• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜனகல்யாண், ஆன்மீக கட்சி, ரியல் எஸ்டேட்... ஜெயேந்திரர் காலத்தில் விஸ்வரூபமெடுத்த சங்கர மடம்

By Shankar
|

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் தலைமை பீடாதிபதி ஜெயேந்திரர் இன்று மரணமடைந்துவிட்டார். அவருக்கு வயது 82.

காஞ்சிபுரத்தின் இளம் பீடாதிபதியாக ஜெயேந்திரர் பதவியேற்றதிலிருந்து சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை.

தஞ்சை மாவட்டம் இருள்நீக்கி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயேந்திரரின் உண்மையான பெயர் எம் சுப்பிரமணியம். 1954-ம் ஆண்டு மறைந்த மகாபெரியவர் சந்திரசேகரேந்திரரால் இளம் மடாதிபதியாக பட்டம் சூட்டப்பட்டார். சங்கரமடத்தின் பொறுப்பை ஜெயேந்திரர் ஏற்றபோது அவருக்கு வயது 19.

Jayendra and controversies

வழக்கமான சங்கர மட துறவிகளின் வாழ்க்கை முறை, செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு செயல்பட நினைத்தவர் ஜெயேந்திரர். காஞ்சி மடத்தில் தலை தூக்கிய கருத்து மோதல்களால், 1987-ல் தன் கையிலிருந்த தண்டம் என்கிற துறவுக் கோலை தூக்கிப் போட்டுவிட்டு காணாமல் போனார் ஜெயேந்திரர். அன்றைக்கு மிகுந்த பரபரப்பை உண்டாக்கிய சம்பவம் இது. மூன்று நாளைக்குப் பிறகு தலைக்காவேரி என்ற இடத்தில் அவரைக் கண்டுபிடித்தனர்.

இந்த தலைமறைவு சம்பவத்தின் உண்மையான பின்னணி குறித்து இன்று வரை தெளிவான பதில் இல்லை. மடத்தின் அதிகாரப் போட்டி, பெரியவருக்கும் ஜெயேந்திரருக்கும் கருத்து மோதல் என்றெல்லாம் கூறப்பட்டது. ஜெயேந்திரரின் இல்வாழ்வு நாட்டமும் ஒரு காரணம் என்று சில செய்திகள் உலாவின. ஆனால் யாருக்கும் தெளிவான பதில் கிடைக்கவே இல்லை.

மகாபெரியவர் 1994-ம் ஆண்டு மறைந்த பிறகு, சமூக நோக்கில் ஜெயேந்திரர் தொடங்கிய அமைப்பு ஜன் கல்யாண். இந்த அமைப்பு அரசியல் நோக்கமற்றது என்று கூறப்பட்டாலும், ஒரு அரசியல் கட்சிக்குரிய லட்சணங்களுடனே தொடங்கப்பட்டது. பல சர்ச்சைகளைச் சம்பாதித்தது. ஜெயேந்திரர் இந்த அமைப்பின் சார்பாக பல குடிசைப் பகுதிகளுக்கெல்லாம் விசிட் செய்தது, இந்து அமைப்புகளின் விமர்சனங்களைச் சம்பாதித்தது. ஜன் கல்யாண் பெயரில் சிலர் ரவுடித்தனம் பண்ணுவதாகவும் சர்ச்சை கிளம்ப, தோன்றிய வேகத்தில் காணாமல் போனது ஜனகல்யாண்.

அதன் பிறகும் கூட ஜெயேந்திரர் மீதான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் தொடர்ந்தபடி இருந்தன. ஸ்ரீமடத்துக்கு சொத்து சேர்ப்பதில், இதற்கு முன் இருந்த எந்த மடாதிபதியையும் விட அதிக தீவிரம் காட்டியவர் ஜெயேந்திரர். இவர் காலத்தில்தான் மடத்தின் சார்பில் ஏராளமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. புதுப் புது ரியல் எஸ்டேட் ஏரியாக்கள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனியே ஸ்ரீமடம்தான் என்று சொல்லும் அளவுக்கு அதில் ஜெயேந்திரர் ஈடுபாடு காட்டினார். அவரது பெயரிலேயே பல இடங்களில் புதிய காலனிகள் உருவாகின.

இதையெல்லாம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சங்கரராமன் என்பவர். இவர் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் மேலாளர்.

2002-ம் ஆண்டு சங்கர மடத்தின் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து தாக்கப்பட்டார்.

2004-ம் ஆண்டு சங்கரராமன் வரதராஜப் பெருமாள் கோயிலிருந் வைத்தே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த இரு சம்பவங்களிலுமே ஜெயேந்திரர்தான் முதல் குற்றவாளி எனத் தீர்மானித்து அவரை அன்றைய ஜெயலலிதா அரசு துணிச்சலாகக் கைது செய்தது. இது தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஜெயேந்திரருக்கு மிக நெருக்கமான ரியல் எஸ்டேட் அதிபர், காண்டிராக்டர் எல்லாம் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

இதே காலகட்டத்தில் ஜெயேந்திரர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக எழுத்தாளர் அனுராதா ரமணன் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள் அதிரவைத்தன.

ஆனால் தனது மத ரீதியான செல்வாக்கு மற்றும் பல காரணங்களால் ஜெயேந்திரர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட்டார் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. 2011-ம் ஆண்டு ஜெயேந்திரர் ஒரு தனிக் கட்சியும் தொடங்கினார். அந்தக் கட்சிக்குப் பெயர் தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி.

சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து 2013-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார் ஜெயேந்திரர். இதனைக் கேள்விப்பட்ட சங்கரராமனின் மகன், "என் தந்தை தன்னைத் தானே வெட்டிக் கொன்று கொண்டார்.. வேறு என்ன சொல்வது," என்று வேதனையுடன் கூறினார்.

2014-ம் ஆண்டு பாஜக தலைமையில் அரசமைந்து, மோடி பிரதமரான பிறகு சங்கர மடத்தின் செல்வாக்கு மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது.

2016-ம் ஆண்டு ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கிலிருந்தும் விடுவிக்கப்பட்டார் ஜெயேந்திரர்.

ஜெயேந்திரர் சர்க்கரை நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சர்க்கரை கட்டுக்குள்ளேயே வரவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக பெரும் போராட்டம். சில தினங்களுக்கு முன்பு நோய் தீவிரமடைந்தது. போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர், சில தினங்களுக்கு முன்புதான் சங்கர மடத்துக்குத் திரும்பினார். இன்று காலை மரணத்தைத் தழுவினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Here is the compilation of Kanchi Jayendrar and controversies sorrounding him.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more