்டமிட்டு திறம்பட இயக்கும் பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவர் ஆவார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "அன்பே வா", நான் நடித்த "எங்கிருந்தோ வந்தாள்", "தர்மம் எங்கே", "எங்க மாமா" மற்றும் "தெய்வ மகன்" போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் நான் நடித்த "தெய்வமகன்" ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்ற சிறப்பினை பெற்றது.

இவருடன் பணியாற்றுவது திரைப்படத் துறையினருக்கு மிகச் சிறந்த அனுபவத்தைப் பெற்று தந்தது. இவருடைய உதவி இயக்குநர்கள் பலர் வெற்றி இயக்குநர்களாக திகழ்ந்ததற்கு இவரிடம் பெற்ற பயிற்சி மற்றும் அனுபவமே முக்கிய காரணம் ஆகும்.

ஏ.சி.திருலோகச்சந்தர் பெண்களை மையப்படுத்தி திரைப்படங்களை இயக்குவதிலும், கதாபாத்திரங்களின் குண இயல்புகளை தனக்கே உரிய சிறப்பான பாணியில் சித்தரிப்பதிலும் வல்லவர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான ஏ.சி.திருலோகச்சந்தர் மறைவு திரைப்படத் துறையினருக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X