For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களுக்காக 20 மணிநேரம் உழைத்த ஜெயலலிதா.... நம்பிக்கை குட்டிக்கதைகள்

நம்பிக்கையைத் துணை கொண்டு நீங்கள் செயல்பட்டால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசும் போது சில குட்டிக்கதைகளை கூறுவார். அவர் மறைந்து 30 நாட்கள் ஆனதை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக அவர் கூறிய கதைகள் பதிவிடப்படுகிறது.

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டுத் தேவைக்காக, தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தண்ணீர் எடுத்து வர இரண்டு பானைகளை வைத்திருந்தார்.

Jayalalithaa's short story

அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்கவிட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வார். இரண்டு பானைகளில், ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் போது, ஓட்டையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

ஓட்டையில்லாத பானை, ஓட்டையுள்ள பானையைப் பார்த்து, எப்போதும் அதன் குறையை பற்றி கிண்டல் செய்யும். இப்படியே பல நாட்கள் கடந்துவிட்டன. ஒரு நாள் ஓட்டையுள்ள பானை, தன் எஜமானரிடம் சென்று, "ஐயா, என் குறையை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

எனக்குள்ள குறையால் வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டது.

இதற்குப் பதில் அளித்த விவசாயி, "பானையே நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகளை கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால் தான், வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து இருந்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து, எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன்.

மீதமுள்ள பூக்களை விற்று பணம் சம்பாதிக்கிறேன்" என்றார். இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்திவிட்டது. தாழ்வு மனப்பான்மையை விலக்கிவிட்டு துணிச்சலுடன் நீங்கள் செயல்பட்டால், உங்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. வலிமை, வாழ்வை வானளவிற்கு உயர்த்தும். நம்பிக்கையைத் துணை கொண்டு நீங்கள் செயல்பட்டால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்றார் ஜெயலலிதா.

உழைப்பே உயர்வுக்கு வழி...

இதேபோல அவர் சொன்ன மற்றொரு கதையில் உழைப்பு என்னும் மரத்தின் வேர்கள், கசப்பாக இருக்கலாம்; ஆனால், அதன் கனிகள் இனிப்பானவை என்று கூறினார்.

ஒரு மரத்தின் அடியில்... பகல் நேரத்தில், ஓர் இளைஞன் காலை நீட்டி... கைகளைப் பரப்பிப் படுத்துக் கிடந்தான்.

அந்தப் பக்கம் வந்த ஒரு பெரியவர்... அவனைப் பார்த்து, தம்பி, இந்த வயதிலே உனக்கு இத்தனை சோம்பலா... உழைக்க வேண்டிய வயதல்லவா இது என்றார்.

அதற்கு இளைஞன், ஏன் உழைக்க வேண்டும் என திருப்பிக் கேட்டான்.

பணத்துக்காக... என்றார் அந்தப் பெரியவர். பணம் எதற்காக என்றான் இளைஞன்.

வீடு, கார் வாங்கலாம்; திருமணம் செய்யலாம்; குழந்தை குட்டிகளோடு மகிழ்ச்சியாய் இருக்கலாம் என்றார் பெரியவர்.
பிறகு.. என்றான் இளைஞன். குழந்தைகளைப் படிக்க வைக்கலாம்; வேலை வாங்கித் தரலாம்; நல்ல சம்பளம் வாங்கச் செய்யலாம் என்றார் பெரியவர்.

அதற்குப் பிறகு? என்று கேட்டான் இளைஞன் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கலாம்; பேரக் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றார் பெரியவர்.

இளைஞன் விடவில்லை. அதற்கு பிறகு என்ன என்றான். ஓய்வாக இருக்கலாம்; நிம்மதியாகக் கால்களை நீட்டித் தூங்கலாம் என்றார் பெரியவர்.

உடனே அந்த இளைஞன், அதைத்தானே... இப்போது செய்துகொண்டு இருக்கிறேன். சென்று வாருங்கள் என்றானாம்.

எனக்கு நன்றாக வேண்டும். வாயை மூடிக்கொண்டு வந்தவழியைப் பார்த்தபடியே போயிருக்கலாம் என்று புலம்பியபடியே போனாராம், அந்தப் பெரியவர்.

இந்தக் கதையிலிருந்து நமக்குத் தெரிவது என்ன? நம் நாட்டு மக்களுக்கு என்ன குறை... அறிவில் குறையா? இல்லை, ஆற்றலில் குறையா? இல்லவே இல்லை. அப்புறம் என்ன குறை? ஊக்கம் இல்லை என்பது குறை... உழைப்பு போதாது என்பது குறை.

வளர்கின்ற நாடுகளில் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளிலும் மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். உழைப்புக்கு மரியாதை கொடுக்கிறது அந்தச் சமுதாயம். அங்கே பணக்காரர்களும் கடுமையாக உழைக்கிறார்கள். தொழிலதிபர்களும் நேரம் பார்க்காமல் உழைக்கிறார்கள். வளர்ந்த நாடுகளின் வெற்றிக்குக் காரணம் உழைப்புதான். உழைப்பு என்னும் மரத்தின் வேர்கள், கசப்பாக இருக்கலாம்; ஆனால், அதன் கனிகள் இனிப்பானவை. உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்.

நான் நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைக்கிறேன் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? என்று கேட்டார் ஜெயலலிதா. தொடர்ந்து ஓய்வின்றி உழைத்ததால்தான் என்னவோ தெரியவில்லை... நம்மை விட்டு மறைந்து விட்டார் ஜெயலலிதா.

English summary
Jayalalitha told short story for Tamil Nadu people. work hard will win, Jayalalthaa worked 20 hours daily for Tamil Nadu people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X